கிருஷ்ணகிரி வட்டாரம் இட்டிகல் அகரம் கிராமத்தில், நெற்பயிருக்குப் பின் பயறு வகை சாகுபடி குறித்த ஒருநாள் உள் மாவட்ட அளவிலான பயிற்சி, வேளாண்மைத் துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
இப்பயிற்சிக்கு, கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, கலைஞர் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் பயன்கள் மற்றும் இடுபொருள்கள் மானிய விலையில் பெறுதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். மேலும், வேளாண்மைத் துறையில் தற்போது செயல்படுத்தப்படும் பயறு வகை மற்றும் சிறுதானிய சாகுபடிக்கான மானியம் மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல், துணை நீர் மேலாண்மைத் திட்ட மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய வல்லுநர் உதயன், நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி குறித்தும், அதன் முக்கியத்துவம், நெல் சாகுபடியில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்களான, விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை முறைகள், நுண்ணுரம் இட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், நெல் நடவு செய்த மூன்று நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் இடுதல், அறுவடை உத்திகள், அறுவடைக்குப் பிந்தைய நேர்த்திகள் போன்ற உத்திகளைச் சரியான முறையில் பின்பற்றினால், கூடுதல் மகசூலை எளிதாகப் பெறலாம் எனவும் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மை அலுவலர் பிரியதர்ஷினி, நெற்பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அதன் பயன்களை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.
வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, தரமான சான்று பெற்ற, உயர் விளைச்சல் மற்றும் வீரிய இரக நெல் விதைகள், கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் கிடைக்கும் என்றும், நெல்லில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் கூறினார்.
இப்பயிற்சியில், உதவி வேளாண்மை அலுவலர்கள், முத்துசாமி, சிவராஜ், மாதையன், முனிராஜ் ஆகியோர் பங்கேற்று, கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் பயன்கள் மற்றும் இடுபொருள்கள் மானிய விலையில் பெறுதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். மேலும், வேளாண்மைத் துறையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் கூறினர்.
அட்மா திட்ட உதவித் தொழில் நுட்ப மேலாளர் பூ,சண்முகம், அட்மா திட்டம் குறித்தும், அதன் செயல்கள் குறித்தும், விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். இப்பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்
சந்தேகமா? கேளுங்கள்!