வறட்சியில் விளையும் வரகு!

வரகு வரகு

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.

ந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகின்றன. இவை, நெல், கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும் மானாவாரிப் பகுதிகளில் பரவலாகப் பயிரிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில், தினை, சாமை, கேழ்வரகு, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியன மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், இவை அப்பகுதி மக்களின் அன்றாட முக்கிய உணவுப் பொருள்களாகவும் உள்ளன.

வறட்சி மிகுந்த பகுதிகளில் விளையும் முக்கியப் பயிர்களில் வரகும் ஒன்றாகும். நெடுங்காலச் சேமிப்புக்குப் பிறகும் முளைக்கும் திறனைக் கொண்டது வரகு. மேலும், மிகக் குறைந்த மழைநீரைக் கொண்டு நன்கு வளர்ந்து விளைச்சலைக் கொடுக்கக் கூடியது. வரகானது தென்னிந்தியாவில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

குறிப்பாகத் தமிழ்நாட்டில், திருச்சி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், சேலம், இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, நாமக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. இங்கு, சராசரி மகசூல் எக்டருக்கு 1,500 கிலோ வரை கிடைக்கிறது.

வரகு வகைகள்

கோ.3, ஜி.யு.பி.கே.3, ஏ.பி.கே.1, வம்பன்1 போன்ற இரகங்கள், வறட்சியைத் தாங்கி, நோய்களைத் தாங்கி, அதிக மகசூலைத் தரவல்லவை. எனவே, உழவர்கள் இந்த இரகங்களைப் பயிரிட வேண்டும். பருவமழைக்குத் தக்கபடி, இந்த இரகங்களை, மானாவாரியாக ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் விதைப்பது மிகவும் நல்லது.

நிலத் தயாரிப்பு

நீர்த் தேங்காத, மணற் பாங்கான செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் வரகுப் பயிருக்கு ஏற்றவை. கோடையில் சட்டிக் கலப்பை மூலம், நிலத்தை ஆழமாக உழ வேண்டும். இதன் மூலம், பூச்சித் தாக்குதல் மற்றும் களைகளில் இருந்து பயிரைக் காக்கலாம். நிலத்தில் காணப்படும் முந்தைய பயிர்களின் கழிவுகளை நீக்கி நிலத்தைச் சுத்தம் செய்து, வடிகால் வசதியுடன் நிலத்தைத் தயாரித்தல் அவசியம்.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, மூன்று பொட்டலம் அசோபாஸ் கலந்த, குளிர்ந்த அரிசிக் கஞ்சியில் சேர்த்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். விதைப்பான் மூலம் விதைத்தால், பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும். இதனால், அதிக மகசூலைப் பெறலாம். கொர்ரு அல்லது விதைப்பான் மூலம் வரிசை விதைப்புச் செய்தால், நிலத்தின் ஈரம் காய்வதற்கு முன், அதிகப் பரப்பில் விதைக்கலாம்.

விதையளவு மற்றும் இடைவெளி

வரிசையில் விதைக்க, எக்டருக்கு பத்து கிலோ விதைகளும், கை விதைப்பாக விதைக்க, எக்டருக்கு 12.5 கிலோ விதைகளும் தேவைப்படும். மகசூலின் அளவைத் தீர்மானிப்பதில் பயிர் இடைவெளி முக்கியமாக உள்ளது. எனவே, வரிசைக்கு வரிசை 25 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளி இருக்கும்படி பயிர்களைப் பராமரிக்க வேண்டும்.

உரமிடுதல்

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 5-10 டன் மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண்ணைப் பரிசோதனை செய்யா விட்டால், எக்டருக்கு 40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும்.

விதைக்கும் போதே அடியுரமாக, மணி, சாம்பல் சத்துகளை முழுமையாக இட்டுவிட வேண்டும். தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதமுள்ள பாதியை மேலுரமாக, விதைத்த 25-30, 40-45 ஆகிய நாட்களில் இரண்டு முறையாகப் பிரித்து இட வேண்டும். பருவமழை சரியாக இல்லாத காலத்தில், மேலுரமாக இட வேண்டிய தழைச்சத்தை ஒரே தடவையில் இட்டு விடலாம்.

களை நிர்வாகம்

வரிசை விதைப்புச் செய்திருந்தால், 2-3 முறை இடையுழவும், ஒருமுறை கைக்களையும் எடுக்க வேண்டும். கை விதைப்பு என்றால், இடையுழவு செய்ய முடியாது. அதனால், இரண்டு முறை கைக்களை எடுக்க வேண்டும். விதைத்த 18-20 நாளில், பயிர்களைக் கலைத்து விட்டு, தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

இறவையில், விதைத்த நாளிலும், விதைப்புக்குப் பிறகு மூன்றாம் நாளிலும் நீரைப் பாய்ச்ச வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப, 10-15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மானாவாரி என்றால், பயிர் வளர்ச்சியின் முக்கிய நிலைகளான, பூக்கும் போதும், பால் பிடிக்கும் போதும் மழை பெய்யவில்லை என்றால், பண்ணைக் குட்டையில் உள்ள நீரை எடுத்து, தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் மூலம் பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

கரிப்பூட்டை நோயிலிருந்து வரகைப் பாதுகாக்க, மான்கோசெப் என்னும் பூசணக் கொல்லியை, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். முன்பருவ விதைப்பு முறை மற்றும் எக்டருக்கு ஒன்றரை மடங்கு விதையளவு என்னும் முறையின் மூலம், தண்டு ஈக்களின் தாக்குதலில் இருந்து வரகுப் பயிர்களைக் காக்கலாம்.

அறுவடை

கதிர்கள் நன்கு விளைந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். பிறகு, கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்துத் தானியத்தைப் பிரித்து, நன்கு காய வைத்துச் சுத்தம் செய்து காற்றுப் புகாமல் சேமித்து வைக்க வேண்டும். வரகுக் கூளத்தையும் நன்கு உலர்த்திச் சேமித்து வைத்தால், கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.

மகசூல்

நல்ல இரகங்கள் என்றால், எக்டருக்கு 1,500-2,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இத்துடன் எக்டருக்கு 5-6 டன் தீவனமும் கிடைக்கும்.


வரகு DR.P.MURUGAN

முனைவர் பெ.முருகன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் -603203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading