செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.
புராணங்களில் உயர்வாகப் பேசப்படும் கற்பக விருட்ஷம் என்னும் பெருமை, பனை, பலா, அரசு, தென்னை ஆகிய மரங்களுக்கு உண்டு. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் உள்ள கல்ப விருட்ஷமே தமிழில் கற்பக விருட்ஷம் ஆயிற்று. சமயப் பெரியோர்கள் நற்கதி அடையும் நோக்கில், தினமும் ஸ்ரீமத் பாகவத புராணத்தைப் படிப்பார்கள். இது, கூர்ம புராணத்திலும் உண்டு.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிகழ்ந்த போரில், அசுரர்கள் வென்று அண்ட சராசரங்களுக்கும் அதிபர்கள் ஆயினர். இதனால், தேவர்களும் ரிஷிகளும் துன்புற்றனர்.
என்றுமே சாகா நிலை அல்லது அமர நிலை பெற, அமுதத்தைப் பருக வேண்டும் என்னும் கருத்து இருந்தது. இதே கருத்து, சுமேரிய புராணங்களிலும் உண்டு. டில்மூனில் சாவு இல்லை. நோவா சையுசுத்தா வாழுமிடத்தைக் கண்டுபிடித்து, சஞ்சீவி இரகசியத்தை அறிய, கில்கமேஷ் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்பு, பழைய பைபிளில் உண்டு.
அமுதைக் குடித்து விட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று அசுரர்கள் நினைத்தனர். அசுரர்களை வெல்ல இதுவே வழி என்று, தேவர்கள் எண்ணினர். அமுதைப் பெறும் போட்டியில் இரு சாராரும் ஒன்றுபட்டனர்.
திருப்பாற் கடலைக் கடைந்தால், அமுதம் கிட்டும் என்னும் உண்மை தெரிந்ததும், வாசுகி என்னும் பாம்பு வடமானது. மகேந்திர பர்வதம் என்னும் மேருமலை மத்தானது.
தலைப் பக்கம், அசுரர்கள், வால் பக்கம் தேவர்கள். ஆயினும் மலையை அசைக்க முடியவில்லை. பிறகு, மகாவிஷ்ணு 361 பிரம்மாக்களைக் கொண்ட கூர்மமாக, அதாவது, ராட்சச வடிவுள்ள மாபெரும் ஆமையாகக் கடலுக்குள் சென்று, மேரு மலையைப் புரட்ட, எழுந்தது சுனாமி. பொங்கியது கடல். விளைந்ததோ விஷம். அதைச் சாப்பிட்ட சிவன் திருநீலகண்டர் ஆனார்.
இந்த விந்தை நிகழ்வில் அடுத்து வந்தது காமதேனு. ரிஷிகள் எடுத்து விவசாயம் செய்தனர். பிறகு வந்தது வெள்ளை யானை, அதாவது ஐராவதம். அதை இந்திரன் பெற்றான்.
அடுத்து வந்தது, கவுஸ்துபமணி. அதற்குப் பின் வந்தது தான் கல்பதரு. பிறகு, இந்தி இலக்கியங்களில் அற்புத ஆற்றல் மிக்க மனிதர்களால், இவற்றைப் பெற முடிந்தது.
காமதேனும் கற்பக விருட்ஷமும் அட்சயப் பாத்திரங்கள் ஆயின. வேண்டியன எல்லாம் கிடைத்தன. ஒரு வகையில், வேளாண்மைக்கு உரிய, ஆநிறைப் பொருளாதாரத்தின் அடிப்படை, பசுக்களும் விருட்சங்களும். இந்த இரண்டுக்கு மட்டும் தான் அதிகமாகக் கொடுக்கும் குணம் உண்டு.
ஆநிறைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய மூன்று அடிப்படைத் தேவைகளையும் தென்னை நிறைவேற்றியது. பெரும்பாலான தீவுகளில், இன்னும் தேங்காய் தான் முக்கிய உணவு. இன்று இயற்கை உணவை உண்ணும் மக்கள் பெருகி வருகின்றனர். இவர்கள் தினமும் உண்பது தேங்காய்.
அடுத்து, வீட்டுக்குத் தூணாக, விட்டமாக, கைகளாக, தென்னை மரத்தை அறுத்துப் பயன்படுத்தி, தென்னங் கீற்றைக் கூரையாக வேய்ந்தால் அழகான வீடு தான். அப்படிப்பட்ட வீடுகள், இன்னும் பசிபிக்தீவு ஆதிவாசி மக்களிடம் உள்ளன.
உடை விஷயத்திலும் பச்சை ஓலைப் பின்னல் உதவுகிறது. பருத்தி வருவதற்கு முன், தென்னை ஓலையை அழகுடன் நறுக்கி, உடையாக அணிந்த ஆதிவாசிகள் உண்டு.
அடுத்து, தாகம் தீர்க்க இளநீர், போதைக்குக் கள், உரிமட்டை நாரில் இருந்து கயிறு, விரிப்பு, இலைகளைத் தைக்க ஈர்க்கு, கொட்டாங் கச்சியில் இருந்து ஊஹீக்கா, திருவோடு என்று, பலவற்றையும் வழங்கியது தென்னை தான்.
இது, கி.பி. முதல் நூற்றாண்டு இந்திய பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. எனவே, எல்லாம் வழங்கும் தென்னை தான், கற்பக விருட்ஷம் என்று உறுதியாகக் கூற முடியும்.
தென்னை வந்த கதை
தென்னைக்கும் கற்பக விருட்ஷப் புராணத்துக்கும் தொடர்பு உண்டு. தென்னை பிறந்தது பசிபிக் பாலித் தீவுகள் என்று கூறப்படுகிறது. தென்னை நெற்றுகள் பசிபிக் கடலிலிருந்து, இந்துமகா கடலுக்கு மிதந்து வந்து, வங்காள விரிகுடாவின் கிழக்குக் கரையில் ஒதுங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிழக்குக் கடற்கரையில் தென்னை சாகுபடி தொடங்கிய பின்பு, மேற்குக் கடற்கரைக்குச் சென்றதாம். அந்தமான் வழியே ஒடிஸா, ஆந்திரத்துக்கு வந்த பிறகு, கேரளத்துக்குப் பரவியதாகவும் கருத்து உண்டு.
இந்திய வரலாற்றைப் பொருளியல் நோக்கில், வேளாண்மை, உற்பத்தி, உறவு, மாந்தரியல் என்று, பல நோக்கில் ஆய்வு செய்து, புராணங்களுடன் பொருத்திப் பல உண்மைகளை நிரூபித்தவர் டி.டி.கோசாம்பி.
இவர், மாபெரும் வரலாற்று அறிஞர். கணிதப் பேராசிரியர். மொழியியல் வல்லுநர். பிரெஞ்சு, ஜெர்மன், கிரீக், இலத்தின், சமஸ்கிருத மொழிகளைப் பயின்றவர்.
இவர், தேங்காயைத் தொடர்புப்படுத்திக் கொண்டு வந்த இந்திய பண்பாட்டு வடிவங்களைப் பற்றி, ஒரு சராசரி இந்தியனோ, தமிழனோ, மலையாளியோ அறியும் வாய்ப்பு மிகவும் குறைவு.
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குப் பகுதிப் பொருளாதாரம் உச்ச நிலையில் இருந்தது என்றும், அப்போது தேங்காய் முக்கிய வணிகச் சரக்கு என்றும் குறிப்பிடும் இவர், பௌத்த மதம் நலிவுற்று, இந்து மதம் உயர்வு பெற, தேங்காய் ஒரு கருவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இப்படி எடுத்துக் காட்டிய கோசாம்பி, ஒரு மார்க்சிய அறிஞரும் கூட. இந்திய வரலாற்று ஆய்வு மாளிகையை நிறுவக் காரணமானவர் இவர்.
இவர் கூறும் கருத்தின் சாரம் இதுவே. இந்திய வரலாற்றில் உண்மையான பொற்காலம், மௌரியப் பேரரசுக்கு உரியது. ஏனெனில், அர்த்த சாஸ்திரம் என்னும் அரசு பொருளாதாரத் திட்டம் கூறிய வழியில், சரக்கு வணிகம் உன்னத நிலையில் இருந்தது.
ஏராளமான யாக பலிகள், அதாவது, மேழிச் செல்வங்களின் அழிவு, புத்தமத உதவியால் நிறுத்தப்பட்டு, வேளாண் உற்பத்தி உயர்ந்தது.
ஆனால், சரக்குப் பொருளாதாரம் மகதப் பேரரசன் அசோகருக்குப் பின் படிப்படியாக நிலை குலைந்த போது, மீண்டும் சரக்கு வணிகம் சாதவாகனர்களால் உயிர் பெற்றது.
சாதவாகனர்கள் தக்காண அரச குலத்தைச் சேர்ந்தவர்கள். சாலிவாகன சகாப்தமே உருவானது. ஏறத்தாழ 400 ஆண்டுகள் அகண்ட இந்தியாவை இவர்கள் ஆட்சி செய்தனர். சாதவாகனர் ருத்ரதாமன் சரக்கு வணிகத்துக்கு வித்திட்டான். தக்காணத்தில் அன்று புழங்கிய முக்கிய வணிகப் பொருள் தேங்காய்.
இன்றும் கூட, மேற்குக் கடற்கரைப் பகுதிக்குத் தேங்காய் தான் முக்கிய வணிகப் பொருள். கி.பி.120-இல் கராதா என்னும் பட்டத்தைக் கொண்ட ஆறாம் மன்னர் நாகபணரின் மாப்பிள்ளையும், தீனிகாவின் மைந்தனுமாகிய சாகா உஷாவதத்தன், பிராமணர்களுக்குத் தோப்புகளை வழங்கத் தொடங்கினான். அந்தத் தோப்புகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் இருந்தன. இந்தத் தகவல்கள் சாதவாகனர் கல்வெட்டில் உள்ளன.
சாதவாகனர் காலத்தில் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை அழித்து, தென்னை பயிரிடபட்டது. தேங்காய் அன்று முக்கிய விற்பனைச் சரக்காக மாறியிருக்கா விட்டால், இன்று நாம் காணும் மக்களை, அன்று சாதவாகனர்கள் குடியேற்றியிருக்க இயலாது. தேங்காய் பலத்தால் வளர்ந்த முதல் நூற்றாண்டு நகரங்கள் ஆதாரப்பூர்வமானவை.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், குறிப்பாக, மராட்டியம், கோவா, கர்நாடக மலைப் பகுதிகளில் உள்ள கணவாய்களில், சாத்து வணிகர் கூட்டம் உருவானது.
இவர்கள் கோவேரிக் கழுதைகளைப் பயன்படுத்தி, தேங்காய், உப்பு ஆகியவற்றை, பீடபூமி கிராமங்களுக்குக் கொண்டு சென்று, துணி, உலோகச் சாமான்கள், புஞ்சைத் தானியங்களைப் பண்ட மாற்றாகப் பெற்றனர். மெல்ல மெல்லச் சாத்து என்னும் சாத வாகனங்களில் (வணிக வண்டிகளில்) தேங்காய்களை ஏற்றுமதி செய்தார்கள்.
சடங்குகளும் தேங்காய் வணிகமும்
சாதவாகன மன்னர்கள் பௌத்த மதத்துக்கு எதிரிகள் அல்லர். கார்லே புத்த மடாலயத்துக்குத் தாராளமாக நன்கொடை வழங்கி உள்ளார். பௌத்த மதக் கருத்துகளை இந்துக்கள் தமதாக்கிக் கொண்டனர்.
யாக பலிகள் நிறுத்தப்பட்டதும், பிராமணர்கள் சைவ உணவுக்கு மாறியதுடன், புதிய வழிபாடுகளுக்குச் சில உத்திகளைக் கண்டுபிடித்தனர். தேங்காய் முக்கிய வணிகப் பொருளாக மாறுவதற்கு, நுகர்வு நரபலி தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. கூடவே, ஆடு, கோழி பலிகளும் நிறைய நடந்தன.
மனிதனின் தலைக்கும் தேங்காய்க்கும் உள்ள உருவ ஒற்றுமை, புதிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டது. கண், மூக்கு, தலைமுடி எல்லாமே, மட்டை உரித்த தேங்காய்க்கு உள்ளது.
பழைமையான அம்மன் வழிபாட்டுத் தலங்கள், அதாவது, இன்றுள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களின் பழைய நிலை அல்லது திருத்தலங்களின் ஆதி வழிபாடுகளில் தேங்காயை உடைக்கும் போது அம்மன் அதைப் பலியாக ஏற்றுக் கொண்டாள்.
மாவோர் பழங்குடிகள் இன்னமும் உடைபடும் சதிர்த் தேங்காயை, வெட்டப்பட்ட தியாகியின் தலையாகவே கருதும் மரபு உள்ளது.
கரக விழாக்களில் குடமே தேங்காயின் மாற்றுத் தானே! கரகம், அதாவது குடம், ஒரு கர்ப்பதானச் சடங்கு விழாவின் வழிபாட்டு வடிவம். இன்னமும் மேல்தட்டு மக்களின் திருமணச் சடங்கில், உரித்த தேங்காய்களில் மஞ்சளைப் பூசி, குடத்தின் மீது மாவிலையை வைப்பதுண்டு. அது, சூலுள்ள பெண் கருவைக் குறிக்கும். அதற்குக் கும்பம் என்று பெயர்.
ஒரு கர்ப்பிணியின் கருவறைப் பனிக்குடமாகத் தேங்காய் கருதப்படுகிறது. பனிக்குடம் என்னும் சொல்கூட, ஒரு புனித வழக்குத் தான். தேங்காயில் உள்ள இளநீரின் நிலைக்கும், பனிக் குடத்துக்கும் வேற்றுமை இல்லை.
கரக விழாக்களில் மட்டுமல்ல, சில அம்மன் கோயில்களில், இளநீரைப் பிரசாதமாக வழங்குவதன் தத்துவம், மகப்பேறு வேண்டும் என்பதே.
பழைமையான அம்மன் வழிபாட்டு இடங்கள், வரலாற்றுக் காலத்தில், நிலப் பிரபுத்துவ முடியரசர்கள் காலத்தில், உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட திருக்கோயில்களாக மாறின. அப்போது பலி பீடங்கள், கொடிக் கம்பத்தின் கீழ், பழைய நினைவாக, ஆகம நெறிப்படி அமைக்கப்பட்டன.
அதற்குப் பிறகு உயிர்ப் பலிகளை அனுமதிக்கவில்லை. அதே சமயம் இதன் மாற்றாக, கருவறைகளில் உடைக்கப்படும் தேங்காய்களையே உயிர்ப் பலிகளாக ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆகவே, தேங்காயின் தேவை உயர்ந்தது.
வட இந்தியாவில் வழிபாட்டுக்கு உரிய தேங்காய் ஸ்ரீபால் எனப்படுகிறது. இந்தியா முழுவதும் தேங்காய் இல்லாமல் திருமணம் இல்லை. தக்காணப் பகுதிகளில் தேங்காய் இல்லாமல் வழிபாடுகள் இல்லை. பிள்ளையாருக்குச் சதிர்த் தேங்காய் வேண்டும். 108 தேங்காய், 1008 தேங்காய்களை உடைப்பதாகப் பக்தர்கள் வேண்டுகிறார்கள்.
தேங்காய் வணிகம் பல்கிப் பெருக, பிள்ளையாரைப் போல் உதவக் கூடிய தெய்வம் வேறெதுவும் இல்லை. மிகவும் ஆன்மிகப் பற்றுள்ள இந்துக் குடும்பப் பெண்கள், தேங்காயை உடைத்துக் கடவுளுக்குப் படையலிட்ட பிறகே சமையலில் பயன்படுத்துகிறார்கள்.
தேங்காயின் பயன்களைப் பற்றி, மைய அரசின் அங்காடிப் புலனாய்வுப் பிரிவு எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: இளநீராக 3.5 சதம், சமையல் தேங்காயாக 23 சதம், சடங்குகளுக்காக 30.5 சதம், கொப்பரையாக 43 சதம் தேங்காய்கள் பயன்படுத்தப் படுகின்றன.
மொத்த உற்பத்தியில் 53.5 சத தேங்காய்கள் நேரடியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்றாலும், சமையல் நோக்கத்தை விட, சடங்கு நோக்கமே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவப் பயன்கள்
பனங் கள்ளை விடத் தென்னங் கள் அருமருந்து. தென்னங் கள்ளை இறக்கியதும், புளிக்காத நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் குடித்தால், வயிற்றில் வளரும் குழந்தை அழகாகவும் நிறமாகவும் பிறக்கும். குங்குமப்பூ பாலுக்கு உள்ள அதே சிறப்பு தென்னங் கள்ளுக்கும் உண்டு.
தென்னைப் பதனீரில் காய்ச்சப்படும் தேங்காய்க் கருப்பட்டி, மருத்துவப் பயனுள்ளது. தேங்காய்ப் பாலில் கருஞ் சீரகத்தை அரைத்து விழுதாக்கிக் கலந்து சற்று ஊற வைத்து, முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து அலம்பினால், முகத்தில் உள்ள கரும்புள்ளி, செம்புள்ளி மற்றும் பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
தலையில் வழுக்கை ஏற்படாமல் இருக்கவும், நீண்ட கூந்தலைப் பெறவும், வீட்டிலேயே தேங்காய்ப் பாலைக் காய்ச்சி நெய்யெடுத்து, அதைத் தலையில் தினமும் பூசிக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் ஏற்படாமல் இருக்க, தேங்காய்ப் பால், இளநீர் உதவும். மூத்திர அடைப்பை அகற்றுவதில் இளநீருக்கு நிகர் எதுவுமில்லை.
நலிவுறும் தென்னை சாகுபடி
அன்றாட உணவில் தேங்காயைச் சேர்த்தால் வயிற்றுப்புண் ஏற்படாது. தொண்டைக்கு இதமாகும். இத்தகைய சிறப்புள்ள தேங்காய்களைக் கொடுக்கும் தென்னை சாகுபடி நலிவுறுகிறது. மலேசியாவில் ரப்பரையும் தென்னையையும் அழித்து விட்டு, எண்ணெய்ப் பனை சாகுபடி நடந்து வருகிறது. இந்த எண்ணெய்யின் பயன் கூடி வருகிறது.
இதன் இறக்குமதி, தேங்காயின் விலையைக் குறைத்து விட்டதால், தமிழ்நாட்டுத் தென்னை விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆகவே, தென்னங் கள், பதனீரை இறக்க, அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
தேங்காய் எண்ணெய் உடம்புக்குக் கேடு என்றும், கரையாத கொழுப்பு உள்ளதாகவும் தவறாகப் பேசுவதால், தேங்காய் எண்ணெய் விலை மிகவும் மலிந்து விட்டது.
அண்மையில், தேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ ஆற்றல் கண்டறியப் பட்டுள்ளது. இதனால், இன்று அமெரிக்காவும், ஐரோப்பாவும், தெற்காசிய நாடுகளில் இருந்து தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து, வனஸ்பதியாக மாற்றிக் கொள்கின்றன.
இந்தியாவில் தவறான பரப்புரையால், பாரம்பரியச் சிறப்புள்ள தேங்காய் உணவும், தேங்காய் எண்ணெய்யும் புறக்கணிக்கப் படுகின்றன. இந்நிலையை மாற்றித் தென்னைக்கு மறுவாழ்வு தர வேண்டும்.
முனைவர் கோ.சதீஸ், முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் 602025, திருவள்ளூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!