My page - topic 1, topic 2, topic 3

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

ச்சுத் தடுப்பானாக, அழற்சி தடுப்பானாகச் செயல்படும் மாதுளம் பழம் (புனிகாகிரானேடம்) சிறிய மரச்செடியில் காய்க்கக் கூடியது. மாதுளம் பழத்தில் விட்டமின் சி-யும், கே-யும் நிறைந்துள்ளன. இதன் பழச்சாறு எல்லோராலும் விரும்பிப் பருகப்படுவது. மாதுளைச் செடியானது பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, பழ உற்பத்தியில் இழப்பு ஏற்படும். எனவே, இச்செடியில் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த முறைகளைப் பற்றியும் இங்கே காணலாம்.

இலைப்புள்ளி மற்றும் பழ அழுகல் நோய்

இந்நோய், கொலிடோடிரைகம் கிளியோஸ் பொரியாய்டஸ் என்னும் பூசணம் மூலம் தோன்றக் கூடியது. இதனால் பாதிக்கப்பட்ட இலைகளில், சிறிய நீலநிறப் புள்ளிகள் மஞ்சள் வளையங்களுடன் காணப்படும். மேலும், பழுப்பு நிறத்தில் குழிந்த புள்ளிகள் பழங்களில் தோன்றி வெடிப்புகளை ஏற்படுத்தும்.

செர்க்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

இந்நோய், செர்க்கோஸ்போரா புனிகே என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது. இதனால் தாக்கப்பட்ட செடியின் இலைகளிலும் பழங்களிலும், பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இப்புள்ளிகள் அளவில் பெரிதாகும் போது, இலைகள் கருகியும், பழங்கள் அழுகியும் காணப்படும். சிறு கிளைகளிலும் பாதிப்பு ஏற்படுவதால், செடியானது இறந்து விடக்கூடும்.

பாக்டீரிய கருகல் நோய்

இந்நோய், சேன்தோமோனாஸ் ஆக்சனோபோடிஸ் புனிகே என்னும் பாக்டீரியா மூலம் தோன்றக் கூடியது. இதனால் பாதிக்கப்பட்ட இலைகளில் தோன்றும் பழுப்புப் புள்ளிகள், மஞ்சள் வளையங்களுடன் அல்லது நீரில் ஊறியதைப் போன்ற பகுதிகளால் சூழ்ந்திருக்கும். சிறு கிளைகளின் கணுக்கள், பழுப்பு அல்லது கறுப்பாக இருக்கும். பழங்களில் பளபளப்பாக, பழுப்பு அல்லது கருநிறத்தில், மேடான புள்ளிகள் காணப்படும். இந்தத் தொற்று, பழத்தோலில் மட்டும் காணப்படும். தீவிர நிலையில், புள்ளிகளில் சிறிய வெடிப்புகளும், வெண்ணிறத்தில் காய்ந்த திட்டுகளும் ஏற்படும்.

ஒருங்கிணைந்த நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்

நீர்த் தேங்காத வகையில், பாசனம் சமச்சீராக இருக்க வேண்டும். மேலும், நிலத்தில் நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். களைகள், நோய்க் காரணிகள் தங்குமிடமாக இருப்பதால், நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. நோயுற்ற செடிகளின் கழிவுகளை அகற்றி அழிக்க வேண்டும். புண்ணாக்கு வகைகள், மட்கு, மண்புழு உரம் போன்றவற்றை மண்ணில் இடலாம்.பழ அழுகலைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. டைபெனொ கொனசோல் அல்லது 133 கிராம் பைரகிளஸ்ட்டிரோபின் 133 கிராம் மற்றும் ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் எபாக்சிகோனசோல் வீதம் கலந்து தெளிக்கலாம்.

பூசண நோய்களைக் கட்டுப்படுத்த, 0.1 சதவீத யோபனேட் மீத்தைல் கரைசலைத் தெளிக்கலாம். பாக்டீரிய கருகலைக் கட்டுப்படுத்த, ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது 0.25 சதவீத காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலைத் தெளிக்கலாம்.


ரா.திலகவதி, பயிர் நோயியல் துறை, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks