My page - topic 1, topic 2, topic 3

கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

ணத்தக்காளிக் கீரை, சொலனேஸியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். இதன் இலைகளும் காய்களும்; சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.

இதில், புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து சி, நார்ச்சத்து ஆகியன நிறைந்து உள்ளன. மலச்சிக்கல் மற்றும் குடற் புண்ணுக்கு மணத்தக்காளிக் கீரை சிறந்த மருந்தாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 2020 ஆண்டில், கோ.1 என்னும் மணத்தக்காளிக் கீரை இரகத்தை வெளியிட்டு உள்ளது. இந்த இரகமானது, காளிபாளையம் என்னும் வகையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது.

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஜூன் ஜூலையில் விதைக்கலாம். ஏக்கருக்கு 12 முதல் 14 டன் மகசூலைத் தரவல்லது. இந்த மகசூலானது, உள்ளூர் வகையை விட 19 சதம் அதிகமாகும்.

நூறு கிராம் கோ.1 மணத்தக்காளிக் கீரையில், உயிர்ச்சத்து சி 2.66 மி.கி., இரும்புச்சத்து 6.10 மி.கி. உள்ளன. இந்த இரகம், பாசன வசதி மற்றும் வடிகால் வசதி தோட்டக்கால் நிலங்கள் உள்ள, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய உகந்தது.

மேலும், வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஏற்ற இரகமாகும். இந்த இரகத்தை நாற்றுப் பாவி நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 கிராம் விதை போதும். முப்பது நாள் நாற்றுகளை 30×30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நிலத்தைத் தயார் செய்யும் போது, 10-15 டன் தொழுவுரம் இட வேண்டும். இதனுடன், 100 : 50 : 50 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்தையும் இட வேண்டும். இதில், தழைச்சத்தில் பாதியையும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும்.

மீதியுள்ள தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் இட வேண்டும்.

சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, 5 சதவீத வேப்பங் கொட்டைச் சாறு அல்லது 3 சத வேப்பெண்ணெய்க் கரைசலை, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் கலந்து, விதைத்த 30 மற்றும் 45 நாளில் இலைகளில் தெளிக்க வேண்டும்.

கோ.1 மணத்தக்காளிக் கீரையின் வயது 160-180 நாட்களாகும். இந்தக் கீரையை மூன்று முறை அறுவடை செய்யலாம். 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த செடிகளை, நிலத்திலிருந்து 15 செ.மீ. விட்டு அறுவடை செய்ய வேண்டும்.


முனைவர் ச.ஆரோக்கிய மேரி, முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை – 625 104.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks