வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

வெள்ள நெற்பயிரை

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர்.

ழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நெற்பயிரை, தகுந்த உத்திகளைக் கையாள்வதன் மூலம் காப்பாற்ற முடியும். இளம் பயிர் மழைநீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டு இருந்தால், அதே இரக நாற்றுகளை நடவு செய்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

தொடக்க நிலை: வடிகால் வசதியுள்ள இடங்களில், வயலில் தேங்கிய நீரை உடனடியாக வடித்து விட்டு, மேலுரமாக, ஏக்கருக்கு அமோனியா குளோரைடு 42 கிலோ அல்லது அமோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது யூரியா 22 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன், 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கைக் கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து, 17 கிலோ பொட்டாசைக் கலந்து இட வேண்டும். இதனால், சத்துகள் விரயம் குறைந்து, பயிர்களுக்குக் கிடைக்கும்.

மத்திய நிலை: பாதியளவு நீரில் மூழ்கியுள்ள பயிர்கள், மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாறலாம். இது, துத்தநாகம் மற்றும் தழைச்சத்துக் குறையால் ஏற்படும்.

இதற்கு, ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் 2 கிலோ யூரியா, ஒரு கிலோ சல்பேட்டைக் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலுரம் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சூல் பருவம் மற்றும் பூக்கும் பருவம்: இந்தப் பருவங்களில் உள்ள பயிர்களைக் காக்க, ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 200 லிட்டர் நீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, இந்தக் கரைசலுடன் 2 கிலோ பொட்டாஷ், 180 லிட்டர் நீரைக் கலந்து, மாலையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூக்கும் போது இன்னொரு முறை தெளிக்க வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்ப் பராமரிப்பு

தொடர்ந்து வானம் மேக மூட்டமாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து நீர் அதிகமாகத் தேங்கி நின்றாலும், மழைக்குப் பிறகு ஏற்படும் பனி மூட்டத்தாலும், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தெரியும். பாதிப்புக்கு ஏற்ப, பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

குருத்துப்பூச்சி: பொருளாதாரச் சேதநிலையான 10 சதக் குருத்துகள் காய்தல் அல்லது ஒரு மீட்டர் இடைவெளியில் 2 முட்டைக் குவியல் இருந்தால், ஏக்கருக்கு 60 மில்லி குளோரோடே ரேனிலிபுருள் 18.5 எஸ்.சி. அல்லது 20 மில்லி புளுபென்டிமைட் 39.35 எஸ்.சி. வீதம் தெளிக்க வேண்டும்.

முட்டைக் குவியல் தெரியும் போது, டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு 2 சி.சி. வீதம் தொடர்ந்து இருமுறை, ஒரு வார இடைவெளியில் விட வேண்டும்.

இலைச் சுருட்டுப்புழு: வளர்ச்சிப் பருவத்தில் 10 சத இலைகளும், பூக்கும் போது 5 சத இலைகளும் பாதித்து இருந்தால், ஏக்கருக்கு 500 மில்லி குளோர்பைரிபாஸ் 20 இ.சி. அல்லது 60 மில்லி குளோரோடே ரேனிலிபுருள் 18.5 எஸ்.சி. அல்லது 20 மில்லி புளுபென்டிமைட் 39.35 எஸ்.சி. வீதம் தெளிக்க வேண்டும்.

விளக்குப்பொறி மூலம் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் போது, ஏக்கருக்கு 2 சி.சி. டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணி வீதம் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை தொடர்ந்து விட வேண்டும்.

கூட்டுப்புழு: நடவு வயலில் ஒரு லிட்டர் ம.எண்ணெய்யை 3 கிலோ மணலில் கலந்து சமமாகத் தூவிய பிறகு, வயலின் இரு ஓரங்களில் இருந்து இரண்டு பேர், ஒரு கயிற்றைப் பயிரின் பாதி உயரத்தில் பிடித்துக் கொண்டு நடந்தால் கூட்டுப் புழுக்கள் அனைத்தும் வயலிலுள்ள நீரில் விழுந்து அழிந்து விடும்.

அல்லது ஏக்கருக்கு 400 மில்லி மானோ குரோட்டாபாஸ் 36 எஸ்.எல். மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

புகையான்: தூருக்கு ஒரு தத்துப்பூச்சி இருந்தால், ஏக்கருக்கு 50 மில்லி இமிடா குளோபிரிட் 17.8 எஸ்.எல். அல்லது 500 மில்லி பைப்ரினில் 5 எஸ்.சி. வீதம் தெளிக்க வேண்டும்.

பச்சைத் தத்துப்பூச்சி: தழைப் பருவத்தில் குத்துக்கு 5 தத்துப் பூச்சிகள் அல்லது பூக்கும் பருவத்தில் 10 தத்துப் பூச்சிகள் இருந்தால், ஏக்கருக்கு 50 மில்லி இமிடா குளோபிரிட் 17.8 எஸ்.எல். அல்லது 500 மில்லி பைப்ரினில் 5 எஸ்.சி. வீதம் தெளிக்க வேண்டும். மேலும், இந்தத் தத்துப்பூச்சி துங்ரோ வைரஸ் நோயையும் பரப்பும்.

ஆனைக்கொம்பன் ஈ: பொருளாதாரச் சேதநிலை 10 சத வெங்காய இலைகள் தெரிந்தால், ஏக்கருக்கு 40 கிராம் தையமீத்தாக்சம் 25 WG அல்லது 500 மில்லி பைப்ரினில் 5 SC தெளிக்க வேண்டும்.

குலைநோய்: குலைநோய் தெரிந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் எதிர் உயிரி அல்லது 200 கிராம் கார்பென்டாசிம் அல்லது 200 கிராம் டிரைசைகுளோசோல் பூசண மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பாக்டீரிய இலைக்கருகல் நோய்: நோயின் அறிகுறி தெரிந்ததும், தழைச்சத்து உரம் இடுவதைத் தவிர்க்க வேண்டும், மேலும், 20 சத, பசுஞ்சாணக் கரைசல், அதாவது 40 கிலோ புதிய சாணத்தை 100 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைத்து, தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டர் நீரைக் கலந்து 200 லிட்டராக்கித் தெளிக்க வேண்டும்.

அல்லது ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் அல்லது 120 கிராம் ஸ்ட்ரெப்டோமைசீன் சல்பேட், டெட்ரா சைக்கிளின் கலந்த மருந்துக் கலவை மற்றும் 300 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை நீரில் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.


PB_Anuradha

முனைவர் அ.அனுராதா, முனைவர் மு.இராமசுப்ரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading