My page - topic 1, topic 2, topic 3

மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

குளக்கரையில் காய்கறி உற்பத்தி

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர்.

ருங்கிணைந்த பண்ணையம் என்பது, சிறு குறு விவசாயிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை. இந்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு, அதன் மூலம் போதிய வருமானம் என்னும் நிலையை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், பண்ணையில் வேளாண் பயிர்கள், தோட்டக்கால் பயிர்கள், கோழி, மீன் வளர்ப்புப் போன்றவற்றை ஒருங்கிணைப்பது பொருத்தமானது.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மையுடன், மாடு, ஆடு, நாட்டுக்கோழி, வாத்து, வான்கோழி, மரப்பயிர்கள், காய்கறிப் பயிர்களை உள்ளடக்கிய சத்துமிகு தோட்டம் உருவாக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்புடன், குளக்கரையில் ஆண்டு முழுவதும் காய்கறி உற்பத்தி செய்யப்பட்டது.

இதனால், சத்தான விளை பொருள்கள், வேலை வாய்ப்பு மற்றும் வருமான உயர்வை எட்டி, வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்தது. எனவே, மீன் குளத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை, பயிர்கள், பழமரங்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தினால், அதிக வருவாயை ஈட்ட முடியும்.

செயல்முறை

பொதுவாக, மீன் வளர்ப்புக் குளக்கரை மற்றும் சத்துமிகு குளத்து நீரை, யாரும் சரியாகப் பயன்படுத்துவது இல்லை. எனவே, ஆய்வு நோக்கில் குளக்கரையில் பழ மரங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டன. குறிப்பாக, சிறு குறு விவசாயிகளின் சத்துத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், ஆண்டு முழுவதும் குளக்கரையில், கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இதனால், சிறு குறு விவசாயிகளின் வீடுகளுக்கு ஆண்டு முழுவதும் காய்கறிகள் கிடைப்பது அதிகரித்தது. மேலும், கூடுதலாக இருக்கும் காய்கறிகளை விற்பதன் மூலம், அவர்களின் குடும்ப வருமானமும் கூடியது. இது, சிறு குறு விவசாயிகளின் வருமானம் மற்றும் சத்துத் தேவையில் அவர்கள் அடைந்த மன நிறைவை வெளிப்படுத்தியது.

பண்ணை வீட்டுக்கு அருகில் 200 சதுர மீட்டர் பரப்பில் காய்கறிகள், கொய்யா, பப்பாளி, வாழை மரங்கள் மற்றும் கீரைகள் கொண்ட தோட்டத்தை அமைத்தால், குடும்பக் காய்கறித் தேவையைச் சரி செய்வதுடன், உபரி விளை பொருள்களை விற்கவும் முடியும். இது, விதைச் செலவு மற்றும் பயிர்ப் பாதுகாப்புச் செலவுகளை ஈடு செய்து வருமானத்தை அதிகரிக்கும்.

மீன் குளத்தின் வண்டல் மற்றும் மண்புழு உரத்தை இடுவதன் மூலம், தோட்டத்தின் உரத் தேவையை முழுமையாகச் சரி செய்ய முடியும். குளத்தைச் சுற்றியுள்ள பயிர்கள் மற்றும் வயலிலுள்ள பயிர்களுக்கு, சத்தான குளத்து நீர், பாசன ஆதாரமாக இருக்கும்.

ஆய்வு முடிவுகள்

எண்ணூறு சதுர மீட்டர் பரப்பில், முள்ளங்கி, வெண்டை, அவரை, பாகற்காய் மற்றும் முருங்கைக்காய் அடங்கிய 86 கிலோ காய்கறிகள், 112.5 கிலோ கீரைகள், 70 கிலோ கறிவேப்பிலை, 75 கிலோ நோனிப் பழம் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டன. இதன் மூலம், மீன்குள உரிமையாளர்களின் வீடுகளுக்கு, ஆண்டு முழுவதும் காய்கறிகள் கிடைப்பது அதிகரித்தது.

மேலும், உபரி காய்கறிகள், கறிவேப்பிலை, நோனிப்பழம் ஆகியவற்றை விற்பனை செய்ததன் மூலம், ஆண்டுக்கு 2,165 ரூபாய் கிடைத்தது. இது, மொத்த வருமானம் அதிகரிக்க உதவியது. சத்துமிகு தோட்டத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது. பண்ணைக் கழிவுகளை உரமாகத் தயாரிப்பதன் மூலம், அவற்றைத் திறம்பட மறுசுழற்சி செய்ய முடிந்தது.

முடிவுரை

இந்திய விவசாயப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கும் விவசாயிகளில் 80 சதம் பேர், சிறு குறு விவசாயிகள் ஆவர். ஆனால், மொத்தச் செயல்பாட்டு நிலங்களில் 36 சதம் மட்டுமே அவர்களிடம் உள்ளது.

ஒருங்கிணைந்த விவசாய முறையில் அமைக்கப்பட்ட சிறியளவு சத்துமிகு தோட்டத்தில், பன்முக உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது. இதனால், சிறு குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு, சத்துப் பாதுகாப்புக் கிடைத்தது, வருமானம் கூடியது, பெண்களுக்கு வேலை கிடைத்தது.

உரமாகத் தயாரித்துப் பண்ணைக் கழிவை மறுசுழற்சி செய்வதன் மூலம், சத்துமிகு தோட்டத்தின் உரத்தேவை சரி செய்யப்பட்டது. இதனால், வெளிப்புற இடுபொருள்களின் தேவை குறைந்தது.

தனிநபர் குடும்பத்தின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த, சிறு குறு விவசாயக் குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில், இத்தகைய மாதிரிகளை உருவாக்க முடியும்.

சத்துமிகு தோட்டத்தை நன்றாகப் பராமரிப்பதன் மூலம், வீட்டுக்குத் தேவையானவை கிடைக்கும். எஞ்சிய உற்பத்தியை விற்பதன் மூலம் வருவாயைப் பெருக்க முடியும்.

விளைபொருள் வரவு

கறிவேப்பிலை: ஓராண்டு மகசூல் 70 கிலோ. இதன் மதிப்பு 700 ரூபாய். வீட்டுப் பயன் 20 கிலோ 200 ரூபாய். விற்றது 50 கிலோ 500 ரூபாய்.

காய்கறி: ஓராண்டு மகசூல் 86 கிலோ. இதன் மதிப்பு 1,290 ரூபாய். வீட்டுப் பயன் 50 கிலோ. விற்றது 36 கிலோ 540 ரூபாய்.

கீரை: ஓராண்டு மகசூல் 7 கிலோ. இதன் மதிப்பு 112.50 ரூபாய். வீட்டுப் பயன் 112.50 ரூபாய்.

நோனிப்பழம்: ஓராண்டு மகசூல் 75 கிலோ. இதன் 1,125 ரூபாய். விற்றது 75 கிலோ 1,125 ரூபாய்.


முனைவர் ப.பொற்பாவை, முனைவர் ஆ.இராஜேஸ்குமார், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் – 613 501.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks