செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.
வாழையை 28 துளைப்பான் இனங்கள் உள்ளிட்ட 41 வகைப் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் தாக்கி உற்பத்தியைக் குறைக்கின்றன. பராமரிப்பு முறையாக இருப்பின், வாழையில் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
தண்டுக் கூன்வண்டு
தாய்க் கூன்வண்டு தனது கூரிய மூக்கினால் இலையுறையில் பிளவை உண்டாக்கி முட்டைகளை இடும். இந்தப் பிளவிலிருந்து பழுப்பு நிறத்தில் திரவம் வெளிவரும். இது, கூன்வண்டுத் தாக்குதலின் முதல் அறிகுறியாகும்.
முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தண்டைக் குடைந்து திசுக்களைத் தின்னும். திசுக்கள் சிவப்பாக மாறி அழுகி விடும். ஒரு தண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புழுக்கள் இருக்கும்.
ஆறு மாதம் அல்லது அதற்கு மேலான வாழைகளில் தான் சேதம் இருக்கும். இந்த வண்டு தாக்கினால் மரம் வலுவிழந்து, லேசான காற்றிலும் ஒடிந்து விடும். இதன் தாக்கமுள்ள நிலத்தில் எடுக்கப்படும் கன்றுகள் மூலம், இவ்வண்டின் முட்டைகள் அல்லது அதன் பருவங்கள் அடுத்த இடத்துக்குப் பரவி விடும்.
இது, நேந்திரன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன் வகைகளை மிகுதியாகத் தாக்கும். இத்தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், கோடையில் தீவிரமாக இருக்கும்.
மேலாண்மை
கூன்வண்டுத் தாக்கமுள்ள நிலத்தில் இருந்து கன்றுகளை எடுக்கக் கூடாது. தாக்கப்பட்ட மரங்களைப் பிடுங்கி எரிப்பதுடன், கூன் வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும். தோப்பில் ஆங்காங்கே 1-2 அடி நீளமுள்ள வாழைத்தண்டைப் பிளந்து வைத்து, வண்டுகளின் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும்.
மேலும், இவ்வகைத் தண்டுகளில் மோனோ குரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தை, ஊசி மூலம் தண்டுக்குள் செலுத்தி, கூன் வண்டுகளின் புழுப் பருவங்களை அழிக்கலாம்.
பாதி நீர், பாதி மருந்து வீதம் கலந்து, பாதிக்கப்பட்ட தண்டுப் பகுதிக்குக் கீழே, தரை மட்டத்தில் இருந்து 45 செ.மீ உயரத்தில் 2 மில்லி மருந்துக் கலவையைச் செலுத்த வேண்டும். அதற்கு எதிர்ப்புறத்தில் 150 செ.மீ. உயரத்தில் 2 மில்லி மருந்துக் கலவையைச் செலுத்த வேண்டும்.
ஒரு மரத்துக்கு ஒருமுறை 4 மில்லி மருந்துக் கலவையை ஊசியால் செலுத்தி, கூன் வண்டின் தாக்குதலைத் தடுக்கலாம். இலை இடுக்குகளில் கார்போபியுரான் மருந்துடன் மணலைச் சமமாகக் கலந்து இட்டும் இந்த வண்டின் தாக்குதலைத் தடுக்கலாம்.
கிழங்குக் கூன்வண்டு
இவ்வண்டு, இளம் மற்றும் வளர்ந்த மரங்களைத் தாக்கும். இதனால் பாதிக்கப்படும் கன்றுகள் இறந்து விடும். வளர்ந்த மரங்கள் வீரியத்தை இழந்து விடும்.
தாய் வண்டு, வாழைக் கிழங்கின் கழுத்தில் இருக்கும் இலையுறையில் துளையிட்டு முட்டைகளை இடும். இவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள் கிழங்கைக் குடைந்து தின்னும். அந்தப் பகுதி இவற்றின் எச்சத்தால் அடைபட்டிருக்கும்.
வளர்ந்த புழுக்கள் மண்ணில் கூட்டுப் புழுக்களாக மாறும். வண்டுகள் மந்தமாக இருக்கும். பகலில் இவை அழுகிய தண்டு அல்லது இலை உறைக்குக் கீழே இருக்கும். இரவில் கிழங்கைத் துளைத்துத் தின்னும். ஒரு கிழங்கில் 2-3 வண்டுகள் இருக்கும்.
சில நேரங்களில் தண்டையும் குடையும். இதனால் மரம் வலுவிழந்து விடும். இந்தத் துளைகளில் பூசணம் மற்றும் பாக்டீரியா நுழைந்தால், அழுகல் ஏற்படும். இவ்வண்டு, ரொபஸ்டா மற்றும் கற்பூர வல்லியைக் கூடுதலாகத் தாக்கும்.
மேலாண்மை
இறந்த மரங்களை, கிழங்குடன் அகற்றி அழிக்க வேண்டும். இவ்வண்டுகள் தாக்கிய நிலத்திலிருந்து கன்றுகளை எடுக்கக் கூடாது. வாழைகளின் வேர்ப்பகுதி சுத்தமாக இருக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு கன்றுகள் மற்றும் மரங்களை நிலத்திலிருந்து அகற்ற வேண்டும்.
தண்டுகளைத் துண்டு துண்டாக வெட்டி வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். பூவன், கதலி, குன்னன் போன்ற, குறைந்த தாக்குதலுள்ள வாழைகளைப் பயிரிட வேண்டும். கார்பரில் பத்து சதத்தூளை, குழிக்கு 10 கிராம் வீதம் இட்டுக் கன்றுகளை நட வேண்டும்.
நடவுக்குப் பிறகு, 10 கிராம் கார்போ பியூரான் 3 சதக் குருணை வீதம் எடுத்து, கன்றைச் சுற்றியிட்டு மண்ணுடன் கிளறி நீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒரு மில்லி மோனோ குரோட்டோபாஸ் மருந்துக்கு 5 மில்லி நீர் வீதம் கலந்து, ஊசி மூலம் தண்டில் கீழ்நோக்கி 45 டிகிரி சாய்வாகச் செலுத்த வேண்டும். இம்முறையை, கன்றுகளை நட்ட மூன்றாம் மாதத்தில் இருந்து 45 நாள் இடைவெளியில் பின்பற்ற வேண்டும்.
இலைத் தின்னிப்புழு
இலையின் அடியில் கூட்டமாக இருந்து கொண்டு இலையைச் சுரண்டித் தின்னும். கன்றுகளை நட்டு இரண்டாம் மாதம் முதல் இப்புழுவின் தாக்குதல் தொடங்கி விடும். புழுக்கள் இளம் குருத்துகள் மற்றும் வளர்ந்த இலைகளைத் தாக்கும். சேதமான இலைக் குருத்து வளர்ந்து விரியும் போது, வரிசையாகத் துளைகள் இருக்கும்.
மேலாண்மை
காலை மாலையில், தாக்குண்ட இலைகளைக் கண்டுபிடித்துப் புழுக்களை அழிக்க வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி மூலம் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம். என்.பி.வி 500 எஸ்.எல். கரைசலை மாலையில் தெளித்துப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 400 கிராம் தையோ டைகார்ப் அல்லது 400 குளோர் பைரிபாஸ் 400 மில்லி மருந்தைத் தெளிக்கலாம்.
கறுப்பு அசுவினி
வாழையில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் முடிக்கொத்து நோயைப் பரப்புவது இந்தக் கறுப்பு அசுவினி. இது, இலை மற்றும் மட்டை இடுக்குகளில் இருந்து சாற்றை உறிஞ்சும். இது, மட்டி, பச்சை வாழை, செவ்வாழை, மலைவாழை அதிகமாகத் தாக்கும்.
நோயுற்ற இளம் கன்றுகள் குட்டையாக, இலை சிறுத்து, இலை நரம்புகள் தடித்து இருக்கும். வளர்ந்த வாழையின் இலைக் காம்புகள் சிறுத்தும், வாழையின் நுனியிலைகள் கொத்தாகவும் இருக்கும். இதனால் தான் இது, முடிக்கொத்து நோய் எனப்படுகிறது.
நோயுற்ற வாழை, குலை தள்ளாது. குலை தள்ளும் நேரத்தில் நோயுற்றால், தண்டைப் பிளந்து குலை வெளிவரும். பூமடல் நுனி, இலையைப் போலப் பச்சையாக இருக்கும்.
மேலாண்மை
ஒரு வாழையைத் தாக்கும் இந்நோய் அடுத்தடுத்த வாழைகளுக்கு விரைவாகப் பரவும். எனவே, முடிக்கொத்து வாழையைக் கண்டதும் பிடுங்கி அழிக்க வேண்டும். நோயுற்ற நிலத்தில் இருந்து கன்றுகளை எடுக்கக் கூடாது.
நோயெதிர்ப்புத் திறனுள்ள வகைகளைப் பயிரிட வேண்டும். நோயுற்ற மரத்திலும், சுற்றியுள்ள மரங்களிலும், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மோனோ குரோட்டோபாஸ் அல்லது 0.5 மில்லி இமிடா குளோபிரிட் வீதம் கலந்து, ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.
நூற்புழு
நூற்புழு தாக்கினால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இது, வேர்களில் நுழைந்து சாற்றை உறிஞ்சுவதால், வேர்கள் பழுப்பு நிறமாக மாறிவிடும். வேரை ஒடித்துப் பார்த்தால் செம்பழுப்புக் கோடுகள் இருக்கும். வேரால், சத்துகளையும் நீரையும் கிரகிக்க முடியாது. இதனால், மரங்கள் வளராமல், இலைகள் வெளிர் மஞ்சளாக மாறுவதால், மகசூல் இழப்பு ஏற்படும்.
மேலாண்மை
நூற்புழு உள்ள நிலத்தில் வாழையை நடக்கூடாது. நோயற்ற நிலத்தில் கன்றுகளை எடுக்க வேண்டும். வேர்களையும், அழுகல் பகுதியையும் அகற்றி விட்டு, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் எமிசான் அல்லது கார்பன்டாசிம் வீதம் கலந்த கலவையில் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி மோனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்த கரைசலில், 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, களிமண் சேற்றுக் கரைசலில் கிழங்குகளை நனைத்து, அவற்றின் மேல் கன்றுக்கு 40 கிராம் வீதம் கார்போ பியூரான் குருணையைத் தூவி நிழலில் உலர்த்தி நட வேண்டும். சணப்பு அல்லது சாமந்தியை வளர்த்து, 45 நாட்கள் கழித்துப் பூக்கும் போது உழுதால் நிலத்தில் உள்ள நூற்புழுக்கள் கட்டுப்படும்.
ப.நாராயணன், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி – 604 410, திருவண்ணாமலை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!