செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர்.
போர்த்துக்கீசியர் மூலம் இந்தியாவுக்கு வந்த முந்திரி மரம், வறட்சியைத் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிராகும். எல்லா மண்ணிலும், தரிசு நிலங்களிலும் வளர்வதால், இது, தரிசு நிலத்தின் தங்கம் எனப்படுகிறது.
இந்தியா, வியட்நாம், நைஜீரியா, கோட்டி ஐவோரி, இந்தோனேசியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், தான்சானியா, முசாம்பிக், தாய்லாந்து, கானா, மலேசியா, கென்யா, இலங்கை, மடகாஸ்கர், பல்கினா பாசோ, மாலி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்கிறது.
இந்தியாவில், ஆந்திரம், மராட்டியம், ஒடிசா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 9,23,000 எக்டரில் முந்திரி உள்ளது. இதன் மூலம் 6,13,000 டன் முந்திரி விளைகிறது.
இந்தியாவின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 695 கிலோ ஆகும். சாகுபடிப் பரப்பில் தமிழகம் மூன்றாம் இடத்திலும், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் ஏழாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முந்திரி சாகுபடி நடக்கிறது.
முந்திரி இரகங்கள்
இந்தியாவில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட இரகங்கள், புத்தூர், முந்திரி ஆராய்ச்சி இயக்ககம் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைந்த முந்திரி ஆராய்ச்சித் திட்டம் செயல்படும் மற்ற ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து வெளியிடப்பட்டு உள்ளன.
வி.ஆர்.ஐ.2: இது, 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முந்திரி விளையும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நன்கு வளரக்கூடிய சிறந்த இரகம். எனவே, இது இந்தியாவின் தேசிய இரகமாக ஏற்கப்பட்டுள்ளது. இது, பூத்து 65-70 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.
தேயிலைக் கொசுக்களின் தாக்குதலை ஓரளவு தாங்கி வளரும். எக்டருக்கு 2,000 கிலோ மகசூல் கிடைக்கும். கொட்டையின் எடை 5.15 கிராம். உடைப்புத் திறன் 28.5 சதம். பருப்பின் தரம் W 240. பழம் உருண்டையாக, மஞ்சளாக இருக்கும்.
வி.ஆர்.ஐ.3: இது, 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பருப்பின் தரம் W 210. கொட்டையின் எடை 7.10 கிராம். ஏற்றுமதிக்கு ஏற்றது. மிகவும் முன் பருவத்தில் பூத்து நெடுநாட்கள் வரை காய்க்கும். எக்டருக்கு 2,700 கிலோ மகசூல் கிடைக்கும். உடைப்புத் திறன் 29.1 சதம். பழம், இளஞ் சிவப்பாக, பேரிக்காயைப் போல இருக்கும்.
வி.ஆர்.ஐ.4: இது 2000 இல் வெளியிடப்பட்டது. பூச்சிகளை ஓரளவு தாங்கி வளரும். எக்டருக்கு 3,320 கிலோ மகசூல் கிடைக்கும். கொட்டையின் எடை 6.63 கிராம். உடைப்புத் திறன் 28.5 சதம்.
பருப்பின் தரம் W 320. எடை 1.7 கிராம். பழம், அடர் சிவப்பாக, உருண்டையாக, சுமார் 42.8 கிராம் எடையில் இருக்கும்.
வி.ஆர்.ஐ. (சி டபிள்யு)எச்.1: கொத்தாகக் காய்க்கும். ஒரு கொத்தில் 6-10 பழங்கள் இருக்கும். கொட்டையின் எடை 7.2 கிராம். உடைப்புத் திறன் 30.5 சதம்.
பருப்பின் தரம் W 210. ஏற்றுமதிக்கு ஏற்றது. மேல் தோல் எளிதாக உரியும். ஒரு மரம் 14.5 கிலோ மகசூலைக் கொடுக்கும். எக்டருக்கு 2,900 கிலோ மகசூல் கிடைக்கும்.
முந்திரி இனப்பெருக்கம்
ஒட்டுச்செடி உற்பத்தி: முந்திரி அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். விதை மூலம் பெறப்படும் கன்றுகள், தாய் மரத்தை ஒத்ததாக இருக்காது. எனவே, இவை வளர்ந்து காய்ப்புக்கு வரும் போது, அவற்றின் மகசூலை நிர்ணயிக்க முடியாது. தாமதமாகவும் சீரற்றும் காய்க்கும். இக்குறைகளைத் தவிர்க்க ஒட்டுக் கன்றுகளே சாலச் சிறந்தது.
இதில் வேர்ச்செடி, முந்திரி நாற்றின் அடிப்பாகமாகவும், உயர் விளைச்சல் மரத்திலிருந்து எடுக்கப்படும் நுனிக்குச்சி, தண்டுக் குச்சியாகவும் பயன்படும். இந்த இரண்டையும் இளந்தண்டு ஒட்டு முறையில் இணைத்துப் புதிய செடி உருவாக்கப்படும்.
ஒட்டுக்கன்று உற்பத்தி: இதற்கு, மகசூல் அதிகமாக இருக்கும் ஏப்ரல்-ஜுன் காலத்தில் விதைகளைச் சேகரித்து, வெய்யிலில் 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும். பிறகு, 10 சத உப்புக் கரைசலில் மூழ்கும் விதைகளை மட்டும் எடுக்க வேண்டும்.
இவற்றில் மிகப்பெரிய, மிகச் சிறிய விதைகளை ஒதுக்கி விட்டு, நடுத்தர விதைகளை மட்டும் விதைக்கப் பயன்படுத்த வேண்டும். விதைகளைச் சேகரித்த சில நாட்களில் விதைத்து விட வேண்டும்.
வேர்ச்செடி உற்பத்தி: விதைகளை நீரில் அல்லது சாணக் கரைசலில் இரு நாட்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். 10 சத சோடியம் ஹைடிராக்சைடு கரைசலில் ஒருநாள் ஊற வைத்தால் முளைப்புத் திறன் அதிகமாகும். 250 காஜ் கனம், 25×13 செ.மீ. அளவுள்ள நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும்.
நீர் வடிய ஏதுவாக அவற்றின் அடியில் 3-5 துளைகளை இட வேண்டும். பிறகு, பைக்கு 5 கிராம் சூப்பர் பாஸ்பேட் வீதம் இட்டு, மண் கலவையை நிரப்பி விதைகளை நட வேண்டும்.
பிறகு, தினமும் காலை நேரத்தில் நீரை ஊற்றி வந்தால், 15-20 நாட்களில் விதைகள் முளைத்து விடும். பைகளில் நீர்த் தேங்கக் கூடாது. விதைகளை ஒரே நேரத்தில் மொத்தமாக விதைக்காமல், ஒருவார இடைவெளியில் விதைத்தால், ஒட்டுக் கட்டுவதற்கான வேர்ச் செடிகள் தொடர்ந்து கிடைக்கும். நாற்றுகள் 40-50 நாட்களில் ஒட்டுக்கட்டத் தயாராகி விடும்.
மழைக் காலத்தில் வேரழுகல் நோய் தோன்றும். இதைக் கட்டுப்படுத்த, 0.2 சத திரம் அல்லது மாங்கோசெப்பை வேர்ப்பகுதி நனைய ஊற்ற வேண்டும். நாற்றுகளின் அடிப்பகுதி பென்சில் கனத்தை அடைய, கடலைப் புண்ணாக்குக் கரைசலை 3-4 முறை ஊற்றலாம்.
தண்டுக்குச்சித் தேர்வும் நேர்த்தியும்: தாய் மரங்களுக்கு மழைக் காலத்தில் தேவையான உரமிட்டு நன்றாகப் பராமரித்தால், அதிகளவில் தண்டுக் குச்சிகள் கிடைக்கும். பூக்காமலும், செழிப்பாகவும் உள்ள பக்கக் கிளைகளில் 3-5 மாதமுள்ள குச்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்தக் குச்சிகள் பென்சில் கனத்தில், 10-12 செ.மீ. நீளத்தில் சீராக, பழுப்பு நிற மொட்டுகள் மற்றும் நன்கு முதிர்ந்த 4-5 கரும்பச்சை இலைகளுடன் இருக்க வேண்டும். 90 நாள் தண்டுக் குச்சிகளில் நல்ல ஒட்டுப் பிடிப்பு கிடைக்கும்.
செப்டம்பர் அக்டோபரில் துளிர் விடும் தண்டுக் குச்சிகளுக்கு நேர்த்தி செய்யத் தேவையில்லை. பிற காலங்களில் பயன்படும் தண்டுக் குச்சி இலைகளைக் கிள்ளி விட்டு இலைக் காம்புகளை மட்டும் விட்டுவிட வேண்டும்.
நேர்த்தி செய்த தண்டுக் குச்சிகளை, 7-10 நாட்களில் ஒட்டுக் கட்டலாம். இலைக் காம்புகள் தொட்டதும் உதிரும் நிலையிலுள்ள தண்டுக் குச்சிகள், ஒட்டுக் கட்டத் தயார் எனத் தெரிந்து கொள்ளலாம்.
ஒட்டுக் கட்டுதல்: தண்டுக் குச்சியின் சீவிய பகுதியை வேர்ச்செடியில் பிளந்து விட்ட பகுதிக்குள் நன்றாகப் பொருந்தும்படி, குறிப்பாகப் பட்டைகள் ஒட்டும்படி வைக்க வேண்டும்.
பிறகு, இரண்டையும் சேர்த்து 1.5 செ.மீ. அகலம், 45 செ.மீ. நீளமுள்ள 200 காஜ் நெகிழிப் பையால், தொப்பியைப் போல மூடிவிட வேண்டும். இது, நுனி மொட்டுக் காயாமல் ஒட்டுப்பிடிப்பு நன்றாக இருக்க உதவும்.
ஒட்டுச் செடிகளை முதல் 15-20 நாட்களுக்கு, நிழல் அல்லது அதற்கென்று தயாரிக்கப்பட்ட பனிப்புகை அறைகளில் வைக்க வேண்டும். பிறகு, தாய்க் குச்சியின் மேல் மூடியுள்ள பைகளை நீக்க வேண்டும்.
ஒட்டுக்கு மேலுள்ள பகுதி நன்கு தழைத்து ஒட்டுப்பிடிப்பு அறிகுறிகள் 4-5 வாரங்களில் தெரியும். பிறகு, படிப்படியாக வெய்யிலில் வைக்கலாம். இந்தச் செடிகள் 5-6 மாதங்களில் நடுவதற்குத் தயாராகி விடும்.
நடவும் பராமரிப்பும்
பருவமழைக் காலமான ஆகஸ்ட் செப்டம்பரில் நடலாம். பாசன வசதியுள்ள நிலத்தில் ஜுன் முதல் மார்ச் வரை நடலாம். இரண்டு அல்லது மூன்று கன அடியில் குழிகளை எடுக்க வேண்டும்.
அவற்றில் மேல் மண்ணுடன் நன்கு மட்கிய 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் லின்டேன் தூள் ஆகியவற்றைக் கலந்து நிரப்பி, 3-6 மாத ஒட்டுச் செடிகளை நட வேண்டும்.
ஒட்டுப்பகுதி காற்றில் அசையாதபடி, ஒரு குச்சியை நட்டு, சணல் கயிற்றால் 8 வடிவ முடிச்சைப் போட்டு, செடியுடன் சேர்த்துக் கட்டிவிட வேண்டும்.
பிறகு, நீர் ஊற்ற ஏதுவாக, செடிகளைச் சுற்றி வட்டப் பாத்திகளை அமைத்து, உடனே நீரை ஊற்ற வேண்டும். இந்தப் பாத்திகளை, காய்ந்த இலை தழை கொண்டு மூடினால், மேல்மண் ஈரமாக இருப்பதுடன், களைகளும் கட்டுப்படும்.
இடைவெளி
முந்திரியை 7×7 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். இவ்வகையில், ஓர் எக்டரில் 200 கன்றுகளை நடலாம். அடர் நடவு முறையில் 4×4 மீட்டர் இடைவெளியில் நடவு செய்து, பத்து ஆண்டுகள் கழித்து, நெருக்கமாக உள்ள மரங்களை நீக்கி விடலாம். இம்முறையில் தொடக்கக் காலத்தில் அதிக வருவாய் கிடைக்கும். இம்முறையில், எக்டருக்கு 625 கன்றுகளை நடலாம்.
நடவுக்குப் பிந்தைய பராமரிப்பு
மழைக் காலத்தில் நீர்த் தேங்கக் கூடாது. நட்ட ஒரு மாதம் கழித்து, ஒட்டுச் சேர்ப்பதற்காகக் கட்டிய நெகிழிப் பட்டையை எடுத்துவிட வேண்டும். வேர்ச் செடியில் துளிர்க்கும் தளிர்களை நீக்கிவிட வேண்டும்.
முந்திரி பூக்கும் காலமான நவம்பர்- ஜனவரியில் பெரும்பாலான ஒட்டுச் செடிகள் பூக்கத் தொடங்கும். இதனால் செடிகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். எனவே, மூன்று ஆண்டுகள் வரை பூக்களைக் கிள்ளிவிட வேண்டும்.
களையெடுப்பு
முந்திரிச் செடிகள் மரங்களாகி நிழல் தரும் வரை, களைகள் அதிகமாகத் தோன்றும். ஆகவே, தொடக்கக் காலத்தில் கன்றுகளைச் சுற்றி, இரண்டு மீட்டர் சுற்றளவில் களைகளை அடிக்கடி நீக்குவது, கன்றுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
நன்கு வளர்ந்து நிழல் படர்ந்து விட்டால், களைகள் கட்டுக்குள் வந்து விடும். ஆனாலும், ஆண்டுக்கு இருமுறை களை நீக்கம் அவசியம். களைகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி கிளைப்பாஸ்பேட் களைக் கொல்லியைத் தெளிக்கலாம். ஆனால், இதைத் தவிர்ப்பது நல்லது.
உரமிடுதல்
பல்லாண்டுப் பயிரான முந்திரிக்கு, சரியான அளவில், சரியான உரங்களை, சரியான நேரத்தில் இட்டால் மகசூல் பெருகும்.
முதல் ஆண்டில்: தொழுவுரம் 10 கிலோ, யூரியா 150 கிராம், சூப்பர் பாஸ்பேட் 250 கிராம், பொட்டாஷ் 100 கிராம்.
இரண்டாம் ஆண்டில்: தொழுவுரம் 20 கிலோ, யூரியா 300 கிராம், சூப்பர் பாஸ்பேட் 500 கிராம், பொட்டாஷ் 200 கிராம்.
மூன்றாம் ஆண்டில்: தொழுவுரம் 30 கிலோ, யூரியா 450 கிராம், சூப்பர் பாஸ்பேட் 750 கிராம், பொட்டாஷ் 300 கிராம்.
நான்காம் ஆண்டில்: தொழுவுரம் 40 கிலோ, யூரியா 600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,000 கிராம், பொட்டாஷ் 400 கிராம்.
ஐந்து மற்றும் அதற்கு மேல்: தொழுவுரம் 50 கிலோ, யூரியா 1,100 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,250 கிராம், பொட்டாஷ் 500 கிராம்.
இந்த உரங்களை இரு பாகமாகப் பிரித்து, பருவமழைக் காலத்தில் இடுவது நல்லது. யூரியாவை அதிகளவாக 2 கிலோ வரை இட்டால் மகசூல் கூடும். கலப்பு உரங்களைத் தவிர்க்க வேண்டும். அடிமரத்தில் இருந்து 1.5-3 மீட்டர் சுற்றளவில், 10 செ.மீ. ஆழத்தில், கிண்ணம் போல எடுத்து, அதில் உரங்களை இட்டு நீரை விட வேண்டும். இதனால், சத்துகளை உறிஞ்சும் வேர்களுக்கு உரங்கள் வேகமாகச் சென்றடையும்.
நுண்ணுரம்
முந்திரி மகசூலுக்கு நுண் சத்துகளும் அவசியம். அவற்றில், ஏதாவது குறையிருந்தால் மகசூலும், பருப்பின் தரமும் குறையும். முந்திரிக்கு ஏற்ற நுண்ணுரக் கலவையை, விவசாயிகளே தயாரித்துக் கொள்ளலாம். இதனால் செலவு குறைவதுடன், தரமான உரமும் கிடைக்கும்.
பெரஸ் சல்பேட் 160 கிராம், பேராக்ஸ் என்னும் வெண்காரம் 160 கிராம், துத்தநாக சல்பேட் 200 கிராம், மாங்கனீஸ் சல்பேட் 200 கிராம், காப்பர் சல்பேட் 80 கிராம் மற்றும் ஜிப்சம் 200 கிராம் எடுத்துக் கலந்தால், ஒரு கிலோ நுண்ணுரம் தயார்.
இதை, பாசன வசதியிருந்தால், மரத்துக்கு ஒரு கிலோ வீதம் இடலாம். மானாவாரியில் பருவமழைக்கு முன்பு, மரத்துக்கு அரைக் கிலோ வீதம் இடலாம். உரமிடுவதைப் போலவே இதையும் இட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
தேயிலைக் கொசு: வளர்ந்த கொசுக்கள் மற்றும் குஞ்சுகள், தளிர்கள், பூங்கொத்துகள் மற்றும் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சிச் சேதம் செய்யும். இவை நஞ்சுள்ள உமிழ்நீரை உள்ளே செலுத்திச் சாற்றை உறிஞ்சுவதால், தாக்குண்ட தளிர்கள், பூங்கொத்துகள் மற்றும் பிஞ்சுக் கொட்டைகள் காய்ந்து கருகி விடும்.
தட்பவெப்பம் சாதகமாக அமைந்து விட்டால், ஒரே வாரத்தில் பல்கிப் பெருகி, பெருவாரியான மரங்களைத் தாக்கி, அந்தாண்டில் மகசூலே கிடைக்காத வகையில் செய்து விடும்.
எனவே, இப்பூச்சியைச் சூறைப்பூச்சி என்றும், கொல்லிப்பூச்சி என்றும் கூறுவர். இக்கொசு முந்திரியைத் தவிர, வேம்பு, கொய்யா மற்றும் நாவலையும் தாக்கும்.
கட்டுப்படுத்துதல்: இதைக் கட்டுப்படுத்த, மூன்று முறை மருந்தைத் தெளிக்க வேண்டும். முதலில், அக்டோபர் நவம்பரில் முந்திரி தளிர் விடும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி புரபனோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அடுத்து, டிசம்பர் ஜனவரியில் முந்திரி பூக்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி குளோர் பைரிபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மூன்றாவதாக, பிப்ரவரி மார்ச்சில், முந்திரி பிஞ்சு விடும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இலைகளை நன்கு நனைத்து ஒழுகும் வகையில், சிம்புகளில், கிளைகளில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
வேர் மற்றும் தண்டுத் துளைப்பான்: இதன் வண்டுகள் மரப்பட்டை இடுக்குகள், மரவேர் மற்றும் காயமுள்ள இடங்களில் கடுகளவு முட்டைகளை இடும். இவற்றிலிருந்து பிறக்கும் புழுக்கள் மரத்துக்குள் சென்று மரத்தைத் தின்று, இரண்டு ஆண்டுகளில் பெருவிரலைப் போலப் பெரிய புழுக்களாக மாறி விடும். இதனால், இரண்டு ஆண்டுக்குப் பிறகு மரம் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்: ஜனவரி பிப்ரவரி, மே ஜூன், செப்டம்பர் அக்டோபர் ஆகிய மூன்று பருவங்களில், 5 சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
தேசமான மரப்பகுதியில், 0.2 சத குளோர் பைரிபாஸ் அல்லது 5 சத வேப்ப எண்ணெய்க் கரைசலை ஊற்ற வேண்டும். நெகிழிப் பைகளில் 20 மில்லி மோனோ குரோட்டோபாஸ், 20 மில்லி நீரைக் கலந்து வேர்களில் கட்டலாம்.
மரம் படர்ந்துள்ள தரைப்பகுதி முழுவதும், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் வீதம் பூச்சிக் கொல்லியைக் கலந்து, அரையடி ஆழம் வரை நனைய ஊற்ற வேண்டும்.
தாக்கப்பட்ட மரத்தின் அடியில் அரையடி அகலத்தில் பட்டையை உரித்து விட்டு, அந்த இடத்தில், 30 மில்லி புரபனோபாஸ் மருந்தைப் பஞ்சில் நனைத்து வைத்துக் கட்ட வேண்டும்.
மாவுப்பூச்சி: தாய் மாவுப்பூச்சியும் இதன் குஞ்சுகளும் முந்திரியின் இளந்தளிர் மற்றும் பூங்கொத்துகளில் சாற்றை உறிஞ்சும். இதனால், பூங்கொத்துகள் வாடிக் காய்ந்து விடும்; பிஞ்சுகள் உதிர்ந்து விடும்.
மேலும், இப்பூச்சிகள் வெளியேற்றும், சர்க்கரை நீரைப் போன்ற பிசுபிசுப்பான கழிவு, இலைகளில் படிவதால் கரும் பூசணம் படரும். இதனால், ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்துதல்: மாவுப்பூச்சிகள் தெரியத் தொடங்கியதும், பாதிக்கப்பட்ட சிம்புகளை வெட்டி விட்டு, மாவுப் பூச்சிகளை அழிக்க வேண்டும். அவை மேலும் பெருகிப் பரவாமல் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டைகுளோர்வாஸ் அல்லது 1.5 மில்லி டைமத்தோயேட் வீதம் கலந்து, மரங்கள் முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
பூப்பேன்: இது, முந்திரி காய்க்கும் பருவத்தில் தோன்றும். கரும்பழுப்பு நிறத் தாய்ப் பேன்கள் மற்றும் மங்கலான வெள்ளை நிறக் குஞ்சுகள், இளந்தளிர் மற்றும் பூங்கொத்துகளில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி புரபனோபாஸ் அல்லது ஒரு மில்லி டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தளிர்களைப் பிணைக்கும் புழு: பழுப்புநிறத் தாய் அந்துப் பூச்சிகள் தளிர் இலைகளில் முட்டைகளை இடும். இவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள், சிலந்தி வலையைப் போல, நூலாம்படை மூலம் இலைகள் மற்றும் பூங்கொத்துகளைப் பிணைத்துத் தின்று சேதமாக்கும்.
இதனால், இலைகள் காய்ந்து சருகாகி விடும். பூக்கும் காலமும் தள்ளிப் போகும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி குளோர் பைரிபாஸ் அல்லது 2 மில்லி புரபனோபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.
நோய்கள்
முந்திரியை, நாற்றழுகல் அல்லது வேரழுகல், பூங்கொத்துக் கருகல், பறவைக் கண் நோய், செந்தண்டு நோய் மற்றும் வாடல் நோய் ஆகியன தாக்கும்.
பூங்கொத்துக் கருகல் நோய்: இதனால் பாதிக்கப்பட்ட தண்டு, காம்பு மற்றும் பிஞ்சுக் காய்களில், செந்திறத்தில் சிறு சிறு நீர் ஊறிய புள்ளிகள் தோன்றும். பிறகு, இவை படர்ந்து பெரிதாகிச் செம்பழுப்பு நிறமாகும். இப்படி ஏற்பட்ட புள்ளிகள் ஒன்றாகிப் பெரிய தழும்புகள் ஏற்படும்.
இதைக் கட்டுப்படுத்த, நோயின் தொடக்க நிலையிலேயே ஒரு சத போர்டோ கலவை அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்னும் பைட்டலான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
செந்தண்டு அல்லது பின்கருகல் நோய்: இது, கார்டீசியம் சால்மோனிகலர் என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. இப்பூசணம் மரத்திசுக்குள் நுழைந்து அதன் சாற்றை உறிஞ்சி வளரும்.
இதனால் தாக்கப்பட்ட சிம்புகள் மற்றும் கிளைகள், நுனியிலிருந்து கீழ் நோக்கிக் காய்ந்து கொண்டே வரும். எனவே, இதற்குப் பின்கருகல் நோய் என்றும் பெயர்.
இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற பாகத்தை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டிய பாகத்தின் வழியே நோய்க்கிருமி மீண்டும் தண்டுக்குள் பரவாமல் இருக்க, பைட்டலான் அல்லது போர்டோ கலவையை, வெட்டுவாயில் நன்றாகப் பூசிவிட வேண்டும்.
வாடல் நோய்: தண்டின் அடிப்பகுதி இடுக்குகள் வழியே கருஞ் சிவப்புச் சாறு வடியும். அங்கே அரைத்தட்டு வடிவில் பூசண வளர்ச்சியும் இருக்கும். முடிவில் மரம் முழுவதும் காய்ந்து விடும்.
நோய் வந்தபின் காத்திட, நோயுற்ற மரத்தைச் சுற்றி நான்கடி தூரத்தில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, அதில் போதியளவில் கந்தகத் தூளைச் சீராகத் தூவ வேண்டும். இதனால், நோயுற்ற மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு நோய் பரவாது.தண்டும் வேர்களும் நன்கு நனையும்படி 40 லிட்டர் போர்டோ கலவையை மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும். இப்படி, ஆறு மாதங்களில் மூன்று முறை செய்ய வேண்டும்.
வருமுன் காக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 50 கிலோ தொழுவுரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். மழைக் காலத்தில் சணப்பையை விதைத்து, பூக்கும் போது மண்ணில் மடக்கி உழ வேண்டும்.
அறுவடையும் மகசூலும்
முந்திரி மரமானது ஜனவரியில் பூத்து மே-யில் காய்ப்பு முடிந்து விடும். கொட்டை முற்றியதும் அதிலுள்ள பழம் பழுக்கத் தொடங்கும். பழம் மஞ்சள் அல்லது சிவப்பாக மாறும்.
முந்திரியில் கொட்டைக்குத் தான் மதிப்பு. நன்கு முற்றிய கொட்டைகள் பழத்துடன் கீழே விழுந்து விடும். உடனே பழத்திலிருந்து கொட்டையைப் பிரித்து எடுத்துவிட வேண்டும்.
மூன்று ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும் ஒட்டுக் கன்றுகளின் மகசூல் பத்து ஆண்டுகளில் முழுமை அடையும். முதல் 3-5 ஆண்டு மரம் இரண்டு கிலோ மகசூலைத் தரும்.
6-10 ஆண்டு மரம் ஏழு கிலோ மகசூலைத் தரும். 11-15 ஆண்டு மரம் 15 கிலோ மகசூலையும், 16-20 ஆண்டு மரம் 20 கிலோவுக்கு அதிகமான மகசூலையும் கொடுக்கும்.
பதப்படுத்துதல்
ஈரப்பதம் 10-12 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். உலர்த்தும் போது, நன்கு முதிராத கொட்டைகளும் நன்கு முதிர்ந்து விடும். சரியாக உலராத கொட்டைகள், பூசணம் மற்றும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு தரத்தை இழந்து விடும்.
ஒரு சதுர மீட்டரில் 60 கிலோ கொட்டைகளை பரப்பி வெய்யிலில் உலர்த்தலாம். அவ்வப்போது கிளறிவிட்டு, மாலையில் குவித்து வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த கொட்டைகளை, சணல் பைகளில் சேமித்து வைக்கலாம்.
முனைவர் சி.இராஜமாணிக்கம், முனைவர் ஆ.பியூலா, முனைவர் வெ.சுவாமிநாதன், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.
சந்தேகமா? கேளுங்கள்!