செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.
பயிர்களில் சாற்றை உறிஞ்சும் பூச்சியான வெள்ளை ஈ, பயிர்களைக் கடுமையாகத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இது, இலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சும் சிறிய பூச்சியாகும். ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது, இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
பெண் பூச்சி இலைகளின் அடியில் முட்டைகளை இடும். இவற்றில் இருந்து வெளிவரும் இளம் பூச்சிகள், பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். கூட்டுப்புழு, இலையின் அடியில் முட்டை வடிவில் இருக்கும். முதிர்ந்த பூச்சி, மஞ்சள் நிறத்தில் வெள்ளை மெழுகைப் போல இருக்கும்.
வெண்டை, தக்காளி, கத்தரி, வாழை, கரும்பு, பயறுவகைப் பயிர்கள், பருத்தி, பழப்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை இப்பூச்சி தாக்கும். வெண்டையில் தேமல் நோயைப் பரப்பும். பாசி மற்றும் உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை உண்டாக்கும்.
தக்காளி மற்றும் பிற காய்கறிப் பயிர்களில் சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், இலைகள் மஞ்சளாகி விடும். மொட்டுகள், பூக்கள் உதிர்ந்து விடும்.
கரும்புத் தோகையில் வெள்ளை மற்றும் கரும் புள்ளிகள் தேன்றும். தாக்குதல் அதிகமாக இருந்தால், தோகைகள் எரிந்ததைப் போலாகி விடும். தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகளவில் உள்ளது.
இது, ஓலைகளின் அடியில் வட்டம் அல்லது சுருள் வடிவில் முட்டைகளை இடும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், 30 நாட்கள் வரையில் ஓலையின் சாற்றை உறிஞ்சி ஈக்களாக மாறியதும் பறந்து சென்று அடுத்தடுத்த தென்னைகளைத் தாக்கும்.
இந்த ஈக்கள் வெளிவிடும் பசையைப் போன்ற கழிவு, ஓலைகளில் படர்வதால் கரும் பூசணம் ஏற்படும். இதனால், ஓலைகளில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இட வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறியை ஏக்கருக்கு 5-6 இடங்களில் வைத்து, இதன் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும். சாகுபடியில் பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். வயல் சுத்தமாக இருக்க வேண்டும்.
உயிரியல் முறையில், ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பேர்ட்டி சில்லியம் லெக்கன் வீதம் கலந்து தெளிக்கலாம். தழைச்சத்தைத் தேவைக்கு மேல் இடக்கூடாது. பயிர் இடைவெளி போதுமான அளவில் இருக்க வேண்டும். ஐந்து சத வேப்பவிதைச் சாறு அல்லது மூன்று சத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம்.
முனைவர் காயத்ரி சுப்பையா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!