பயிர்ப் பாதுகாப்பில் இரசாயன மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தி வந்த விவசாயிகள், இப்போது உயிரியல் முறை பயிர்ப் பாதுகாப்பில் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இம்முறையில், உயிர் எதிர்க்கொல்லிகளின் பங்கு மிக முக்கியமானது. பூசணம் மற்றும் பாக்டீரியா என்னும் இரண்டு வகை உயிர் எதிர்க்கொல்லிகளில், பாக்டீரிய வகையைச் சேர்ந்த சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அதிகளவில் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது.
இது, சிக்கனமான முறை மற்றும் எளிய முறையாகும். விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண நோய்களைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும். பயிர்களில் நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டும். மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்திப் பல மடங்காகப் பெருகி, பயிர்களுக்கு நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பைத் தரும்.
பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்பட்டு மகசூல் பெருக வழி செய்யும். இதைப் பயன்படுத்துவதால், நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கு தீமை எதுவும் நேர்வதில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. பூச்சி மற்றும் நோய்க் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை.
எனவே, நெல் சாகுபடி விவசாயிகள், ஒரு கிலோ நெல் விதைக்குப் பத்து கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்து, தேவையான நீரில் கலந்து, இரவில் ஊற வைத்து, காலையில் நீரை வடித்து விட்டு, முளைக்கட்டி விதைக்க வேண்டும். வடித்த நீரை நாற்றங்காலில் ஊற்றினால் கூடுதல் பயன் கிடைக்கும்.
ஒரு கிலோ சூடோமோனாசை பத்துச் சதுர மீட்டர் நாற்றங்கால் நீரில் கலந்து, அதில் நாற்றுகளை அரைமணி நேரம் ஊற வைத்து நடலாம். அதிக நேரம் ஊற வைத்தால் அதன் செயல் திறன் இன்னும் கூடுதலாகவே இருக்கும். மேலும், நடவுக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, நன்கு மட்கிய எரு அல்லது மணலில் கலந்து வயலில் இடலாம்.
45 நாள் நெற்பயிரில், நோயின் தீவிரத்தைப் பொறுத்து, பத்து நாட்கள் இடைவெளியில் 2-3 முறை, ஒரு லிட்டர் நீருக்கு ஐந்து கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து பயிரில் தெளிக்கலாம்.
இதைப்போல, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, பயறுவகைப் பயிர்களில், வாடல் நோய் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்குப் பத்து கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்து நன்கு கலந்து விதைக்கலாம். மேலும், விதைப்பதற்கு முன், ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாசை, இருபது கிலோ மட்கிய எரு அல்லது மணலில் கலந்து நிலத்தில் இடலாம்.
காய்கறிப் பயிர்களில் வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, நடவுக்கு முன், ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, இருபது கிலோ மட்கிய எரு அல்லது மணலில் கலந்து விதைக்க வேண்டும்.
வாழையில் வாடல் நோய் மற்றும் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, வாழைக் கன்றுகளில் உள்ள வேர்களை அகற்றி விட்டு, அவற்றை ஈரக் களிமண் கலவையில் நனைத்து, கிழங்குக்குப் பத்து கிராம் சூடோமோனாஸ் வீதம் தெளித்து நட வேண்டும். மேலும், நடவுக்கு முன், ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, இருபது கிலோ மட்கிய எரு அல்லது மணலில் கலந்து நிலத்தில் இடலாம்.
மாம்பழத்தைத் தாக்கும் ஆந்த்ராக்னோஸ் மற்றும் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, காய்கள் பிடித்த 15 நாட்களில் 0.5 சத சூடோமோனாஸ் கலவையைத் தெளிக்கலாம். இப்படி, முப்பது நாட்களுக்கு ஒருமுறை என, அறுவடை வரை தெளிக்க வேண்டும்.
இதைப் பயன்படுத்துவதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்களுடன் சூடோமோனாசைக் கலக்கக் கூடாது. மற்ற உயிர் உரங்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
முனைவர் இராஜா. ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!