எண்ணெய் வித்துப் பயிர்களில் ஆமணக்கு மிகவும் முக்கியமானது. இது, இந்தியா, சீனா, பிரேசில், இரஷ்யா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப் படுகிறது.
இந்தியாவில் சுமார் 11.48 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகிறது. இராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் அதிகளவில் விளைகிறது.
இந்தியாவில் சராசரி உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,666 கிலோ ஆகும். தமிழகத்தில் இது பெரும்பாலும் ஊடுபயிராக, வரப்புப் பயிராகப் பயிரிடப் படுகிறது.
தற்போது நீண்டகால இரகங்கள் தான் பயிரிடப் படுகின்றன.
விதைக்கும் பருவம்
தமிழ் நாட்டில் மானாவாரியில் ஆமணக்கைப் பயிரிட ஆடிப் பட்டம் சிறந்தது. இறவையில் பயிரிட, வைகாசி மற்றும் கார்த்திகைப் பட்டம் உகந்தது.
இரகங்கள்
ஒய்.ஆர்.சி.எச்.1: இது, கலப்பு இரகம். வயது 150-160 நாட்கள். மானாவாரியில் எக்டருக்கு 2,000 கிலோ, இறவையில் 3,000 கிலோ மகசூல் கிடைக்கும்.
இதில், 49 சதம் எண்ணெய் இருக்கும். இதன் சிறப்பு, காய்கள் முள்ளுடன் இருக்கும். வெடிக்காது. தத்துப் பூச்சிக்கு எதிர்ப்புத் தன்மை மிக்கது.
ஒய்.ஆர்.சி.எச்.2: இது, கலப்பு இரகம். வயது 180 நாட்கள். மானாவாரியில் எக்டருக்கு 2,089 கிலோ, இறவையில் 3,200 கிலோ மகசூல் கிடைக்கும்.
இதில், 49 சதம் எண்ணெய் இருக்கும். இதன் சிறப்பு, வாடல் நோய் மற்றும் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் தன்மை மிக்கது.
ஒய்.டி.பி.1: இந்த இரகத்தில் 115-120 நாட்களில் முதல் அறுவடை எடுக்கலாம். இதன் சிறப்பு, சாயாது. வரப்புப் பயிருக்கு ஏற்றது. இரண்டு ஆண்டுகள் வரை மகசூலைத் தரும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 2-3 முறை நாட்டுக் கலப்பை அல்லது இரும்புக் கலப்பையால் உழ வேண்டும்.
கடைசி உழவின் போது, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் மற்றும் 100 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும்.
விதை நேர்த்தியும் விதைப்பும்
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டசிம் வீதம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.
மானாவாரியில் பயிரிட, விதைப்புக்கு மூன்று மணி நேரத்துக்கு முன், விதைகளை ஒரு சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் நேர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விதைகளை 4 செ.மீ. ஆழத்தில் நட வேண்டும்.
சாதா இரகங்களை மானாவாரியில் வரிசைக்கு வரிசை 90×60 செ.மீ. இடைவெளியிலும்,
இறவையில் வரிசைக்கு வரிசை 90×45 செ.மீ. இடைவெளியிலும் நட வேண்டும்.
கலப்பு இரகங்களை, மானாவாரியில் 120×90 செ.மீ இடைவெளியிலும், இறவையில் 150×120 செ.மீ. இடைவெளியிலும் நட வேண்டும்.
பாடு நிரப்புதல்
விதைத்த 15 ஆம் நாள் பாடு நிரப்ப வேண்டும். குழிக்கு ஒரு செடி வீதம் பராமரிக்க வேண்டும். முளைக்காத இடங்களில் விதைகளை நடவ வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட செடிகள் உள்ள குழிகளில் தரமான செடிகளை விட்டு விட்டு, பூச்சிகள் தாக்கிய, வளர்ச்சிக் குன்றிய செடிகளை நீக்கி விட வேண்டும்.
சத்து மேலாண்மை
எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் வீதம் இட வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்.
மண்ணை ஆய்வு செய்யாத நிலையில், இங்கே உள்ளபடி உரங்களை இட வேண்டும்.
மானாவாரி; இரகம்: தழைச்சத்து 45 கிலோ, மணிச்சத்து 15 கிலோ, சாம்பல் சத்து 15 கிலோ.
கலப்பினம்: தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ.
இறவை: இரகம்: தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ.
கலப்பினம்: தழைச்சத்து 90 கிலோ, மணிச்சத்து 45 கிலோ, சாம்பல் சத்து 45 கிலோ.
மானாவாரியில், மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். மேலும், தழைச்சத்து மற்றும் சம்பல் சத்தில் பாதியை அடியுரமாக வேண்டும்.
மீதியை ஈரப்பதம் உள்ள போது, 1-2 தடவை பிரித்து, மேலுரமாக இட வேண்டும்.
இறவையில், மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். மேலும், தழைச்சத்து மற்றும் சம்பல் சத்தில் பாதியை அடியுரமாக இட வேண்டும்.
மீதியை இரண்டு பங்காகப் பிரித்து 30 மற்றும் 60 நாளில் மேலுரமாக இட வேண்டும்.
மேலும், எக்டருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட், 20 கிலோ பெரஸ் சல்பேட் வீதம் இட வேண்டும்.
களை நிர்வாகம்
எக்டருக்கு 2 லிட்டர் ப்ளுக்ளோரலின் வீதம் எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து, களைகள் முளைப்பதற்கு முன் தெளிக்க வேண்டும்.
அடுத்து, விதைகளை நட்ட 20 மற்றும் 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
ஊடுபயிர்
ஓரளவு பாசன வசதியுள்ள பகுதிகளில், நிலக்கடலை மற்றும் ஆமணக்கை ஆறுக்கு ஒரு வரிசை வீதம் நடவு செய்து அதிக மகசூலைப் பெறலாம்.
பருவமழை தாமதமாகப் பெய்யும் பகுதிகளில், உளுந்து அல்லது பாசிப்பயறை 2:1 வீதம் கலந்து பயிரிடலாம்.
இறவையில், ஆமணக்கை வெங்காயத்தோடு 2:1 வீதம் பயிரிட்டால் கூடுதல் மகசூலைப் பெறலாம்.
தாக்கும் பூச்சிகள்
ஆமணக்குச் சுருள் பூச்சி: இதன் புழு சிறிதாக, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்துப்பூச்சி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இந்தப் புழு இலையை உண்டு சேதம் செய்யும். அதனால், இலைகள் காய்ந்து கீழே விழுந்து விடும்.
இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்த, 5 சத வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளிக்கலாம்.
அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி. ட்ரைக்கோபோஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.
ஆமணக்குக் காவடிப்புழு: இதன் தலை கறுப்பாக இருக்கும். உடலில் சிவப்புப் புள்ளிகள் இருக்கும். இது, பயிரை உண்டு சேதம் செய்யும்.
இதைக் கட்டுப்படுத்த, 5 சத வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. குளோரிபைரிபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.
தாக்கும் நோய்கள்
வாடல் நோய்: இதனால் பாதிக்கப்பட்ட இலைகள் மடங்கித் தொங்கும். செடியின் நுனியில் மட்டும் இலை இருக்கும்.
செடிகள் வாடியும், இயல்பான நிலையில் இருந்து மாறியும் இருக்கும். தண்டுப் பகுதி பழுப்பு நிறத்தில், வெண் பூசணத்துடன் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த, 2.5 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி மருந்தை தொழுவுரத்தில் கலந்து 15 நாட்கள் மூடி வைத்து எடுத்து,
இரண்டு கரைகள் அல்லது கால்களுக்கு இடையில் போட வேண்டும்.
நாற்றுக் கருகல் நோய்: இதனால் தாக்கப்பட்ட நாற்றுகள் இறந்து விடும். இலையின் இரண்டு பக்கத்திலும் வெளிர் பச்சை நிறம் திட்டுத் திட்டாகப் பரவியிருக்கும்.
இது, இலைக்காம்பு வரை நீண்டிருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். ஈரப்பதமான நிலையில் வெண் பூசணம் இலையின் அடிப்புறத்தில் காணப்படும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த, நிலத்தில் நீர்த் தேங்காத வகையில், வடிகால் வசதி இருக்க வேண்டும்.
மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
பயிரின் வயதைக் கணக்கில் கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துகள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்த காய்க் கொத்துகளை நிழலில் குவித்து வைக்காமல் வெய்யிலில் உலர்த்த வேண்டும்.
நன்கு காய்ந்த பிறகு குச்சியால் அடித்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
விதைப் பிரிப்புக் கருவி மூலமும் விதைகளைப் பிரித்து எடுக்கலாம்.
பொ.மகேஸ்வரன், எம்.அருண்ராஜ், சி.சபரிநாதன், வேளாண்மை அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!