செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.
உப்பும் காரமும் இல்லாத உணவை யாருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த இந்தக் காரத்தைத் தருவது மிளகாய். இந்த மிளகாய் சாகுபடியில், நாற்றங்காலில் தொடங்கி, காய்கள் வரையில், பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் இங்கே காணலாம்.
நாற்றழுகல் நோய்
இந்த நோயை உண்டாக்கும் பூசணம், மண்ணில் இருக்கும். பாத்திகளில் விதைக்கும் விதைகளைத் தாக்கும் பூசணம், அவற்றை முளைக்க விடாமல் செய்கிறது. இதனால், விதைகள் சரிவர முளைப்பதில்லை.
மேலும், சிறிதாக வளர்ந்துள்ள நாற்றுகளில், மண்ணை ஒட்டியுள்ள தண்டுப் பகுதியை இப்பூசணம் தாக்கி, திசுக்களை மடியச் செய்யும். இதனால், தண்டுகள் வலுவிழந்து, நாற்றுகள் சாய்ந்து விடும். தண்டின் அடிப்பகுதியும் வேரும் அழுகி விடும்.
இந்நோய், தாழ்வான, வடிகால் வசதி இல்லாத, நிழலான இடத்தில் அமைக்கப்பட்ட பாத்திகளில், தேவைக்கு அதிகமாக விதைத்து நாற்றுகள் நெருக்கமாக வளர்ந்துள்ள பாத்திகளில், நீர் அதிகமாகத் தேங்கும் பாத்திகளில் தென்படும்.
கட்டுப்படுத்துதல்
விதை மற்றும் மண் மூலம் பரவும் இந்நோயைக் கட்டுப்படுத்த, வடிகால் வசதியுள்ள, நிழலற்ற பகுதியில், மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.
தேவையான அளவில் மட்டும் விதைகளை எடுத்து, இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டான் அல்லது திராம் மருந்தால் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
இல்லையெனில், ஒரு கிலோ விதைக்கு, உயிரியல் பூசணக் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடியை 4 கிராம் வீதம் எடுத்துக் கலந்து விதைக்க வேண்டும். இளம் நாற்றுகளில் நோய் தோன்றினால், ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் தாமிர ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு சத போர்டோ கலவையை, நாற்றங்கால் மண்ணில் ஊற்ற வேண்டும்.
சாம்பல் நோய்
இந்நோய், மிதமான வெப்பம், காற்றில் அதிகமான ஈரப்பதம் உள்ள நிலையில், மிளகாய்ச் செடிகளைத் தாக்கும். இலைகளின் அடியில் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் பூசண வளர்ச்சி இருக்கும். இதனால், இலைகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிறத்தில் திட்டுத் திட்டாகத் தெரியும். நாளடைவில் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு, நனையும் கந்தம் 3 கிராம் அல்லது கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது காரத்தேன் ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
நுனிக்கருகல், பழ அழுகல் நோய்
நோய்த் தாக்கம் ஏற்பட்ட செடிகளில், முதலில் கிளைகளின் நுனிப்பகுதி கருகும். அடுத்து, மேலிருந்து கீழாகக் காய்ந்து கொண்டே வர, மொட்டுகளும் பூக்களும் கருகி உதிர்ந்து விடும்.
பழங்களில் வெண் பழுப்பு நிறத்தில் நீள்வட்டத் திட்டுகள் காணப்படும். பிறகு, அப்பகுதியில் வித்துக் கலன்கள், சிறிய கரும் புள்ளிகளாக வட்ட வடிவத்தில் காணப்படும். மேலும், பழம் அழுகி உதிர்ந்து விடும். இதனால், விதைகளின் முளைப்புத் திறன் குறைந்து விடும்.
கட்டுப்படுத்துதல்
ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் தாமிர ஆக்ஸி குளோரைடு அல்லது 2 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
செர்க்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்
இலைகளில் சிறிய வட்டப் புள்ளிகள் வெள்ளையாகத் தோன்றும். பிறகு, இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிதாகி, இலைகளைக் கருகச் செய்யும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
முனைவர் ச.நர்மதாவதி, முனைவர் த.வெற்றிவேல், வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி – 621 712.
சந்தேகமா? கேளுங்கள்!