நிலக்கடலையில் பல்வேறு வகையான இலைப் புள்ளிகள் தோன்றும். ஆனாலும், டிக்கா இலைப்புள்ளி நோயே நிலக்கடலை பயிராகும் பகுதிகளில் பரவலாக உள்ளது.
இதில், முன் டிக்கா இலைப்புள்ளி, பின் டிக்கா இலைப்புள்ளி என்று இரு வகைகள் உண்டு.
முன் டிக்கா இலைப்புள்ளி செர்கோஸ் போரா பெர்சொ னேட்டா என்னும் பூஞ்சையாலும்,
பின் டிக்கா இலைப்புள்ளி செர்கோஸ் போரா அராக்கி டிக்கோலா என்னும் பூஞ்சையாலும் ஏற்படும்.
முன் டிக்கா நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தோன்றும்.
முதலில் இலைகளில் கருவட்டப் புள்ளிகள் சிறியதாகத் தோன்றும். பிறகு, இந்தப் புள்ளிகள் விரிந்து 3-8 மி.மீ. விட்டமுள்ள புள்ளிகளாக மாறும்.
ஒரே இலையில் பல புள்ளிகள் தோன்றி இலையைக் கருகச் செய்து விடும்.
புள்ளிகளின் மேற்பரப்பு கரும் பழுப்பாக, மஞ்சள் வளையத்துடன் இருக்கும்.
இப்புள்ளிகள் பெரும்பாலும் இலைகளில் தோன்றினாலும், இலைக்காம்பு, தண்டு மற்றும் பூக்காம்பிலும் காணப்படும்.
பின் டிக்கா நோய், விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு தோன்றும். இந்தப் புள்ளிகள் கறுப்பு நிறத்துல் இலைகளின் அடியில் தோன்றும்.
புள்ளிகள் வட்டமாக அல்லது ஒழுங்கற்ற வடிவில் இருக்கும். இந்தப் புள்ளிகளில் தோன்றும் கொடினியா வித்துகள், காற்றின் மூலம் பரவும்.
கட்டுப்படுத்துதல்
நோயினால் நிலத்தில் விழுந்து கிடக்கும் இலைகள் மற்றும் பிற பாகங்களைச் சேகரித்து எரித்துவிட வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டன் அல்லது 4 கிராம் மாங்கோசெப் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்து,
விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு கலந்து வைத்து விதைக்க வேண்டும்.
தொகுப்பு: பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!