வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

வேளாண்மை

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன்.

வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு அதிகமாகும். இவை பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டி, நீடித்த நிலைத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இந்தியாவில் பரவலாக மண்வளம் குறைந்திருப்பதால் அதிக மகசூலை எட்ட முடியவில்லை.

அடுத்து, நிலத்தில் இடப்படும் இரசாயன உரங்களால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இருப்பினும் தழைச்சத்தின் பயனைக் கூட்டுவதில், வேர் முடிச்சுகளை உருவாக்கும் தாவரங்களுடன் இணைந்து ரைசோபியம் செயல்படுகிறது. மணிச்சத்தின் பயனைக் கூட்டும் நுண்ணுயிர்களும் உள்ளன.

ஒருங்கிணைந்த பயிர் உற்பத்தித் தொழில் நுட்பத்தில், நுண்ணுயிர் உரங்களை இடுவதால், மண்வளம் மேம்படுவதுடன், சுற்றுச் சூழலும் காக்கப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தினால், 30 சத தழைச்சத்து மற்றும் 20 சத மணிச்சத்தைச் சேமிக்கலாம்.

சில நுண்ணுயிர்கள் தழைச்சத்தை நிலை நிறுத்துவதுடன், பயிர் வளர்ச்சி ஊக்கிகளான, இன்டோல் அசிட்டிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இதனால், அதிகளவில் வேர்கள், தூர்கள் மற்றும் இலைகளுடன் பயிர்கள் விரைவாக வளர்கின்றன.

உயிருள்ள செல்கள் அடங்கிய வித்துகளின் தொகுப்பு உயிர் வித்து எனப்படுகிறது. இதை மண் வழியாகப் பயிர்கள் அல்லது விதைகளுடன் சேர்த்து இடும் போது, அது பல்கிப் பெருகி வேருடன் இணைந்து செயல்பட்டு, பயிர் வளர்ச்சியை மேம்படுத்தி மகசூலைக் கூட்டுகிறது.

பயிர்களுக்குக் கிடைக்காத நிலையில் உள்ள சத்துகள் மீது வினை புரியும் நுண்ணுயிர்கள், அவற்றைப் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கின்றன. இன்றைய சூழலில் சுற்றுப்புறக் காரணிகளால் நுண்ணுயிர்கள் இயக்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் உருவாக்கப்படும் நுண்ணுயிர்கள் இதற்குத் தீர்வாக உள்ளன.

காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்துதல், மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கொடுத்தல் ஆகியவற்றில் திறன் பெற்ற நுண்ணுயிர்களை உயிர் உரங்கள் என்கிறோம்.

ரைசோபியம், அசோஸ் பயிரில்லம், அசட்டோ பேக்டர், நீலப்பச்சைப் பாசி, அசோலா ஆகியன, தழைச்சத்தை நிலை நிறுத்தும் நுண்ணுயிர்கள். பேசில்லஸ், சூடோமோனாஸ் ஆகியன மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் நுண்ணுயிர்கள்.

பூசண வகையைச் சேர்ந்த வெசிக்குளார் ஆர்பஸ்குலார் வகை வேர் உட்பூசணம், வேர்கள் போக முடியாத இடங்களுக்குச் சென்று, மணிச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தரும்.

ரைசோபியம்

இது, பயிர்களின் நாற்றுப் பருவத்தில் உயிர் வித்துகளை இணைப்பதன் மூலம், பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேகமாக வளர்ந்து, சிம்பு வேர்களின் அருகிலிருந்து பயிர் வளர்ச்சிக்கு உதவும் பாக்டீரியா, ரைசோ பாக்டீரியா எனப்படுகிறது. இது இயங்கும் விதத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படும்.

ரைசோபியம், பாக்டீரிய இனத்தைச் சார்ந்த நுண்ணுயிர் ஆகும். இது, அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்களில், வேர் முடிச்சுகளை உண்டாக்கும்.

காற்றிலுள்ள தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தும். ரைசோபியத்தை இட்டால், தழைச்சத்து உரத்தைச் சேமிப்பதுடன், மகசூலும் 20 சதம் கூடும். வேர்களில் இருந்து கசியும் கசிவும், வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் உயிர்ப் பொருள்களும் மண்வளத்தை மேம்படுத்தும்.

வேளாண்மை

பயன்படுத்தும் முறை

பத்துக் கிலோ விதைகளுக்கு ஒரு பொட்டலம் ரைசோபியம் போதும். இதை, ஆறிய அரிசிக்கஞ்சி, இலைமட்கு மண் அல்லது கரித்தூள் கலவையுடன் கலக்க வேண்டும். பிறகு, இதில் விதைகளை இட்டு, எல்லா விதைகளிலும் இக்கலவை ஒட்டும்படி நன்றாகக் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

அசோஸ் பயிரில்லம்

பாக்டீரிய இனத்தைச் சார்ந்த இந்த உயிர் உரம் எல்லாப் பயிர்களுக்கும் பயன்படும். காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தும் அசோஸ் பயிரில்லம், பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் பயிர்கள் வேகமாக வளர்கின்றன. கதிர்களில் அதிக மணிகள் பிடிப்பதால் 25 சதம் வரையில் அதிக மகசூல் கிடைக்கிறது.

பயன்படுத்தும் முறை

நேரடி விதைப்பில் விதையுடன் கலப்பதுடன் நிலத்திலும் இட வேண்டும். நாற்று விட்டு நட்டால், விதையுடன் கலப்பது, நாற்றுகளின் வேர்களை நனைப்பது, நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் இடுவது போன்ற முறைகளில், அசோஸ் பயிரில்லத்தைப் பயன்படுத்த வேண்டும்.

விதையுடன் கலத்தல்: இரண்டு பொட்டல அசோஸ் பயிரில்லத்தை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலக்க வேண்டும். பிறகு, இதில் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை இட்டு, நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு, இந்த விதைகளை நிழலில் 30 நிமிடம் உலர்த்தி உடனே விதைக்க வேண்டும்.

நாற்றங்காலில் இடுதல்: ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்காலில், நான்கு பொட்டலம் அசோஸ் பயிரில்லத்தை, 10 கிலோ தொழுரத்தில் கலந்து இட வேண்டும்.

வேர்களை நனைத்தல்: இரண்டு பொட்டலம் அசோஸ் பயிரில்லத்தை, 40 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். இதில், நாற்றுகளின் வேர்களை, 20 நிமிடம் வரை நனைய விட்டு நட வேண்டும்.

நடவு வயலில் இடுதல்: ஏக்கருக்கு நான்கு பொட்டலம் அசோஸ் பயிரில்லம், 20 கிலோ தொழுவுரம் வீதம் எடுத்துக் கலந்து, நடுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன் நிலத்தில் இட வேண்டும்.

வளர்ந்த பயிர்களுக்கு இடுதல்: ஒரு மரத்துக்கு 20-50 கிராம் அசோஸ் பயிரில்லம், ஒரு கிலோ தொழுவுரம் வீதம் எடுத்துக் கலந்து வேர்ப் பகுதியில் இட்டு மண்ணை அணைத்து விட வேண்டும்.

பாஸ்போபாக்டீரியா

மண்ணிலுள்ள மணிச்சத்து, பயிருக்குப் கிடைப்பதைப் பொறுத்தே மகசூலும் இருக்கும். அதாவது, நிலத்தில் இடப்படும் மணிச்சத்து, மண்ணிலுள்ள கனிம வேதியியல் பண்புகளைப் பொறுத்து மாறும்.

அதாவது, அமில கார வகையிலுள்ள சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், இரும்பு ஆகிய சத்துகளில் உள்ள அலுமினியம் மற்றும் ஆக்ஸைடுகள், சிலிக்கேட்டுகள், மணிச்சத்தைப் பயிருக்குக் கிடைக்காத வகையில் மாற்றி விடும்.

இதனால் மணிச்சத்தின் பயன் 10-30 சதம் வரையில் பயிர்களுக்குக் குறைவாகவே கிடைக்கும். எனவே, மணிச்சத்து உரத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வைத் தருகிறது பாஸ்போ பாக்டீரியா. இந்த நுண்ணுயிர்கள் தங்கள் செல்களில் சுரக்கும் அமிலங்கள் மூலம், கரையாமல் இருக்கும் மணிச்சத்தை, பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித் தரும். இதனால், பயிர்களில் அதிகளவில் பூக்கள் தோன்றி, விதை உற்பத்தி அதிகமாகும்.

இதை நிலத்தில் இட்டால், தேவையான மணிச்சத்தில் 25 சதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். பாஸ்போ பாக்டீரியாவை, ரைசோபியம், அசோஸ் பயிரில்லத்தில் கலந்து இட்டால், இவற்றின் செயல்திறன் கூடும்.

பாஸ்போ பாக்டீரியா, உணவுப் பொருள்களின் தரம் மற்றும் புரத அளவைக் கூட்டும். எக்டருக்கு 200-500 கிலோ மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.

வெசிக்குளார் ஆர்பஸ்குலார் வேர் உட்பூசணம்

மணிச்சத்து, துத்தநாகம், கந்தகம் ஆகிய சத்துகளை, செடிகளின் வேர்ப் பகுதியில் பரிமாறுவதில், ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூசணம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குளோமஸ், ஜிகாஸ்போரா, அக்வா லோஸ்போரா, ஸகிளிரோசிஸ்ட், என்டோஜின் ஆகிய பேரினங்கள் இதற்கு உதவுகின்றன. இத்தகைய உயிரிகள் சத்துகளைச் சேமித்து வைக்க ஏதுவாக, சூல், தண்டு போன்ற வைசிக்கிள், ஆர்பஸ்கிள்ளைக் கொண்டுள்ளன.

இந்த, ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூசணத்தை, பெரியளவில் உற்பத்தி செய்வது கடினம். ஆயினும், இதனால் பயிர்கள் அடையும் நன்மைகள் உறுதியாகி உள்ளன.

பயன்படுத்தும் முறை

நாற்றங்காலில் இட, சதுர மீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணம் போதும். விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் 2-3 செ.மீ. ஆழத்தில் இட வேண்டும். நெகிழிப் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுகளுக்கு, ஒரு பைக்கு 10 கிராம் பூசணம் போதும்.

பைகளுக்கான மண் கலவையைத் தயாரிக்கும் போது, 100 கிலோ மண் கலவைக்கு, 10 கிலோ வேர் உட்பூசணம் வீதம் கலக்க வேண்டும். வளர்ந்த பயிர்களுக்கு, ஒரு மரத்துக்கு 200 கிராம் உட்பூசணம் தேவை. இதை வேர்ப் பகுதியில் இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

நீலப்பச்சைப்பாசி

நீலப்பச்சைப் பாசியில், நாஸ்டாக், அனபீனா, டாலிபோதிரிக்ஸ், ஆலோசீரா, பிளக்டோநிமா, ஆசில்ல டோரியா எனப் பல வகைகள் உள்ளன. ஒரு எக்டருக்கு மண் கலந்த 10 கிலோ நீலப்பச்சைப் பாசித் துகள்கள் தேவை.

இதை, நாற்று விட்ட பத்தாம் நாளில் நெல் வயலில் இட வேண்டும். இதன் மூலம், 10-30 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும். தொடர்ந்து 3-4 முறை நெல் வயலில் இட்டால், அந்தப் பருவத்தில் மட்டுமின்றி, அதற்குப் பின்வரும் பருவத்திலும் நெல் மகசூல் அதிகமாகும்.

அசோலா

பெரணிவகை நீர்த்தாவரமான இது, நெல் வயல்களில், நீர் நிலைகளில் இருக்கும். அசோலா இலைத் திசுக்களில் அனபீனா என்னும் நீலப்பச்சைப் பாசி இணைந்து செயலாற்றித் தழைச்சத்தைச் சேர்க்கிறது.

நெல் நடவு முடிந்து ஒருவாரம் கழித்து அசோலாவைப் பயிருடன் வளர விட்டால், வயல் முழுவதும் விரைவில் பரவித் தழையுரத்தைக் கொடுக்கும். முதல் களை எடுக்கும் போது சேற்றில் மிதித்து அமிழ்த்தி விட்டால், பத்து நாட்களில் மட்கி, நெற்பயிருக்குத் தழைச்சத்தைக் கொடுக்கும்.

மீதமுள்ள அசோலா மீண்டும் 10-15 நாட்களில் நன்கு வளர்ந்து, மேலும் ஒரு முறை தழையுரமாகும். இப்படி நெற்பயிருடன் அசோலாவைச் சேர்த்து வளர்த்து, தழையுரமாக இட்டால், எக்டருக்கு 30-40 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும். மண்வளமும் மகசூலும் கூடும்.

கவனிக்க வேண்டியவை

காலாவதி ஆகாத மற்றும் பயிருக்கு ஏற்ற நுண்ணுரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை, உலர்ந்த, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி, களைக் கொல்லிகளுடன் கலந்து இடக்கூடாது.

விதை நேர்த்தியின் போது, முதலில் பூசணக் கொல்லியையும், கடைசியில் உயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். ஆறிய அரிசிக்கஞ்சி அல்லது வெல்லக் கரைசலில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரசாயன உரங்களுடன் உயிர் உரங்களைக் கலக்கக் கூடாது. வெய்யில் நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.


வேளாண்மை KRISHNAKUMAR

முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் இரா.அருண்குமார், முனைவர் செல்வி ரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading