வேலிமசால் விதை உற்பத்தி!

வேலிமசால் 47 48 heading pic 7dda33c88f57ed0b0c07dd057e8a3a62

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.

தீவனப் பயிர்களை, புல்வகை, தானிய வகை, பயறுவகை, மரவகை என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் பயறுவகைத் தீவனப் பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3-4 சதம் புரதமும், கால்சியமும் செறிந்துள்ளன.

புல்வகைத் தீவனங்களுடன் பயறுவகைத் தீவனங்களையும் சேர்த்துக் கொடுத்தால் தான் தேவையான சத்துகள் கால்நடைகளுக்குக் கிடைக்கும். ஆடு, மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய மற்றும் புல்வகைத் தீவனத்தையும், ஒரு பங்கு பயறு வகைத் தீவனத்தையும் வழங்க வேண்டும்.

பயறுவகைத் தீவனப் பயிர்களைப் பயிரிட்டால், அவற்றின் வேர்கள் மூலம் நைட்ரஜன் சத்து மண்ணில் நிலைப்படும். இதனால், நிலத்தில் தழைச்சத்து கூடும். குதிரை மசால், வேலிமசால், காராமணி, முயல் மசால், சிரேட்ரோ, சங்கு புஷ்பம், டெஸ்மோடியம் போன்றவை, முக்கியமான பயறுவகைத் தீவனப் பயிர்கள் ஆகும். இங்கு வேலிமசாலின் சிறப்புகள் மற்றும் தரமான விதை உற்பத்திக்கான உத்திகளைப் பார்க்கலாம்.

வேலிமசாலின் சிறப்புகள்

எல்லா மண்ணிலும் எல்லாப் பருவத்திலும் பயிரிடலாம். இது, பல்லாண்டுப் பயிராகும். ஒரு செடியில் 15-20 கிளைகள் கிளைக்கும். ஓராண்டில் எக்டருக்கு 80-100 டன் பசுந்தீவனம் கிடைக்கும். விதைத்த 80 நாட்களில் முதல் அறுவடையும், பின்பு 40-45 நாட்களுக்கு ஒருமுறையும் அறுவடை செய்யலாம்.

அதாவது, ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இலைகள் மிகவும் சிறிதாக, மெல்லியதாக இருப்பதால், கால்நடைகளுக்கு எளிதில் செரிக்கும். பூச்சி, நோய்களைத் தாங்கி வளரும். எனவே, பயிர்ப் பாதுகாப்புத் தேவைப்படாது.

வறட்சிக் காலத்தில் வளர்ச்சியில்லா விட்டாலும் காய்ந்து போகாது. மீண்டும் கொஞ்சம் மழை பெய்தாலும், கொழுக்கட்டைப் புல்லைப் போலப் பசுமையாக வளரும். இதில் 19 சதம் புரதம், 27 சதம் உலர் தீவனத் தன்மை, 55 சதம் செரிக்கும் தன்மை இருப்பதால், ஆடு, மாடுகள் விரும்பி உண்ணும்.

எளிதில் செரிப்பதால், அனைத்துச் சத்துகளும் விரைவில் உறிஞ்சப்பட்டு, பால் மற்றும் இறைச்சி உற்பத்திப் பெருகும். மேலும், நலமும் சினைப் பிடிப்பும் கால்நடைகளில் மேம்படும்.

விதை உற்பத்தி உத்திகள்

நிலத் தயாரிப்பு: இரும்புக் கலப்பையால் 2-3 முறை நன்கு உழ வேண்டும். பின்பு, 50 செ.மீ. இடைவெளியில், பார்களையும் அவற்றுக்கு இடையில் வாய்கால்களையும் அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி: எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளைக் கொதிநீரில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து, குளிர்ந்த நீரில் 10 மணி நேரம் ஊற வைத்து, பின் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால், முளைப்புத் திறன் கூடும்.

உர நிர்வாகம்: அடியுரமாக, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம், 25 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை இட வேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னும், பிறகு, ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் கைக்களை எடுக்க வேண்டும்.

பாசனம்: விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். பின்பு மூன்றாம் நாளும், அடுத்து 10-15 நாட்களுக்கு ஒருமுறையும், மண் மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.

வேலிமசாலை விதைக்காகப் பயிரிட்டால், 50 சதம் பூக்கும் போது, ஏக்கருக்கு 200 பி.பி.எம். சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் நீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில், மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனால், தரமான விதைகள் கிடைக்கும்.

அறுவடை: பூத்து 35 நாட்களில் காய்கள் பழுப்பு நிறமாக மாறியதும் அறுவடை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால், காய்கள் வெடித்துச் சிதறி விடும். எக்டருக்கு 500-625 கிலோ விதைகள் கிடைக்கும்.

விதைகளின் ஈரப்பதத்தை 12%க்குக் குறைவாக உலர்த்தி, பி.எஸ்.எஸ். 14×14 அளவுள்ள சல்லடையில் சலித்து, விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, துணிப்பையில் 8-10 மாதங்கள் வரையிலும், உள்ளுறை கொண்ட சாக்குப் பைகளில் 12-15 மாதங்கள் வரையிலும், 700 கேஜ் அடர் நெகிழிப் பைகளில் 15 மாதங்கள் வரையிலும் சேமித்து வைக்கலாம்.


Pachai boomi Shanmuganathan

முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் இல.சித்ரா, முனைவர் இரா.நாகேஸ்வரி, கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி, திருச்சி -639 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading