வேளாண்மைத் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறையின் செயலர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
வேளாண்மைத் துறையின் புதிய செயலராகப் பொறுப்பேற்றுள்ள வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
இனி, வாரத்தில் மூன்று நாட்கள், காலை 9 மணிக்குள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர், விவசாயிகளின் வயல்களுக்கு நேரில் செல்ல வேண்டும். விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, சாகுபடி ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
அப்போது, இருப்பிடம், தேதி, நேரம், வானிலை, திசைக்காட்டி உள்ளிட்ட விவரங்களுடன் கூடியே, ஜியோ டேக் முறையில், விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளார்.
அலுவலர்கள் வயல்வெளி ஆய்வுக்குச் செல்வதை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலைத் துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.