My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கால்நடைப் பண்ணைத் தொழிலில் ஆகும் மொத்தச் செலவுகளில், 70% க்கு மேல் தீவனத்துக்குச் செலவிடப்படுகிறது.

எனவே, தீவனம் மற்றும் தீவனப் பொருள்களை வாங்கும் போது அல்லது சுயமாகத் தயாரிக்கும் போது, தீவன விரயம் ஏற்படக் கூடாது.

தீவனத்தில் எவ்வித மாற்றத்தைச் செய்தாலும், அதை உண்ணும் மாடுகளில் முதல் அறிகுறியாகப் பாலின் அளவு குறையும்.

எனவே, தரமான தீவனம் மற்றும் தீவனப் பொருள்களைப் பயன்படுத்தினால், தீவன விரயத்தைக் குறைக்கலாம்.

மாடுகளின் வளர்ச்சி, சினைக்காலப் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் உயிர் வாழத் தீவனம் அவசியமாகும்.

தீவன வகைகளும் அவற்றின் தேவையும்

கறவை மாடுகளுக்கு அடர் தீவனம், பசுந்தீவனம், வைக்கோல் போன்ற தீவன வகைகளைக் கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தில் சத்துகள் அதிகமாக இருக்கும்.

பசுந்தீவனம், வைக்கோல் போன்றவற்றில் சத்துகள் குறைவாக இருக்கும்.

மாடுகளுக்கு அடர் தீவனத்தை மட்டும் கொடுத்தால், தேவையான சத்துகள் கிடைக்கும். ஆனால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது.

மேலும், வயிற்றில் சாணம் அடைபட்டு வயிற்று உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

வைக்கோல் மற்றும் புல்லை மட்டும் கொடுத்தால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். ஆனால், தேவையான சத்துகள் கிடைக்காது.

எனவே, கால்நடைகள் நலமாக இருக்க, அவற்றின் உணவில், அடர் தீவனம், பசுந்தீவனம், வைக்கோல் ஆகியன, தினமும் இடம் பெற வேண்டும்.

பசுந்தீவனம்

கினியாப்புல், கொழுக்கட்டைப் புல், கோ.1, கோ.2, கோ.3 ஆகிய கம்பு நேப்பியர் தீவனப்புல், தீவன மக்காச் சோளம் மற்றும் தீவனச் சோளம் போன்ற புல் வகைகள்;

வேலிமசால், குதிரை மசால், முயல் மசால் போன்ற பயறுவகைத் தீவனங்கள் கறவை மாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியமான பசுந் தீவனங்கள் ஆகும்.

இவற்றைப் பயிரிடும் முறைகளைத் தெரிந்து, பயிரிட்டு மாடுகளுக்குக் கொடுப்பது அவசியம்.

பசுந்தீவன வகைகள்: தானியவகைத் தீவனப் பயிர்கள்

தீவன மக்காச்சோளம்: இதை, இறவைப் பயிராக எல்லா மண் வகைகளிலும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

ஏக்கருக்குச் சுமார் 15 கிலோ விதைகள் தேவைப்படும். பார்களை அமைத்து 15 செ.மீ. இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் குழிக்கு ஒரு விதையாக விதைத்க வேண்டும்.

வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

விதைத்த அறுபது நாள் முதல், பூக்கும் பருவம் வரை அறுவடை செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கிப் பசுந்தீவனமாக அளிக்கலாம்.

அல்லது சைலேஜ் என்னும் குழி முறையில் சேமித்து வைத்தும் அளிக்கலாம்.

தீவனச்சோளம்: இதை, இறவை மற்றும் மானாவாரிப் பயிராக விதைக்கலாம்.

பார்கள் அல்லது பாத்திகளை அமைத்து 10-15 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் பார்களின் இருபுறமும் விதைக்கலாம்.

கோ.எப்.எஸ்.29 எனில், ஏக்கருக்கு 5 கிலோ விதைகளும், கோ.எப்.எஸ்.27 எனில், ஏக்கருக்கு 8 கிலோ விதைகளும் தேவைப்படும்.

வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

கோ.எப்.எஸ்.29 இரகத்தை, ஆண்டுக்கு 4-6 முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் மேலுரம் இட வேண்டும்.

விதைத்த 60-75 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். பிறகு 45-50 நாட்களில் அறுவடை செய்யலாம். இதைத் தட்டைப்பயறு அல்லது நரிப்பயறுடன் கலந்தும் விதைக்கலாம்.

பராமரிப்பைப் பொறுத்து ஒரு ஏக்கரில், ஆண்டுக்கு, கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளம் 20 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.எப்.எஸ்.27 மூலம் ஏக்கருக்கு 24 டன் தீவனம் கிடைக்கும். கோ.எப்.எஸ்.29 தீவனத் தண்டு மென்மையாக இருப்பதால், ஆடுகளுக்குத் தீவனமாக இடலாம்.

தீவனக்கம்பு: இதை, இறவை மற்றும் மானாவாரிப் பயிராக இடலாம். பார்கள் அல்லது பாத்திகளை அமைத்து, 10-15 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும். பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும்.

விதைத்த 60-65 நாட்களில் அறுவடை செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு 10-15 டன் தீவனம் கிடைக்கும்.

புல்வகைத் தீவனப் பயிர்கள்

புல்வகைத் தீவனப் பயிர்கள் மூலம் கால்நடைகளுக்கு எரிசக்தி கிடைக்கும். புரதச்சத்து உலர் பொருளாக 6-10 சதவீதம் இருக்கும். ஒட்டுப்புல் வகைகள் அதிக மகசூலைக் கொடுக்கும்.

நேப்பியர்- கம்பு ஒட்டுப்புல்: கோ.3, கோ.4 ஆகிய புல் வகைகளை, இறவைப் பயிராகப் பாசன வசதியுள்ள எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.

50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, வேர்க்கரணை அல்லது தண்டுக் கரணைகளை நட வேண்டும். ஏக்கருக்குச் சுமார் 16,000 கரணைகள் தேவை.

இவற்றைப் பார்களில், 50 செ.மீ. இடைவெளியில், 3-5 செ.மீ. ஆழத்தில் நட்டு, மண்ணில் இறுக்கமாக இருக்கும்படி காலால் மிதித்து விட வேண்டும்.

வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் தேவை. முதல் அறுவடையை 75 நாளிலும், அடுத்தடுத்த அறுவடைகளை 45 நாட்களுக்கு ஒருமுறையும் செய்யலாம்.

ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் மேலுரம் இட வேண்டும். பராமரிப்பைப் பொறுத்து, ஆண்டுக்கு 6-8 முறை அறுவடை செய்வதன் மூலம், ஏக்கருக்கு 140 டன் தீவனம் கிடைக்கும்.

தண்டு மென்மையாக இருக்கும் போதே அறுவடை செய்து கொடுத்தால், கால்நடைகள் புல்லைக் கழிக்காமல் உண்ணும்.

புல் வெட்டும் கருவி மூலம் சிறிய துண்டுகளாக நறுக்கி இட்டால், தீவன விரயம் குறைவதுடன் எளிதில் செரிக்கவும் செய்யும். செம்மறி ஆடுகள் இதை விரும்பி உண்ணும்.

கினியாப்புல்: இதை, இறவையிலும் மழைக் காலத்தில் மானாவாரியிலும் பயிரிடலாம். இளம் கன்றுகளுக்கு ஏற்றது இப்புல்.

பார்களை அமைத்து வேர்க் கரணை அல்லது விதைகள் மூலம் பயிரிடலாம்.

ஏக்கருக்கு 1-2 கிலோ விதைகள் அல்லது 16,000 வேர்க் கரணைகள் தேவைப்படும். பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் மேலுரம் இட வேண்டும். மூன்று அறுவடைக்கு ஒருமுறை காய்ந்த புல் மற்றும் தண்டுகளை அகற்ற வேண்டும்.

முதல் அறுவடையை 60-65 நாளிலும், அடுத்த அறுவடைகளை 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்.

பராமரிப்பைப் பொறுத்து, ஆண்டுக்கு 7-8 அறுவடைகள் மூலம், 70 டன் தீவனம் கிடைக்கும்.

கொழுக்கட்டைப் புல்: இது, குறைந்த மழை, வறட்சி மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கி, மேய்ச்சல் நிலங்களில் வளரக் கூடியது.

ஒருமுறை வளர்ந்து விட்டால் 10-20 ஆண்டுகளுக்குப் பசுந்தீவனத்தைக் கொடுக்கும். சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்களில் நன்கு வளரும்.

பருவமழை தொடங்கியதும் நிலத்தைப் பண்படுத்தி, ஏக்கருக்கு 4-5 கிலோ விதைகளை விதைக்க வேண்டும்.

பிறகு, விதைகள் காற்றில் பறந்து விடாமல் இருக்க, முள்ளால் மண்ணைக் கிளறி விட வேண்டும். அதிக ஆழத்தில் விதைக்கக் கூடாது.

வளரும் பருவத்தில் களையெடுத்து விடுவது நல்லது. மழை தொடர்ந்து பெய்தால், மழைக்காலம் முடியுமுன் நன்கு வளர்ந்து விதைப் பிடித்து விடும்.

இந்த விதைகளை, புல்லிலேயே காய்ந்து விழச்செய்ய வேண்டும்.

இவை அடுத்தாண்டு மழையில் நன்கு முளைக்கும். விதைத்த முதலாண்டில் கால்நடைகளை மேய விடாமல் இருப்பது நல்லது. அல்லது விதைகள் கொட்டிய பிறகு மேய்க்கலாம்.

மழைக் காலத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது, பசுந் தீவனமாக அறுத்து இடலாம். பராமரிப்பைப் பொறுத்து ஆண்டுக்கு 10-15 டன் புல் கிடைக்கும்.

மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்த நினைத்தால், முயல் மசாலையும் கலந்து பயிரிடலாம். அறுவடைக்குப் பின் 10 செ.மீ. வளர்ந்ததும், கால்நடைகளை மேய விடலாம்.

பயறுவகைத் தீவனப் பயிர்கள்

பயறுவகைத் தீவனப் பயிர்களில் புரதச்சத்து அதிகமாக இருக்கும். எனவே, புல்வகை மற்றும் பயறுவகைத் தீவனங்களைக் கலந்து அளித்தால், சரியான வளர்ச்சிக் கிடைக்கும்.

வேலிமசால்: இது, ஒரு பல்லாண்டுப் பயிர். இறவையில் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம். கோ.3 புல்லுடன் கலப்புப் பயிராகவும் பயிரிடலாம்.

பார்களை அமைத்து வரிசையாக விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 4-5 கிலோ விதைகள் தேவை. அதிக ஆழத்தில் விதைக்கக் கூடாது.

கொத்து மூலம் நிலத்தைக் கீறி, விதைகளைத் தூவி, மண்ணை அணைக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். தேவையின் போது களையெடுக்க வேண்டும்.

முதல் அறுவடையை, விதைத்த 75-90 நாட்களிலும், பிறகு, 45 நாட்களுக்கு ஒருமுறையும் அறுவடை செய்யலாம்.

நன்கு பராமரித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வதன் மூலம், ஆண்டுக்கு 50 டன் தீவனம் கிடைக்கும்.

மேலும், 15 நாட்கள் அறுவடை செய்யாமல் விட்டால், செடிகள் காய்த்து விடும். இதனால், விதைகளைச் சேகரித்துக் கொள்ளலாம்.

சரியான பருவத்தில் அறுவடை செய்து கொடுக்கும் போது, கால்நடைகள் தண்டைக் கூடக் கழிக்காமல் உண்ணும்.

நீண்ட நாட்கள் அறுவடை செய்யாமல் விடும் போது, இலைகள் உதிர்ந்து தண்டுகள் மட்டுமே நிற்கும்.

குதிரை மசால்: இதை, இறவையில் தனியாக அல்லது கலப்புப் பயிராக இடலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.

பாத்திகளில் தொடர்ச்சியாக விதைக்க வேண்டும். வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

முதல் அறுவடையை 60 நாளில் செய்யலாம். பிறகு, மேலுரம் இட்டு, மாதம் ஒருமுறை அறுக்கலாம்.

நன்கு பராமரித்தால் ஆண்டுக்குப் பத்து அறுவடை மூலம், 30 டன் தீவனம் கிடைக்கும்.

இரண்டாம் ஆண்டின் மகசூல், முதலாண்டு மகசூலில் 60 சதமாக இருக்கும். அதற்குப் பிறகு, பழைய செடிகளை அழித்து விட்டு, புதிதாகப் பயிரிட வேண்டும்.

முயல் மசால்: இது, வறட்சியைத் தாங்கி எல்லா மண் வகைகளிலும் வளரும். அமிலத் தன்மையுள்ள நிலங்களில் கூடப் பயிரிடலாம்.

கொழுக்கட்டைப் புல்லைப் போல மானாவாரியில் விதைத்து, மழைக்காலம் முடிவதற்குள் ஓரளவு வளர்ந்து காய்க்கச் செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும். அதிக ஆழத்தில் விதைக்கக் கூடாது.

இறவையில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ., செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

இறவைக்கு ஸ்டைலோ ஹெமட்டா இரகமும், மானாவாரிக்கு ஸ்டைலோ ஸ்கேப்ரா இரகமும் ஏற்றவை.

முதல் அறுவடையை விதைத்த 75 நாட்களில் செய்யலாம். பிறகு, வளர்ச்சியைப் பொறுத்து அறுவடை செய்வதன் மூலம், ஆண்டுக்கு 12 டன் தீவனம் கிடைக்கும்.

முயல் மசால் உள்ள நிலத்தை ஆடுகளின் மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தலாம்.

தீவனத் தட்டைப்பயறு: இதை இறவையிலும், மழைக் காலத்தில் மானாவாரியிலும் பயிரிடலாம்.

ஏக்கருக்கு 15-20 கிலோ விதைகள் தேவைப்படும். பார்கள் அல்லது பாத்திகளை அமைத்து விதைக்கலாம்.

நன்கு பராமரிப்பதன் மூலம், விதைத்த 50-55 நாட்களில் பசுந்தீவனமாக அறுவடை செய்யலாம்.

சணப்பு: இது, பெரும்பாலும் இறவையில் பசுந்தாள் உரமாகப் பயன்படும். பூக்கும் போது அறுவடை செய்து அளித்தால், கால்நடைகள் விரும்பி உண்ணும்.

ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் தேவைப்படும். பாத்திகளில் விதைத்து, வாரம் இருமுறை பாசனம் செய்வதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.

எனவே, இதுவரை கூறியுள்ள உத்திகள் மூலம், பல்வகைத் தீவனங்களைப் பயிரிட்டு, கறவை மாடுகளுக்குத் தரலாம். இதனால், அவற்றின் உடல் நலத்தைக் காத்து, அதிக வருவாயை விவசாயிகள் அடையலாம்.


முனைவர் வெ.மீனலோசனி, முனைவர் பி.சி.சக்திவேல், முனைவர் ப. ரவி, முனைவர் அ.இளங்கோ, கால்நடை மருத்துவக் கல்லூரி, தலைவாசல், சேலம் – 636 112.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks