வாழைக் கன்றுகள் தேர்வு!

வாழைக்

வாழை, உலகளவில் நெல், கோதுமை, பால் உற்பத்திக்கு அடுத்த இடத்தில் உள்ளது. வாழைப்பழம், எளிதில் செரிக்கத்தக்க மாவுச்சத்தை அதிகளவில் கொண்டுள்ளது. இதில், ரிபோப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன.

தமிழ்நாட்டில், திருச்சிக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை மிகுதியாக உள்ளது.

கன்றுகள் தேர்வு

சீரான வளர்ச்சிக்கு, நல்ல மகசூலுக்கு, தரமான கன்றுகளை நட வேண்டும். இதற்கு, மூன்று மாத ஈட்டிக் கன்றுகளே சிறந்தவை. கன்றின் எடை 1.5-2.5 கிலோ இருக்க வேண்டும். வைரஸ் நோய், கிழங்கழுகல் நோய் மற்றும் நூற்புழுத் தாக்குதல் உள்ள, தோட்டத்தில் இருந்து கன்றுகளை எடுக்கக் கூடாது.

நேர்த்தி

நடவுக் கன்றுகளின் கிழங்குகளில் உள்ள வேர்கள் மற்றும் அழுகிய பகுதிகளை, மேலாகச் சீவி அகற்ற வேண்டும். பிறகு, 100 லிட்டர் நீரில் 180 மில்லி மோனோ குரோட்டோபாஸ் மருந்து கலந்த கரைசலில், கிழங்குளை நனைத்து, 24 மணி நேரம் உலர்த்தி நட வேண்டும்.

இதற்குப் பதிலாக, தோல் சீவிய கன்றுகளை, சேற்றுக் குழம்பில் நனைத்து, கிழங்குக்கு 40 கிராம் வீதம் கார்போ பியூரான் குருணை மருந்தைத் தூவியும் நடலாம்.

குழியெடுத்தல்

நஞ்சையில், அரை மண்வெட்டி ஆழத்துக்கு மண்ணைப் பறித்து, நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு, மண்ணை அணைத்து நன்கு மிதித்து விட வேண்டும். தோட்டக்காலில், ஒன்றரை அடி கனமுள்ள குழிகளை எடுத்து, 10 கிலோ தொழுவுரம், 50 கிராம் மாலத்தியான் தூள் ஆகியவற்றை இட்டு, மேல் மண்ணுடன் கலந்து, கன்றுகளை நட்டு, மண்ணை மூடி, நன்கு மிதித்து விட வேண்டும்.

இடைவெளி

தோட்டக்காலில் நடப்படும் ரொபஸ்டா, நேந்திரன் போன்ற இரகங்களை 1.8×1.8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். இவ்வகையில், ஒரு எக்டரில் 3,086 கன்றுகளை நடலாம். குள்ள வாழையை, 1.5×1.5 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். இவ்வகையில், ஒரு எக்டருக்கு 4,444 கன்றுகள் தேவைப்படும்.

நஞ்சையில் நடப்படும் பூவன், மொந்தன், இரஸ்தாளி, நெய்வண்ணன் போன்ற இரகங்களை 2.1×2.1 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். இவ்வகையில், ஒரு எக்டருக்கு 2,267 கன்றுகள் தேவைப்படும்.

 


வாழை DR.M.PALANIKUMAR e1711602409428

முனைவர் மு.பழனிக்குமார், உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading