My page - topic 1, topic 2, topic 3

வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

ண்ணத்துப் பூச்சிகளுக்கும் பாளைத் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமது உணவு, தமது புழுக்களின் உணவு ஆகியவற்றைக் கடந்து, பிற காரணங்களுக்காகவும் இவை இந்தத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாக, வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைப் பட்டாம் பூச்சிகளுக்கும், பாளைத் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மிகவும் வியப்பானது. எனவே, இவற்றை ஆங்கிலத்தில் Milk weed Butterflies என அழைக்கிறார்கள். இந்த வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றியும், பாளைத் தாவரங்களைப் பற்றியும் இங்கே காணலாம்.

வரியன்கள் மற்றும் கருப்பன்கள் (Milk weed Butterflies)

பட்டாம் பூச்சிக் குடும்பங்களிலேயே வரியன்கள் (Nymphalidae) குடும்பம் மிகவும் பெரியதாகும். இந்த வண்ணமிகு பட்டாம் பூச்சிகள் வெய்யில் நேரத்தில் இறக்கைகளைப் விரித்து வைத்து ஓய்வெடுக்கும். வரியன் பட்டாம் பூச்சிகள் சிறகன்கள் என்றும் வசீகரன்கள் என்றும் அழைக்கப்படும். இவை, பலதரப்பட்ட வாழிடங்களில் காணப்படுகின்றன. சில இனங்கள் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் மட்டும் உள்ளன.

மேலும் இவை, தேனுக்காகவும், தமது புழுக்களின் உணவுக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள கிளுகிளுப்பை (Crotalaria retusa), இரத்த எருக்கு (Asclepias curassavica), எருக்கு (Calotropis), தேள் கொடுக்கு (Heliotropium), வேலிப்பருத்தி, கொடிப்பாளை (Dregea volubilis) போன்ற தாவரங்களைச் சார்ந்து இருக்கின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம் பூச்சிகளின் புழுக்கள் Asclepadacae குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை உணவுத் தாவரங்களாகக் கொண்டுள்ளன.

வலசை (Migration): இந்தப் பட்டாம் பூச்சிகள் குறிப்பிட்ட பருவக் காலங்களில், பறவைகளைப் போலவே வலசை மேற்கொள்கின்றன. இவை, தமது உணவு மற்றும் மற்ற சில காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன. இந்த இடப்பெயர்ச்சிக்கு ஏற்ற காரணங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளன.

அப்போது, வெந்தய வரியன் (Plain tiger), ஆரஞ்சு வரியன் (Striped tiger), கருநீல வரியன் (Dark blue tiger), நீல வரியன் (Blue tiger) ஆகிய பட்டாம் பூச்சிகள், கிளுகிளுப்பைத் தாவரத்தில் கொத்துக் கொத்தாக வட்டமிட்டு அதன் தண்டுகளில் உள்ள நச்சுப்பாலை உறிஞ்சுவதைக் காண முடியும்.

மேலும், இந்தப் பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக ஈரம் நிறைந்த பகுதிகளில் அமர்ந்து உப்புக் கலந்த நீரை உறிஞ்சுவதையும் காணலாம். இந்தச் செயலை ஆங்கிலத்தில் mud puddling என அழைக்கின்றனர். இந்தச் செயலைப் பெரும்பாலும் ஆண் வண்ணத்துப் பூச்சிகளே செய்கின்றன. அப்போது கிடைக்கும் உப்பு, இவற்றின் இனவிருத்திக்குப் பயன்படுகிறது. அதாவது, கலவியின் போது இந்த உப்பைப் பெண் பூச்சிகளுக்கு ஆண் பூச்சிகள் வழங்கும். வெய்யில் காலத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்கு இச்செயல் உதவி புரிகிறது.

வெந்தய வரியன் (Plain tiger): Danaus chrysippus

இதன் சிறகு 70-80 மி.மீ. இருக்கும். வெந்தய வரியன் என்பது நடுத்தர அளவில், நமது சுற்றுப்புறத்தில் அதிகமாகக் காணப்படும் பட்டாம் பூச்சியாகும். இது, முதன் முதலில் ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. எகிப்தின் அல் உக்சுர் என்னுமிடத்தில் உள்ள 3,500 ஆண்டுப் பழமையான கதை ஓவியத்தில் இது வரையப்பட்டு உள்ளது. இப்பூச்சிகள், எருக்கு, இரத்த எருக்கு, வேலிப்பருத்தி, கொடிப்பாளை போன்ற தாவரங்களைப் புழுக்களின் உணவுத் தாவரங்களாகக் கொண்டுள்ளன.

ஆரஞ்சு வரியன்: (Striped tiger) Danaus genutia

இதன் சிறகு 72 மி.மீ. முதல் 100 மி.மீ. வரை இருக்கும். இரவில் கறுப்புக் கலந்த பழுப்பு நிற வரிகளுடன் காணப்படும். இறகுகளின் ஓரத்திலும், கீழ்ப் பகுதியிலும் வெள்ளைத் திட்டுகள் இருக்கும். உருவ அமைப்பில் வெந்தய வரியனைப் போல் இருந்தாலும், இதிலுள்ள தெளிவான கறுப்பு நரம்புகள் இதை வேறுபடுத்திக் காட்டும். இரத்த எருக்கு, கொடிக்கள்ளி ஆகியன இந்தப் பட்டாம் பூச்சிப் புழுக்களின் உணவுத் தாவரங்கள் ஆகும்.

நீல வரியன் (Blue tiger) Tirumala limniace

இதன் சிறகு 90-100 மி.மீ. இருக்கும். இந்தச் சிறகின் மேற்புறம் கருமை நிறத்துடன் நீலப் புள்ளிகள் மற்றும் கோடுகள் இருக்கும். இந்தப் பட்டாம் பூச்சிகளை நமது தோட்டங்களில் பரவலாகக் காண முடியும். இவை இடம் பெயரும் தன்மை மிக்கவை. குடசப்பாளை, கொடிப்பாளை, கிளுகிளுப்பை ஆகியன, இந்தப் பட்டாம் பூச்சிப் புழுக்களின் உணவுத் தாவரங்கள் ஆகும்.

உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்திலோ பால் சுரக்கும் கிளுகிளுப்பைச் செடி இருந்தால், வலசை செல்லும் நீல வரியன்கள் உங்கள் வீட்டு விருந்தினர்களாக வந்து, கிளுகிளுப்பைச் செடியில் கூட்டம் கூட்டமாக வட்டமிடுவதைக் காணலாம். கிளுகிளுப்பைச் செடியில் நச்சுமிகு சாற்றை உறிஞ்சுவதற்காக இந்தப் பட்டாம் பூச்சிகள், செடியின் இலைகளே தெரியாத அளவில் பூக்களைப் போலப் பரவியிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இவற்றின் கம்பளிப் புழுக்கள் இலைகள் முழுவதையும் உண்டு விடுவதால், இலைகளற்ற கிளுகிளுப்பைச் செடியின் தண்டுகளில் வண்ணத்துப் பூச்சிகள் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த இலைச் சாற்றும் உறிஞ்சும் வேலையை ஆண் பட்டாம் பூச்சிகளே செய்கின்றன.

இந்தச் செடியிலுள்ள ஆல்கலாய்டுகள், ஆண் பட்டாம் பூச்சிகளின் காதல் திரவியமாகும். இவை முக்கியமான பாலின ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இவை, கலவியின் போது ஆண் பட்டாம் பூச்சியிடம் இருந்து பெண் பட்டாம் பூச்சியை அடைகின்றன.

கருநீல வரியன் (Dark blue tiger-Tirumala septentrionis)

இதன் சிறகு 75-95 மி.மீ. இருக்கும். தோற்றத்தில் நீல வரியனைப் (Blue tiger-Tirumala limniace) போலக் காணப்பட்டாலும், சில வகைகளில் உள்ள மாற்றங்களைக் கொண்டு இவற்றை அடையாளம் காண முடியும்.

சிறகின் பெரும் பகுதியானது கறுப்பு நிறத்தில் அல்லது அடர் பழுப்பு நிறத்தில் நீலநிற வரிகளுடன் இருக்கும். பின்சிறகின் கீழ்ப்பகுதியின் பாதியில் கருநிற வரிகள் சற்று அகலமாகவும், நீண்டும் காணப்படும். மெதுவாகப் பறக்கும். ஆண்டு முழுவதும் இப்பூச்சிகளைப் பார்க்கலாம். இவை, இந்தக் குடும்பத்தின் பிற வகைப் பட்டாம் பூச்சிகளுடன் வலசை செல்லும்.

வெண்புள்ளிக் கருப்பன் (Common indian crow)

இதன் சிறகு 85-95 மி.மீ. இருக்கும். இந்தப் பூச்சிகள் கறுப்பு நிறத்திலும், பளபளப்பாகவும் அதிகளவில் காணப்படும். இறக்கைகளின் ஓரங்களில் வெள்ளைப் புள்ளிகள் வரிசையாக இருக்கும். அரளிச்செடிகள் இருக்கும் பகுதியில் இந்தப் பட்டாம் பூச்சிகள் அதிகமாக இருக்கும். அதனால் இப்பூச்சிகளை அரளி விரும்பிகள் என்றும் அழைப்பர். இவை, அரளி இலைகளின் அடிப்புறத்தில் முட்டைகளை இடும்.

அவற்றிலிருந்து வெளிவரும் கம்பளிப் புழுக்கள், வெள்ளை, மஞ்சள், பச்சை மற்றும் கறுப்புக் கோடுகளுடன் அழகாக இருக்கும். இதன் கூட்டுப் புழுக்கள் பச்சை மற்றும் பட்டு நிறத்தில் இருக்கும். இந்தப் புழுக்கள் இரவு நேரத்தில் ஒளியை உமிழ்ந்து மிக அழகாக ஜொலிக்கும். விஷத்தன்மையுள்ள் அரளிச்செடிப் பாலை உண்டு வாழும் இந்தக் கம்பளிப் பூச்சிகளும், பட்டாம் பூச்சிகளும் விஷத்தன்மை உடையவை.

இந்த இனத்தின் ஆண் பட்டாம் பூச்சிகள் கிளுகிளுப்பை மற்றும் தேள் கொடுக்குச் செடிகளின் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சி, பெரோமோன்களை நிரப்பிக் கொள்ளும். இவை பெண் பூச்சிகளைக் கவர்வதற்கு உதவியாக இருக்கும்.

இரு பட்டைக் கருப்பன் (Double Branded crow) Euploea slvester
இது, வெண்புள்ளிக் கருப்பனைப் போலவே இருக்கும். முன் இறக்கையின் விளிம்புக்கு அருகில், கூடுதல் புள்ளிகள் இருக்கும். இந்தப் புள்ளிகள் தான், இதை வெண்புள்ளிக் கருப்பன் பட்டாம் பூச்சியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அத்தி (Ficus sp. trees like Ficus micrcarpa and Ficus racemosa), அடினியம் (Adenium), இரத்த எருக்கு (Asclepias curassavica), களாக்காய் (Carissa), பால் கொடி (Cryptolepis), நன்னாரி (Hemidesmus vines) ஆகியன இந்தப் புழுக்களின் உணவுத் தாவரமாகும்.


து.சங்கரதேவி,

ஆசிரியை, அரசு தொடக்கப்பள்ளி,

அபிஷேகப்பாக்கம், புதுச்சேரி – 605 007.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks