My page - topic 1, topic 2, topic 3

வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017.

மிழ்நாட்டில் சுமார் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், உழவர்களுக்கு இலாபம் தரும் பயிராக உள்ளது. மற்ற பயிர்களைப் போலவே, வெங்காயத்தையும் பலவகையான பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு உண்டாகிறது. அதனால், வெங்காயத்தைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உழவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கே, வெங்காயத்தைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வெங்காய இலைப்பேன்

உழவர்களால் சாம்பல் பூச்சி என அழைக்கப்படும் இலைப்பேன்கள் வெங்காய இலைகளில் சாற்றை உறிஞ்சி சேதத்தை உண்டாக்கும். இலைப்பேன்களின் தாக்குதலால் முப்பது சதம் வரையில் மகசூல் இழப்பு ஏற்படும். தாக்குதல் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், பயிர் முழுமையாகக் கருகிக் காய்ந்து நூறு சத மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இலைப்பேனின் வரலாறு

இளம் பேன் 0.5 முதல் 1.2 மி.மீ. நீளத்தில், வெண்மை அல்லது இளம் பச்சை நிறத்தில் காணப்படும். இளம் இலைகளின் நுனிப்பகுதியில் அதிகளவில் இந்தப் பேன்களைக் காணலாம். 2 மி.மீ. நீளம் வரையில் இருக்கும் வளர்ந்த இலைப்பேன், மஞ்சள் அல்லது பழுப்பு இறக்கைகளுடன் காணப்படும். இப்பேன்கள், முட்டைகளை இலைத் திசுக்களுக்குள் இடும். தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப, இப்பேன்களின் வளர்ச்சி, 10-11 நாட்களில் முடிந்து விடும். வளர்ந்த பேன்கள் 20 நாட்கள் வரை உயிர் வாழும். ஒரு பெண் பேனானது 80 முட்டைகள் வரை இடும்.

சேத அறிகுறிகள்

இலைப்பேன் வெங்காய இலைகளில் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் வெளுத்துக் காணப்படும். தொடக்கத்தில் வெண்புள்ளிகள் தோன்றும். பிறகு, அப்புள்ளிகள் ஒன்று சேர்வதால் பச்சையம் இல்லாமல் இருக்கும். இதனால், ஒளிச்சேர்க்கை குறைந்து, பயிர்களின் வளர்ச்சிக் குன்றுவதுடன், காய்ந்து கருகியதைப் போலப் பயிர்கள் காணப்படும். இதன் தாக்குதல் பொதுவாகக் குளிர் காலத்தில் அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து வெங்காயம் விளையும் இடங்களில் ஆண்டு முழுவதும் காணப்படும்.

கட்டுப்படுத்துதல்

வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லியான அசாடிராக்டினை ஏக்கருக்கு 400 மில்லி எடுத்து ஒரு சதம் வீதம் தெளித்து இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிக் கொல்லியான புரஃபனபாஸை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அல்லது டைமெத்தயேட் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அல்லது ஊமைட் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் தெளித்து இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம். ஒட்டும் திரவத்தையும் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், இலைப்பேன்களை நன்கு கட்டுப்படுத்தலாம்.

வெட்டுப் புழு

வெட்டுப் புழுக்கள் குறிப்பாகப் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சாகுபடி செய்யப்படும் வெங்காயத்தின் இலைகளைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் புழுக்களின் தாக்குதல் தீவிரமாக இருக்கும் சமயத்தில் மகசூல் இழப்பு 10 சதம் வரையில் உண்டாகும்.

வெட்டுப் புழுவின் வரலாறு

வெட்டுப் புழுவின் அந்துப் பூச்சிகள் பழுப்பு நிறத்தில், இறக்கைகளில் வெண் புள்ளிகளுடன் காணப்படும். தாய் அந்துப் பூச்சிகள் முட்டைகளைக் குவியலாக உரோமங்களைக் கொண்டு மூடி இலைகளின் மேல் இடும். முட்டைப் பருவம் 4-5 நாட்கள் நீடிக்கும். புழுக்கள் பழுப்பு நிறத்தில் கரும் புள்ளிகளுடன் காணப்படும். முழுமையாக வளர்ந்த புழுவானது 3.5-4 செ.மீ. நீளம் வரை இருக்கும். புழுப்பருவம் 14 முதல் 21 நாட்களாகும். இவை கூட்டுப் புழுக்களாக மாறி இரண்டு வாரங்கள் வரையில் மண்ணுக்குள் இருக்கும்.

சேத அறிகுறிகள்

வெட்டுப் புழுக்கள் இலைகளை அரித்துச் சல்லடையைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும். இதனால், தாள்கள் பிடிப்பின்றித் தொங்கி விடும். இந்தப் புழுக்கள் வளர்ச்சிப் பருவத்தில் இருக்கும் காய்களையும் துளைத்து அல்லது அரித்துச் சேதப்படுத்தும்.

கட்டுப்படுத்துதல்

ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். முட்டைக் குவியல்களையும் கையால் பொறுக்கி அழிக்கலாம். விஷ உணவு உருண்டைகளை, அதாவது, அரிசித் தவிடு ஒரு கிலோ, நாட்டுச் சர்க்கரை அரை கிலோ, கார்பரில் 50 சதம் அரை கிலோ, மூன்று லிட்டர் நீர் ஆகியவற்றைக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி வரப்பு ஓரங்களில் மாலை நேரத்தில் வைத்துப் புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம். இரசாயனப் பூச்சிக் கொல்லியான குளோர்பைரிபாசை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து, ஒட்டும் திரவத்தையும் சேர்த்துத் தெளித்து வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இலைத் துளைப்பான்

அண்மைக் காலத்தில் வெங்காயப் பயிரில் இலைத் துளைப்பானின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தேவைக்கு அதிகமாக உரம் போடுதல் மற்றும் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தல் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இலைத் துளைப்பான்கள், தக்காளி, கத்தரி, பரங்கிக் குடும்பப் பயிர்கள் மற்றும் பல்வேறு களைச் செடிகளையும் தாக்கிச் சேதத்தை உண்டாக்குகின்றன.

இலைத் துளைப்பானின் வரலாறு

இது ஈ வகையைச் சார்ந்த பூச்சியாகும். இந்த ஈக்கள் சிறிதாக, பளபளப்பாக, கறுப்பாக காணப்படும். தாய் ஈயானது, வெள்ளை முட்டைகளை தாள்களில் இடும். முட்டைப் பருவம் நான்கு நாட்களாகும். புழுவானது கால்களின்றி, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். வளர்ந்த புழு, களையில் இருந்து வெளியேறி மண்ணில் கூட்டுப் புழுவாக மாறும்.

சேத அறிகுறிகள்

இலைகளைத் துளைத்துச் சேதப்படுத்தும். இதனால் தாக்கப்பட்ட இலைகளில் பாம்பைப் போல நெளிந்து வளைந்த கோடுகள் காணப்படும். அவற்றுள் மஞ்சள் புழுக்களைக் காண முடியும். இந்தப் புழுக்களின் தாக்குதல் தீவிரமானால், தாக்கப்பட்ட இலைகள் வலுவிழந்து காய்ந்து விடும்.

கட்டுப்படுத்துதல்

பரிந்துரை செய்யப்படும் அளவில் உரமிட வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகளை வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். பொதுவாக, இலைத் துளைப்பானின் தாக்குதல், இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களில் தோன்றும். இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் குறைந்தளவில் தெளித்தால், இலைத் துளைப்பான்களைத் தாக்கி அழிக்கும் குளவியின ஒட்டுண்ணிகளின் செயல்திறன் அதிகமாகும். வேம்பு சார்ந்த மருந்துகள் ஓரளவு பயனைத் தரும்.


முனைவர் ப.கார்த்திக், முனைவர் வி.ம.சீனிவாசன், சு.சுகுணா, முனைவர் ந.இராஜு, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் – 621 115.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks