My page - topic 1, topic 2, topic 3

வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

ருவநிலை மாற்றம், குறைவான மழை நாட்கள் மற்றும் மழைப் பொழிவு, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய காணங்களால், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சீரான பாசனத்தைக் கொடுக்க முடியவில்லை.

உலகில் 70 சத நீர் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 2030 இல் உலக நீர்த் தேவையின் காரணமாக 50 சத நீரே கிடைக்கும். எனவே, நீரைச் சேமித்துச் சிக்கனமாகப் பயன்டுத்துவதே சாலச் சிறந்தது.

இந்தச் சூழ்நிலைக்குப் புத்துயிர் ஊட்டுவது தான் ஹட்ரோஜெல் பாலிமர். இது அதிகளவில் நீரையும் சத்துகளையும் உறிஞ்சிக் கொண்டு, பயிருக்குத் தேவையான நேரங்களில் அதன் வேர்ப் பகுதியில் வெளியிடும்.

இதனால், நீர் மற்றும் சத்துகளின் பயன்பாட்டுத் திறன் கூடுவதுடன், வறண்ட மற்றும் மித வறண்ட பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய முடியும்.

ஹெட்ரோஜெல் பாலிமர், பாகுநிலைய அடையும் தன்மையுள்ள, தளர்வான, குறுக்கு இணைவுள்ள, முப்பரிமானக் கூட்டமைப்புள்ள பல்துறை பாலிமர் சங்கிகள் ஆகும்.

இவை, தமது எடையைப் போல நூறு மடங்கு நீரை, மிகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிக் கொள்ளும். இதில், ஸ்டார்ச் கோ பாலிமர் குழுக்கள், பாலிவினை ஆல்கஹால், குறுக்கு இணைவு பாலி அக்ரலமைட்ஸ் என, மூன்று வகையான பாலிமர் குழுக்கள் உள்ளன.

ஹைட்ரோஜெல்லை மண்ணில் கலக்கும் போது, படி உருவமற்ற ஜிலேட்டின் உருவாகி, நீரை உறிஞ்சும் வேலை நடக்கிறது. பிறகு, தேவைக்கு ஏற்ப, பொறுமையாக நீரை வழங்குகிறது.

தோட்டக்கலையில் மகத்துவம்

விதைகளின் மீது பூசப்படும் ஹைட்ரோஜெல், முளைக்கும் திறனை ஊக்கப்படுத்துகிறது. நீரை உறிஞ்சி உருவமாற்றம் பெற்ற ஜெல், தாவர வளர்ச்சியை அதிகப்டுத்துகிறது.

தாவரத்தின் வறண்ட புள்ளியில் நீரை அளிக்கிறது. இதனால், வறட்சியில் வாழும் திறனைப் பயிர் பெறுகிறது. இது, தோட்டக் கலையில் பின்பற்றும் காய்ச்சலும் பாய்ச்சலும் உத்தியைச் செயல்படுத்தும் விதமாக அமைகிறது.

நாற்றுகளின் வேரை ஹைட்ரோஜெல் கரைசலில் நனைத்து நட்டால், பயிர்களில் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை மிகும். களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லியுடன் கலந்து தெளித்தால், மிகவும் தாமதமாக வெளிப்பட்டு, நெடுநாட்கள் வரை, களை மற்றும் பூச்சிகளிடம் இருந்து பயிரைப் பாதுகாக்கும். பலவகை மண்ணில் நீரைப் பாதுகாத்து அளிக்கும்.

நீரில் சத்துகளைக் கலந்து விட்டால், அவற்றைக் குறிப்பிட்ட இடைவெளில் வெளியிடும். மண்ணுடன் பின்னிப் பிணைவதால் மண்ணரிப்பைத் தடுக்கும். மண்ணின் நீர் உறிஞ்சும் திறனைக் கூட்டும்.

மண்ணின் கடினத் தன்மையை நீக்கி, வேர்கள் நன்கு வளர ஏதுவாகும். பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, பாசன இடைவெளியைக் கூட்டி, நீர்ச் செலவைக் குறைக்கும்.

மண்ணிலுள்ள நுண் சத்துகள் நீரில் கரைந்து வீனாவதைத் தடுக்கிறது. இதனால், முக்கிய மற்றும் நுண் சத்துகளின் தேவை குறைவதால், உரச் செலவு குறையலாம்.

மண்ணின் அமைப்பை மாற்றுவதால், பயிர்கள் விரைவாக வளரும். நீர்த் தேங்குவதால் ஏற்படும் வேரழுகல் போன்ற நோய்களைத் தடுக்கும் விதமாக, நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.


முனைவர் செ.ஸ்ரீதரன், முனைவர் பா.ச.சண்முகம் முனைவர் ப.அதியமான். வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி – 636 809.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks