மனிதன் நலமாக வாழ்வதற்குச் சத்தான உணவு அவசியம். நாம் தினமும் உண்ணும் உணவுடன் பூசணக் கொல்லியையும் சேர்த்தே உண்கிறோம். உலகில் 65 சத மக்களின் உடலில், ஏதாவது ஒரு பூச்சி, பூசணக்கொல்லி நச்சு உள்ளது. எனவே, நஞ்சற்ற உணவு உற்பத்தியை நோக்கி விவசாயிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
பயிர்களில் தோன்றும் அறிகுறிகளை வைத்து, விவசாயிகள் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கிறார்கள். ஆனால், அறிகுறிகளை ஏற்படுத்திய பூச்சிகளை, நோய்க் காரணிகளைக் கண்டுபிடித்து அதற்கேற்ப தெளிப்பதில்லை.
மனிதன் தன் தேவைக்கான தாவரங்களை உணவுப் பயிராகவும், மற்ற பூச்சி, பூசணம், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றைத் தனது எதிரிகளாகவும் கருதி, அவற்றைக் கட்டுப்படுத்த அல்லது அழிக்க ஆரம்பித்தான்.
உண்மையில் பூச்சி, பூசணம், விலங்குகள் தான், நமக்கு முன், இந்த பூமியில் தோன்றியவை. அவற்றை அழிக்காமல் அவற்றுடன் இணைந்து வாழ்வதே சிறப்பு. அவற்றை அழித்தால், புதிய பூச்சிகள், நோய்கள் உருவாகும்.
பயிர்ப் பாதுகாப்பில் எடுத்ததுமே பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தான் விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் நிறைய உள்ளன. அவற்றைப் பின்பற்றுவது, சுற்றுச் சூழலுக்கும், நஞ்சற்ற உணவு உற்பத்திக்கும் நல்லது.
டிரைக்கோடெர்மா விரிடி
ஒருங்கிணைந்த பயிர் நோய் மேலாண்மையில், உயிர் எதிர்க் கொல்லிகளின் பங்கு மிக அதிகம். பூஞ்சை வகையான டிரைக்கோடெர்மா விரிடி, அதிகளவில் உயிர் எதிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
இது, நோய்க் காரணிகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும். அதே நேரம் நன்மை செய்யும் உயிரிகளுக்குத் தீமையும் செய்யாது. இரசாயனப் பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆனால், உயிர் எதிர்க் கொல்லிகளால், அத்தகைய சீர்கேடு எதுவும் இல்லை. தவிர, நோய்க் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை.
நோய் மேலாண்மை
விதை நேர்த்தி: மானாவாரி நிலக்கடலை, உளுந்து, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களில் தோன்றும் வேரழுகல் நோய், தக்காளி, மிளகாயில் தோன்றும் நாற்றழுகல் நோயைத் தடுக்க, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, நன்கு கலந்து விதைக்க வேண்டும்.
நிலத்தில் இடுதல்: ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா பூசணக் கலவையை, நன்கு மட்கிய 20 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, சாகுபடிக்கு முன் நிலத்தில் இட வேண்டும்.
தோட்டக்கலைப் பயிர்கள்
விதை நேர்த்தி: காய்கறிப் பயிர்களான, தக்காளி, கத்தரி, மிளகாய், பாகல் மற்றும் பூசணியில் தோன்றும், நாற்றழுகல், நாற்றுக்கருகல் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து விதைக்க வேண்டும்.
வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை எடுத்து, நன்கு மட்கிய 20 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, விதைப்பதற்கு முன் நிலத்தில் இட வேண்டும்.
நன்மைகள்
பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலைக் கூட்டும். விதையின் மேலுள்ள நோய்க் கிருமிகளைக் அழிக்கும். மண்வழி நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாப்பை அளிக்கும். பயிர்களின் நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டும்.
மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி, பல மடங்காகப் பெருகி, செடிகளுக்கு நெடுநாட்கள் பாதுகாப்பைத் தரும். இதர உயிரினங்களுக்குத் தீமை செய்வதில்லை. இதை, மற்ற உயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், ரைசோபியத்தில் கலந்து விதைக்கலாம்.
எச்சரிக்கை
டிரைக்கோடெர்மா விரிடியை, பூசணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது. இதை, உற்பத்தி செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் வரையில் பயன்படுத்தலாம்.
ப.நாராயணன், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.
சந்தேகமா? கேளுங்கள்!