மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

மானாவாரி

மிழ்நாட்டில் மானாவாரியில் 30 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், நிச்சயமற்ற மழையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த மழை எல்லா ஆண்டுகளிலும் ஒரே சீராகப் பெய்வதில்லை.

இந்நிலையில் பெய்யும் மழைநீரைச் சிறிதும் வீணாக்காமல் பயிருக்கு மட்டும் பயன்படுத்தினால் மகசூலைப் பெருக்கலாம். மானாவாரி நிலத்தில் நீரைச் சேமித்துப் பயன்படுத்தினால், 20 சத விளைச்சல் கூடுதலாகக் கிடைக்கும்.

மானாவாரிப் பயிர்களின் நீர்த்தேவை 250-500 மி.மீ. ஆகும். எனவே, மானாவாரி நிலங்களில் பெய்யும் மழைநீர் முழுவதையும், பயிர்கள் வளரப் பயன்படுத்தி, பாசனப் பயிருக்கு இணையாக வளரச் செய்ய, ஒருங்கிணைந்த மண் மற்றும் ஈரப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நிலத்தின் ஈரம் வீணாகாமல் பல நாட்கள் மண்ணில் நிலைத்திருந்து பயிருக்குக் கிடைக்கச் செய்தல் மற்றும் இந்த ஈரத்தைப் பயிர்கள் முழுதாகப் பெற்றுப் பயனடையச் செய்தல் இதில் அடங்கும். எனவே, மண்வளம் மற்றும் ஈரப்பிடிப்பைக் கூட்டும் முறைகளைப் பார்ப்போம்.

சாகுபடி நிலத்தில் 15 செ.மீ. ஆழம் வரையுள்ள மேல் மண், பயிர்களுக்குச் சத்துகளைத் தரக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணை, காற்றும், மழைநீரும் அடித்துச் செல்வதால், மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, மண்ணரிப்பைத் தடுக்கும் முறைகளைக் கையாள வேண்டும்.

கட்டுப்பாத்தி அமைத்தல்

நிலச்சரிவு ஒரு சதத்துக்கும் குறைவாக உள்ள நிலத்தில் இம்முறையைக் கையாள வேண்டும். நிலச்சரிவு மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து, கட்டுப் பாத்தியின் அளவு அமையும்.

அதாவது, ஆண்டுப் பயிராக இருந்தால், கரிசல் மண்ணில் 40 ச.மீ. அளவிலும், செம்மண் எனில் 80 ச.மீ. அளவிலும், கட்டுப்பாத்தி இருக்க வேண்டும். இம்முறை, வறட்சிப் பகுதியில் உள்ள தோட்டக்கால் மரங்களுக்கு உகந்தது.

சம உயர சாகுபடி

நிலத்தின் சரிவுக்குக் குறுக்காகச் சம உயர நிலைகளைக் கண்டறிந்து பயிர் செய்வது, மண்ணரிப்பு மற்றும் நிலத்தில் வழிந்தோடும் நீரைத் தடுப்பதற்கு ஏதுவான உத்தியாகும்.

நிலச்சரிவு, 6 சதத்துக்கும் குறைவாக இருந்தால், சரிவுக்குக் குறுக்கே 60-100 மீட்டர் இடைவெளியில், சம உயர வரப்புகள் அல்லது வயலோர வரப்புகளை அமைக்க வேண்டும்.

இதனால், மழைநீரை அந்தந்த இடத்திலேயே புக வைத்து, மண்ணின் ஈரச் சேமிப்பைக் கூட்டலாம். மானாவாரிப் பயிர்களுக்கு இம்முறை உகந்தது.

கட்டப்பட்ட பார்கள் அமைத்தல்

நிலத்தில் பார்களை ஒன்றுக்கொன்று செங்குத்தாக, குறுகிய இடைவெளியில் கட்டி, செவ்வக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அமைக்கலாம். இதனால், அதிக மண் கண்டம் உள்ள இடங்களில் வழிந்தோடும் மழைநீரைக் கட்டுப்படுத்தி, அந்தந்த இடத்திலேயே தேக்கி வைத்து நிலத்தடி நீரை உயர்த்தலாம்.

உழவுசால் அமைத்தல்

இதைச் சரிவுக்குக் குறுக்கே 3.6 மீட்டர் இடைவெளியில் அமைத்தால், மானாவாரிப் பயிர்களில் கூடுதல் மகசூலைப் பெறலாம். இம்முறையால், வரப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுசிறு வாய்க்கால்களை அமைப்பது, நீர் தேங்குவது, வரப்பு அரிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். நிலத்தில் வழிந்தோடும் நீரைத் தேவையான இடைவெளியில் தடுத்து நிறுத்த முடியும்.

பட்டை வரிசையில் பயிரிடுதல்

நிலச்சரிவுக்குக் குறுக்கே 6-10 வரிசைகளில் பயிர்களை வளர்ப்பதன் மூலம், நீர் மற்றும் காற்றால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கலாம். மழைநீர் வழிந்தோடுவது தடுக்கப்படுவதால், மண்ணின் ஈரம் அதிகரிக்கும். இதற்கு, வெட்டிவேர், வேலிமசால் மற்றும் பல பருவப் புல் வகைகள் ஏற்றவை.

குழியமைப்பு நிலப்போர்வை அமைத்தல்

கரிசல் மற்றும் களிமண் நிலத்தில், 300 மீட்டர் நீளம், 1.6 ச.மீ. குறுக்குப் பரப்பு, 0.6 மீட்டர் அகலமுள்ள குழிகளை, 50-75 செ.மீ. இடைவெளியில் தோண்டி, புற்களைப் பக்கவாட்டில் நட வேண்டும்.

இதனால், மண் சுவர்கள் கடினமாகி மண்ணரிப்பைக் காக்கும். நிலத்தில் வழிந்தோடும் நீரில் 50-75 சதம், குழிகளில் தேங்கி, மண் ஈரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தைக் கூட்டும்.

தாவர அரண்களை அமைத்தல்

தாவர அரண் என்பது, குறைந்த இடைவெளியில் புற்கள் மற்றும் புதர்ச் செடிகளை, நிலச்சரிவை நோக்கி வரிசையாக வளர்ப்பது. சம உயர வரப்புகளில் நீர்த் தேங்குவதால் ஏற்படும் விளைச்சல் இழப்பைத் தடுக்க, தாவர அரண் பயன்படும். சரிவில் நடப்படும் வெட்டிவேர், எலுமிச்சைப் புல் மற்றும் கற்றாழை, மண்ணரிப்பைத் தடுத்து நிலத்தின் ஈரத்தைக் காக்கும்.

சம உயரச் சுவர்களை அமைத்தல்

அதிகச் சரிவும், மண்கண்டம் குறைந்தும் உள்ள மலைப்பகுதி சரிவு நிலங்களில், அங்கேயே கிடைக்கும் கற்களை வைத்துச் சுவராக அமைத்து, நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இதனால், தாழ்வான பகுதியை நோக்கி மழைநீர் செல்லும் வேகம் குறைந்து, மண்ணரிப்புத் தடுக்கப்படும்.


மானாவாரி VEERAMANI P DR

முனைவர் பெ.வீரமணி, முனைவர் சு.நந்தகுமார், வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம் – 632 104, வேலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading