வாழையைத் தாக்கும் தண்டுத் துளைப்பான்!

வாழை banana

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

ணப் பயிராக விளங்கும் வாழையைத் தாக்கும் முக்கியமான பூச்சிகளில் ஒன்று தண்டுத் துளைப்பான். கூன்வண்டு வகையைச் சேர்ந்த இது, அண்மைக் காலத்தில் வாழைகளைத் தாக்கி அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நேந்திரன், ரொபஸ்டா ஆகிய வாழை வகைகளை இப்பூச்சிகள் அதிகமாகத் தாக்குகின்றன.

இவற்றைத் தவிர, செவ்வாழை, இரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி வகைகளையும் தாக்குகிறது. சிவந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் இவ்வண்டு, 5-6 மாத வாழை மரங்களைத் தான் பெரும்பாலும் தாக்குகிறது. கன்றுகளைத் தாக்குவதில்லை.

அறிகுறிகள்

பெண் வண்டு முட்டைகளை இடுவதற்காகச் சதைப்பற்றுள்ள வாழைத் தண்டில் தன் மூக்கினால் குண்டூசி அளவில் சிறிய துளைகளை ஏற்படுத்தும். இந்தத் துளைகளில் இருந்து பழுப்பு நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளிவரும். வெள்ளைப் புழுக்கள் தண்டைக் குடைந்து உண்ணும். ஆனால், கிழங்கினுள் செல்வதில்லை. இதனால், இலைகள் வெளுத்து, ஓரங்கள் காயும். சில நேரங்களில் இலைகள் விரிவதும் பாதிக்கப்படும். இதனால், தண்டிலிருந்து இலைகள் கொத்தாக ஒரே இடத்திலிருந்து வெளிவருவதைப் போலக் காணப்படும்.

பூ வெளிவருவது பாதிக்கப்படும். பூ வெளிவந்த மரத்தைத் தாக்கினால், காய்கள் முதிர்வது பாதிக்கப்படும். இந்த வண்டுகளின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளான மரங்கள், லேசான காற்றிலும் கூட ஒடிந்து விழுந்து விடும். நெருக்கி நடப்பட்ட தோட்டங்களில் இந்த வண்டுகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

கட்டுப்படுத்துதல்

காய்ந்த இலைகளையும், சருகுகளையும் அகற்றி, வாழைத் தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பக்கக் கன்றுகளை அதிகமாக வளர விடாமல் வெட்டி அகற்ற வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான மரத்தைத் தூருடன் பிடுங்கி, வெட்டித் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.

மானோகுரோட்டாபாஸ் மருந்தை, இதற்கென வடிவமைக்கப்பட்ட ஊசி மூலம், 60 செ.மீ. மற்றும் 150 செ.மீ. உயரத்தில், எதிர் எதிரில் தண்டினுள் 80 டிகிரி சாய்வாகச் செலுத்த வேண்டும். 350 மி.லி. மானோகுரோட்டாபாஸ் மருந்துடன் 150 மி.லி. நீரைக் கலந்து வைத்துக் கொண்டு, 2 மில்லி வீதம் செலுத்த வேண்டும்.

ஐந்து மாதம் முதல் எட்டு மாதம் வரையில், ஒவ்வொரு மாதமும் இந்த மருந்தைச் செலுத்த வேண்டும். மேலும், ஒரு மரத்துக்கு 3 கிராம் வீதம் கார்போபியூரான் குருணையைத் தூர்ப்பகுதியில் இட்டுப் பாசனம் செய்ய வேண்டும்.


முனைவர் ப.கார்த்திக், முனைவர் வி.ம.சீனிவாசன், சு.சுகுணா, முனைவர் ந.இராஜு, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading