குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர் kuthiraivali

குறுந்தானியப் பயிர்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சராசரியாக ஓராண்டில் 2.5 மில்லியன் எக்டரில் நாம் இந்த குறுந்தானியப் பயிர்களை சாகுபடி செய்து 2.4 மில்லியன் டன் மகசூலைப் பெறுகிறோம். இவற்றின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,500 கிலோவாகும்.

குறுந் தானியங்கள் என்பவை, பயிரிடப்படும் பரப்பளவு, மகசூல் ஆகியவற்றை மிகவும் குறைந்தளவில் கொண்ட தானிய வகைகள் ஆகும். அவற்றுள், தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற பயிர்கள் அடங்கும்.

இவற்றின் முக்கியத்துவம் விவசாயிகள் மத்தியில், சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களைக் காட்டிலும் குறைந்தே காணப்படுகிறது. இவற்றின் சாகுபடிப் பரப்பளவு குறைந்து வந்தாலும், இந்தத் தானியச் சத்துகளின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

தினை

இது, மலைவாழ் மக்களால் பெரிதும் விரும்பிப் பயிரிடப்படும் குறுந் தானியப் பயிராகும். தேனும், தினைமாவும் கலந்து உணவாகக் கொள்ளும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிகிறோம்.

இது, மிகக் கடினமான வறட்சியையும் தாங்கி வளரும். மேலும், பல்வேறு மண் வகைகளிலும், வளம் குறைந்த நிலங்களிலும் வளரும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் மானாவாரியில் தான் தினை பயிரிடப்படுகிறது.

குறிப்பாக, கோவை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் தினை மகசூல் எக்டருக்கு 650 கிலோவாகும். சாதாரண இரகங்களைப் பயிரிடுவதே இவ்வளவு குறைந்த மகசூலுக்குக் காரணமாகும்.

எனவே, அதிக மகசூலைத் தரும் இரகங்களை, முறையாகப் பயிரிட்டால், எக்டருக்கு 1,500-2,000 கிலோ மகசூலைப் பெறலாம்.

கோ.(தி)-7 என்னும் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. இதன் வயது 85-90 நாட்கள்.

விளைச்சல் எக்டருக்கு 1,855 கிலோ. புரதம் நிறைந்த இந்த இரகம், குலைநோய், துரு நோய் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.

மேலும், ஏடிஎல்-1 என்னும் இரகத்தையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 2020 ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ளது. இதன் வயது 80-85 நாட்கள். விளைச்சல் எக்டருக்கு 2,115 கிலோவாகும்.

ஒரு பயிரில் 5-7 தூர்களும் நீளமான கதிர்களும் உருவாகும். கவர்ச்சியான நிறம், தோற்றம், மணம், நயம் மற்றும் சுவை மிகுந்த தானியத்தைக் கொண்டது. குருத்துப் பூச்சி, கொள்ளை நோய் மற்றும் துரு நோயைத் தாங்கி வளரும்.

சாமை

இந்தியாவில் 0.5 மில்லியன் எக்டரில், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, ஒடிசா, பீகார், மராட்டியம் ஆகிய பகுதிகளில் விளைகிறது.

தமிழ்நாட்டில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப் படுகிறது. தமிழ் நாட்டில் 48,076 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 33,060 டன் தானியம் உற்பத்தி செய்யப் படுகிறது. எக்டருக்கு 1,030 கிலோ மகசூல் கிடைக்கிறது. இதைச் சோறாகவும், ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் போன்ற அடுமனைப் பொருள்களாகவும் தயாரித்து உண்ணலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.4 என்னும் சாமை இரகத்தை வெளியிட்டு உள்ளது. இதன் வயது 75-80 நாட்கள். எக்டருக்கு 1,890 கிலோ மகசூல் கிடைக்கும். குறுகியகாலப் பயிரான இந்த இரகம், வறட்சியைத் தாங்கி வளர்ந்து உயர் மகசூலைத் தரும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், ஏடிஎல்-1 என்னும் இரகத்தை 2019 ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ளது. இதன் வயது 85-90 நாட்கள் ஆகும். எக்டருக்கு 1,587 கிலோ தானிய மகசூலையும், 3,109 கிலோ தட்டையையும் தரவல்லது.

கதிர் நீளமாக இருக்கும். நல்ல அரவைத் திறன் மற்றும் சத்து மிக்கது. கவர்ச்சியான நிறம், தோற்றம், மணம், மற்றும் சுவை மிகுந்தது. அதிகச் சேதத்தைத் தரக்கூடிய எந்தப் பூச்சியும், நோயும் இதைத் தாக்குவது இல்லை. குருத்துப் பூச்சி, இலையுறை அழுகல் நோய் மற்றும் கரிப்பூட்டை நோயைத் தாங்கி வளரும்.

வரகு

இப்பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். நம் முன்னோர்கள் பஞ்சக் காலத்தில் இப்பயிரை நம்பியே வாழ்ந்து வந்தனர். இதனால் தான், வரகு விதைகளைக் கோபுரக் கலசங்களில் வைத்து வழிபடுகின்றனர்.

இந்த விதைகள் மிக நீண்ட காலச் சேமிப்புக்குப் பிறகும் நன்கு முளைக்கும். மேலும், குறுகிய காலத்தில், மிகக் குறைந்த மழையில் விளைந்து நல்ல மகசூலைத் தரும்.

இது, ஏழைகளின் உணவாகக் கருதப் படுகிறது. ஆனால், இந்தத் தானியத்தின் உமியிலும், இளந் தானியத்திலும் நச்சு வேதிப் பொருள்கள் சில இருப்பதால், நன்கு முதிராத தானியங்களை உண்ணக் கூடாது. உமியை நீக்கியே உண்ண வேண்டும். வரகுணவு உடல் புண்களை ஆற்றும். நுரையீரல் நோய்களை, வயிற்றுப் போக்கைச் சரிப்படுத்தும். உடலைச் சம நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

வரகு சாகுபடி, தென்னிந்தியாவில் தான் அதிகம். இந்தியாவில் 9.08 இலட்சம் எக்டரில் பயிரிடுவதன் மூலம், 3.11 இலட்சம் டன் தானியம் கிடைக்கிறது. மொத்தச் சிறுதானிய உற்பத்தியில் வரகின் பங்கு 31.32% ஆகும். இந்தியாவில் இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 2,774 கிலோவாகும்.

தமிழ்நாட்டில் நீர்த் தேங்காத மணற் பாங்கான நிலங்களில் பயிரிடப் படுகிறது. குறிப்பாக, திருச்சி, கடலூர், வேலூர், இராமநாதபுரம், சேலம், தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விளைகிறது.

துவரை, எள், குசும்பா மற்றும் உளுந்துடன் கலந்து விதைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் 11,435 எக்டரில் விளைவதன் மூலம், 16,330 டன் தானியம் கிடைக்கிறது. இதன் மகசூல் எக்டருக்கு 1,428 கிலோவாகும்.

வரகில் கோ.3 என்னும் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. இதன் வயது 120 நாட்கள். எக்டருக்கு 1,150 கிலோ மகசூலைத் தரும். சாயாத தன்மையை உடையது.

இதைப் போல, இந்தப் பல்கலைக் கழகம் 2021 ஆம் ஆண்டில் ஏடிஎல்-1 என்னும் இரகத்தையும் வெளியிட்டு உள்ளது. இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 2,500 கிலோ மகசூலைத் தரும்.

இலையுறை அழுகல் நோய் மற்றும் கரிப்பூட்டை நோயைத் தாங்கி வளரும். இந்த இரகத்தைக் குருத்து ஈக்கள் தாக்குவது இல்லை. கதிரிலிருந்து எளிதாகத் தானியங்களைப் பிரிக்கலாம்.

உறுதியான தண்டு, சாயாத தன்மை மற்றும் ஒரே நேரத்தில் முதிர்வதால், இயந்திர அறுவடைக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரும். அரவைத் திறன் 54 சதமாகும்.

பனிவரகு

இது, இமயமலைச் சரிவிலிருந்து கன்னியாகுமரி வரை பரவலாக விளைகிறது. மிகக் குறுகிய வயதை உடையது. மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படும்.

இப்பயிர் பல்வேறு மொழிகளில் பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 688 எக்டரில் விளைகிறது. இதன் மகசூல் எக்டருக்கு 1,800 கிலோவாகும்.

கோ.(பி.வி.)5 என்னும் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மூலம் வெளியிட்டு உள்ளது. இதன் வயது 70 நாட்கள். மகசூல் எக்டருக்கு 1,819 கிலோவாகும். தூர்கள் அதிகமாக உருவாகும். தானியம் இள மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இதைப் போல, இந்தப் பல்கலைக் கழகம், ஏடிஎல்-1 என்னும் இரகத்தையும் அண்மையில் வெளியிட்டு உள்ளது. இதன் வயதும் 70 நாட்கள் தான். ஆடிப் பட்டம் மற்றும் புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்றது.

வறட்சி மற்றும் வெப்பத்தைத் தாங்கி வளரும். நீளமான கதிரையும் அதிக மணிகளையும் கொண்டது. ஒரே நேரத்தில் முதிர்வதால், இயந்திர அறுவடைக்கு ஏற்றது. எக்டருக்கு 800-1,000 கிலோ மகசூலைத் தரும்.

குதிரைவாலி

இது, தானியம் மற்றும் தீவனத் தேவைக்காகப் பயிரிடப் படுகிறது. இந்தியாவில் மத்தியப் பிரசேதம், உத்திரப் பிரசேதம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், பீகார் ஆகிய மாநிலங்களில் குறைந்தளவில் பயிரிடப் படுகிறது.

தமிழ்நாட்டில், இராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சுமார் 4,382 எக்டரில் பயிரிடப் படுகிறது. மகசூல் எக்டருக்கு 1,800 முதல் 2,000 கிலோவாகும்.

குதிரைவாலி அரிசி மிகவும் சத்தானது. இதைச் சோறாகச் சமைத்து உண்ணலாம். ரொட்டியும் தயாரிக்கலாம். மலைவாழ் மக்களும், வளமற்ற நிலங்களைக் கொண்ட ஏழை உழவர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது, தீவனம் மற்றும் தானியத்துக்காக, மக்காச் சோளத்துடன் கலந்தும் பயிரிடப் படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.(கே.வி) 2 என்னும் இரகத்தை வெளியிட்டு உள்ளது. இதன் வயது 95 நாட்கள். எக்டருக்கு 2,640 கிலோ மகசூலைத் தரும். குறுகிய வயதுள்ள இந்த இரகம் சாயாமல் இருக்கும்.

இதைப் போல, 2017 ஆம் ஆண்டில், எம்டியு-1 என்னும் இரகத்தையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. இதன் வயது 95-100 நாட்கள்.

மானவாரியில் எக்டருக்கு 1,700 கிலோ, இறவையில் 2,500 கிலோ மகசூலைத் தரும். அதிகளவு மகசூலாக எக்டருக்கு 3,138 கிலோ கிடைத்து உள்ளது.

நூறு கிராம் அரிசியில் 16 மில்லி கிராம் என, அதிகளவில் இரும்புச் சத்து மிக்கது. தண்டுத் துளைப்பான் மற்றும் கதிர்ப் பூஞ்சை நோயைத் தாங்கி வளரும்.


குறுந்தானியப் பயிர் MUTHU RAMU e1629361657342

முனைவர் செ.முத்துராமு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி – 623 707.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading