காட்டாமணக்கு ஒரு புதர்ச் செடியாகும். இதை ஆங்கிலத்தில் ஜட்ரோப்பா என்று அழைப்பார்கள். ஒருமுறை இதை நடவு செய்து விட்டால் முப்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூலைக் கொடுக்கும். இது சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியைக் கால்நடைகள் உண்பதில்லை. இதன் இலைகள் அகலமாக, கரும் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் விதைகளைப் பறவைகளும் உண்பதில்லை. ஓரளவு வறட்சியைத் தாக்குப் பிடித்து வளரக் கூடியது.
தமிழகத்தில் பயிரிட ஏற்ற இரகம்
உலகளவில் காட்டாமணக்கில் 476 வகைகள் உள்ளன. இந்தியாவில் 12 வகைகள் உள்ளன. இவற்றுள், ஜட்ரோப்பா கர்காஸ் என்னும் வகை தான் உலகளவில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூயில் தேர்வு செய்யப்பட்ட, ஜட்ரோப்பா கர்காஸ் என்னும் உயர் விளைச்சல் இரகத்தைப் பயிரிடலாம். இந்த ஜட்ரோப்பா கர்காஸின் விதைகளை, மடகாஸ்கர், ஜிம்பாவே, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் பயன்படுத்தலாம்.
சாகுபடிக்கேற்ற பருவங்கள்
காட்டாமணக்கைப் பருவமழைக் காலத்தில், அதாவது, ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யலாம்.
சாகுபடிக்கேற்ற மண்
களர், உவர் இல்லாத அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இதை சாகுபடி செய்யலாம்.
விதையளவு
ஒரு ஏக்கரில் 2×2 மீட்டர் இடைவெளியில் 1,000 செடிகளை நடலாம். ஒரு கிலோ எடையில் சுமார் 2,000 விதைகள் இருக்கும். விதை முளைப்புத் திறன் 50-60 சதம் இருக்கும். எனவே, ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் போதும். விதைகளை அறுவடை செய்த 1-3 மாதங்களில் நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் ஆகும் போது, முளைப்புத்திறன் வெகுமாகக் குறைந்து விடும்.
விதை நேர்த்தி
விதைகளைப் பசுஞ்சாணக் கரைசலில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், ஈரக்கோணிப் பையில் 12 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். முளை வெளிவந்த விதைகளை நெகிழிப் பைகளில் இட்டு முளைக்கப் பயன்படுத்தலாம்.
நாற்றுத் தயாரிப்பு
விதைகளை, 10×20 செ.மீ. அளவுள்ள நெகிழிப் பைகளில், செம்மண், மணல், எரு ஆகியவற்றைச் சமமாகக் கலந்து நிரப்பி நடலாம். பைகளில் அடியில், கூடுதல் நீர் வடியும் வகையில் நான்கு துளைகளை இட வேண்டும். முளைப்புக் கட்டிய விதைகளை 1 செ.மீ. ஆழத்தில் படுக்கை வசமாக ஊன்ற வேண்டும். விதைகள் பத்து நாட்களில் முளைக்கத் தொடங்கும்.
பூசண நோய்கள் வராமல் இருக்க, விதைப்பதற்கு முன், ஒரு சத போர்டோ கரைசல் அல்லது 0.2 சத காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலைப் பைகளில் ஊற்ற வேண்டும். இந்த நாற்றுப் பைகளை மாதத்திற்கு ஒருமுறை இடமாற்றி வைத்து, மண்ணில் வேர்கள் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். அறுபது நாட்களில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும். ஆறு முதல் எட்டு மாதங்கள் வரையில், நாற்றுகளைப் பைகளில் வைத்திருக்கலாம்.
நடவு வயல் தயாரிப்பு
தோட்டத்தைக் களைகளின்றிச் சமப்படுத்த வேண்டும். சட்டிக் கலப்பையால் ஒருமுறையும், கொத்துக் கலப்பையால் ஒருமுறையும் உழ வேண்டும். பின்பு 2×2 மீட்டர் இடைவெளியில் ஒரு சதுரடி அளவில் குழிகளை எடுக்க வேண்டும். அந்தக் குழிகளில் 500 கிராம் தொழுவுரம், 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் வேப்பம் புண்ணாக்குக் கலந்த மண்ணை இட்டு நாற்றுகளை நட வேண்டும்.
நாற்றுகளை நடும் முறை
அறுபது நாட்கள் வயதுள்ள, ஒரு அடி உயரமுள்ள நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்தலாம். நெகிழிப் பைகளை எடுத்து விட்டு, அந்த மண் உருண்டை கலையாமல் நடவு செய்ய வேண்டும். குழிக்கு 20 கிராம் சூடோமோனஸ் வீதம் இட வேண்டும். நடவு செய்த பின், செடியைச் சுற்றிலும் நன்கு மிதித்து மண்ணை இறுகச் செய்ய வேண்டும்.
நீர் மேலாண்மை
செடிகளை நட்டதும் பாசனம் தர வேண்டும். அடுத்து மூன்றாம் நாளும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். மழை இல்லாத மாதங்களில் மாதம் இருமுறை பாசனம் செய்வது அவசியம்.
உர மேலாண்மை
இரண்டாம் ஆண்டு முதல் உரமிடுவது அவசியம். செடிக்கு 20:120:60 கிராம் வீதம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை எடுத்து இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும். நான்காம் ஆண்டிலிருந்து செடிக்கு 120:270:60 கிராம் அளவில் தழை, மணி, சாம்பல் சத்தை எடுத்து, இரு பாகமாகப் பிரித்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும்.
கவாத்து
நட்ட செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்ததும், வளரும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இரண்டாம் ஆண்டின் இறுதி வரை, பக்கவாட்டில் வரும் கிளைகளின் நுனிகளையும் கிள்ளிவிட வேண்டும். மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் குறைந்தது 25 பக்கக் கிளைகள் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
செடிகள் ஆறு மாதங்களில் பூக்கத் தொடங்கி விடும். பூக்கள் இருப்பினும் தளிர்களின் நுனிகளைக் கிள்ளி, பக்கக் கிளைகளை ஊக்குவிப்பது அவசியம். செடியின் வளர்ச்சி அதிகமாகி, கிளைகள் கீழ்நோக்கி வளையும் காலத்தில், அதாவது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தரை மட்டத்திலிருந்து ஒரு அடி உயரம் விட்டுவிட்டு, செடிகளை வெட்டிவிட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கித் தெளிப்பு
செடியில் பூக்கள் கூடுதலாகப் பூக்க, ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. ஜிப்ராலிக் அமிலம் வீதம் கலந்து (100 பிபிஎம்) ஆண்டுக்கு இருமுறை தெளிக்கலாம்.
ஊடுபயிர்
முதல் இரண்டு ஆண்டுகள் வரையில், செடிகளின் வரிசைகளுக்கு இடையே தக்காளி, உளுந்து, பாகல், சாம்பல் பூசணி, பரங்கி, வெள்ளரி ஆகிய பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
பூச்சி மற்றும் பூசணக் கட்டுப்பாடு
பட்டைத் தின்னிகள், புதிய தளிர்களின் பட்டையைச் சுரண்டித் தின்னும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. என்டோசல்பான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இலைப் பிணைப்பான் என்னும் பூச்சிகள், வளரும் இலைகளைப் பின்னிப் பிணைத்துக் கூடாக மாற்றும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி, என்டோசல்பான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டழுகல் நோய், செடிகளின் தண்டின் அடிப்பாகத்தில், அதாவது, மண்ணோடு சேரும் இடத்தில் தோன்றும். இதைத் தொடர்ந்து செடிகள் காய்ந்து விடும். எனவே, இதைக் கட்டுப்படுத்த, ஒரு சத போர்டோ கரைசலை, செடிகளின் தண்டும் மண்ணும் சேருமிடத்தில், மண்ணைச் சுற்றி ஊற்றி நனைக்க வேண்டும்.
அறுவடை
பச்சைக் காய்கள் முற்றி மஞ்சள் நிறமாக மாறும். பிறகு, காய்ந்து கறுப்பாக மாறி விடும். ஒவ்வொரு காயிலும் மூன்று விதைகள் இருக்கும். இச்செடி ஆண்டு முழுவதும் காய்க்கும். எனவே, மாதம் ஒருமுறை என அறுவடை செய்யலாம். பிரித்தெடுக்கும் விதைகளை உலர வைத்துக் கோணிப்பைகளில் சேமித்து வைக்கலாம்.
காட்டாமணக்கின் பயன்கள்
உயிரி திரவ எரிபொருள்: காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சத திரவ எரிபொருள் கிடைக்கும். இந்த எரிபொருளைச் சுத்தப்படுத்தி, டீசலுக்கு மாற்றாக இயந்திரங்களை இயக்கப் பயன்படுத்தலாம்.
காட்டாமணக்குப் புண்ணாக்கு: இதை இயற்கை உரமாகப் பயிர்களுக்கு இடலாம். மேலும், சாண எரிவாயுக் கலனில் இந்தப் புண்ணாக்கை இடுபொருளாகப் பயன்படுத்தி, காற்றில்லாச் சூழ்நிலையில் செரிக்க வைத்து, உயிரி எரிவாயுவைப் பெறலாம். கலனிலிருந்து வெளிவரும் செரித்த கரைசலையும் உரமாகப் பயன்படுத்தலாம். ஒரு கிலோ புண்ணாக்கிலிருந்து 85 லிட்டர் எரிவாயு கிடைக்கும்.
எண்ணெய் எடுக்கப்பட்ட காட்டாமணக்குப் புண்ணாக்கை, நேரடியாகப் பயிர்களுக்கு உரமாக இடலாம். மற்ற இயற்கை உரங்களை ஒப்பிடும் போது, இந்தப் புண்ணாக்கில் இருக்கும் தழைச்சத்து அதிகமாகும்.
கிளிசரால்: எண்ணெய்யைச் சுத்தப்படுத்தும் போது கிடைக்கும் கிளிசரால் என்னும் உபபொருளை, மருந்துகள் மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தலாம். பல்வேறு முறைகளில் சுத்திகரிக்கப்படும் கிளிசரால், தொழிற்சாலைகளில் உய்வுப் பொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகிறது.
முனைவர் ஆ.தங்கஹேமாவதி, இணைப் பேராசிரியர்,
பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.
சந்தேகமா? கேளுங்கள்!