செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை.
நீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் ஏராளம். இந்த நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களை வளர்த்தால் நமக்கும் நன்மை, சுற்றுச் சூழலுக்கும் நல்லது. அத்தகைய மரங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
அத்தி
மருத்துவக் குணங்கள்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைத்து, மூல நோயைக் கட்டுப்படுத்தும். அத்திப் பால் வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். வினிகரில் பதப்படுத்திய அத்திப் பழங்கள், கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தைத் தடுக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும்.
அத்தி சிறு மரமாகும். இது, மலைத்தோட்டப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக இடப்படுகிறது. இது, தென் அரேபிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. பழங்கள் மென்மையாக, இனிப்பாக இருக்கும். எல்லா மண்ணிலும் நன்றாக வளரும்.
மணற்பாங்கான மண்ணில் போதிய கனிமச்சத்தை இட்டால் நன்கு வளரும். களர் மண்ணில் சுண்ணாம்பை இட்டு அத்தியை வளர்க்கலாம். வண்டல் மண்ணில், மரத்தின் வளர்ச்சியும் பழங்களின் தரமும் நன்றாக இருக்கும்.
மித மலைப் பகுதிகளில் நன்றாக வளரும். 25-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்றது. கடுங்குளிர், கடும் வெப்பம், கடும் மழையைத் தாங்காது,
இரகங்கள்
ஏற்காடு 1: 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அடிமரக் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். பழம் பெரிதாக, கருஞ் சிவப்பாக இருக்கும். வைட்டமின்கள் ஏ, சி நிறைந்தது. ஆண்டில் ஒரு மரத்தில் இருந்து 4,000 பழங்கள் கிடைக்கும்.
இனப்பெருக்கம்: வெட்டுக் குச்சிகள், விண்பதியன், ஒட்டுக்கட்டுதல், மொட்டுக் கட்டுதல் முறைகளில் இனப்பெருக்கம் செய்யலாம். வேர்ப் பிடிக்க முப்பது நாட்களாகும். நன்கு வேர்ப் பிடித்த செடிகளை மாற்றி நட 90-120 நாட்களாகும்.
குச்சிகளை, 15-20 செ.மீ. நீளத்தில், நிறையக் கணுக்களுடன், 2-3 ஆண்டுக் கிளையிலிருந்து எடுக்க வேண்டும். ஆனால், ஜுன் மாதத்தில் போடப்பட்ட விண் பதியன்கள் தான் அதிகளவில் வேர்ப் பிடிக்கும்.
நடவு: நன்கு உழுது சமப்படுத்திய நிலத்தில், 50 கன செ.மீ. குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். செப்டம்பர் அக்டோபர் காலம் நடவுக்குச் சிறந்தது. குழிகளில் மட்கிய தொழுவுரம் 10 கிலோ, மணிச்சத்து 1.2 கிலோ இட வேண்டும்.
உரமிடுதல்: ஒரு வயதுச் செடிக்கு, மட்கிய தொழுவுரம் 10 கிலோ, அம்மோனியம் சல்பேட் 170 கிராம் இட வேண்டும். இவ்விதம் ஐந்து ஆண்டுகள் வரையில் இடலாம்.
பாசனம்: அத்தி மரங்களுக்கு, கோடைக் காலத்தில் 10-15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம். இது, மகசூலைப் பெருக்க உதவும். பழம் பழுக்கும் போது பாசனம் கூடாது.
கவாத்து: சிறிய செடிகளில் உயரத்தைக் குறைத்து மரங்களை நன்கு வடிவமைக்க, கவாத்து செய்ய வேண்டும். வளர்ந்த மரங்களில், டிசம்பர் தொடங்கி ஜனவரி முடிய, 3-4 மொட்டுகள் வரை விட்டு விட்டு, கிளைகளை வெட்ட வேண்டும். கிளைகளில் V வடிவத்தில் வெட்டினால் மகசூல் கூடும்.
பூக்கள், காய்கள் பிடித்தல்: இரண்டு வயது மரங்களில் பூக்கள் தோன்றத் தொடங்கும். ஆனால், பொருளாதார மகசூல் கிடைக்க ஐந்தாண்டுகள் ஆகும். பழங்கள், மே முதல் செப்டம்பரில் அறுவடைக்கு வரும். ஜிப்ராலிக் அமிலம் 40 பிபிஎம் தெளித்தால் 10 சத மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.
அறுவடை: முற்றிய காய்கள் பச்சையாகவும், பழுத்த பின் கருஞ் சிவப்பாகவும் இருக்கும். பழங்கள் மென்மையாகவும், பறிக்கும் போது காம்பிலிருந்து பால் வடியாமலும் இருக்கும்.
மகசூல்: ஒரு மரத்தில் இருந்து 2,500- 4,000 பழங்கள் வரை பெறலாம். பழங்கள் எளிதாக அழுகி விடும் என்பதால், உடனே விற்பனைக்கு அனுப்புவது சிறந்தது. 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒருவாரம் வரை பழங்களைச் சேமிக்கலாம்.
மூங்கில் கூடைகளில் அல்லது மரப்பெட்டிகளில், காகிதங்களுக்கு இடையே பழுத்த பழங்களை வைத்துக் கட்டி அனுப்ப வேண்டும். உலர்ந்த பழங்களை அனுப்பினால் வீணாகாது. வளர்ந்த மரங்கள் 30-40 ஆண்டுகள் வரையில் நல்ல மகசூலைத் தரும்.
வில்வம்
மருத்துவக் குணங்கள்: முற்றிய காய் செரிக்கும் ஆற்றல் கூட, செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு ஊட்டமளிக்கும். இதயம், மூளையை வலுப்படுத்தும்.
வேர், மரப்பட்டைக் கசாயம், ஜுரத்தை நீக்கும். இலையை அரைத்த கலவை கண் நோய்களைத் தீர்க்கும். அடிவயிற்று வலியை நிறுத்த, இதயத் துடிப்பைச் சீராக்க, சிறுநீரகச் சிக்கலைச் சரிப்படுத்த வேர் உதவும்.
முற்றிய காயிலுள்ள சதையை, நல்லெண்ணெய்யில் ஒரு வாரம் ஊற வைத்துத் தேய்த்துக் குளித்தால், உடல் எரிச்சல் முற்றிலும் குறையும்.
சாகுபடி
மண்: எல்லா மண்ணிலும் நன்றாக வளரும். களர் மற்றும் கற்கள் நிறைந்த மண்கூட ஏற்றது. ஆனால், வடிகால் வசதியுள்ள வண்டல் மண் சிறந்தது. தரை மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும்.
இனப்பெருக்கம்: அயோத்யா, காசி போன்றவை பிரபலமான இரகங்கள். வில்வம் பெருமளவில் விதைகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒட்டுக் கட்டுதல், விண்பதியன் முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யலாம். ஆனால், மொட்டுக் கட்டுதல் மூலமே நிறையச் செடிகளைப் பெற முடியும்.
நடவு: 50 கன செ.மீ. குழிகளை 10 மீட்டர் இடைவெளியில் எடுத்து, மேல் மண்ணுடன் 10 கிலோ மட்கிய தொழுவுரத்தைக் கலந்து குழிகளில் இட்டுக் கன்றுகளை நட வேண்டும். ஜுலை- செப்டம்பர் காலம் நடவுக்கு ஏற்றது.
கவாத்து: சிறிய செடிகளை வடிவமைக்க, கவாத்து செய்து நிறையக் கிளைகளை உருவாக்க வேண்டும். வளர்ந்த மரங்களில் காய்ந்து போன, பூச்சி, நோய் தாக்கிய கிளைகளை வெட்டி எடுத்துவிட வேண்டும்.
உரமிடுதல்: மரத்துக்கு 10 கிலோ தொழுவுரம், 60 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 60 கிராம் சாம்பல் சத்தை, எட்டு ஆண்டுகள் வரையில் ஆண்டுதோறும் இட வேண்டும். மரங்கள் வளர்ந்து மகசூல் கொடுக்கும் காலம் வரையில், குறுகிய காலப் பயிர்களை ஊடுபயிராக இடலாம்.
பூக்கள், காய்கள் பிடித்தல்: நாற்றுகள் 7-8 ஆண்டுகளில், மொட்டுக் கட்டிய செடிகள் 4-5 ஆண்டுகளில் மகசூலைத் தரும். மே, ஜுன் மாதங்களில் பூக்கள் பிடித்து, ஏப்ரல் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். காய்கள் உதிர்வதைத் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் 2,4- டி வீதம் கலந்து தெளிக்கலாம்.
அறுவடை: முற்றிய காய்களைக் காம்புடன் சேர்த்துப் பறிக்க வேண்டும். 12-15 வயதுள்ள மரம் 250-450 பழங்களைக் கொடுக்கும். 45 ஆண்டுகள் வரையில் இதில் மகசூல் எடுக்கலாம். பறித்த பழங்களைச் சாக்குகளில் இட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.
நாவல்
மருத்துவக் குணங்கள்: இலைகளும் பழங்களும் வயிற்றுத் தொல்லைகளைச் சரியாக்கும். தண்டிலிருந்து சாறெடுத்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்தால், வயிற்றுக் கடுப்பு நிற்கும். மேலும், சிறுநீரில் வெளியேறும் சர்க்கரை அளவும் குறையும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.
இலை, பட்டை, விதை மற்றும் பழத்தில் இருந்து எடுக்கும் சாறு, உடல் சர்க்கரை அளவைக் குறைக்க, பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்பட உதவும். நாவல் கொட்டைப்பொடி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நாவல் வணிக நோக்கில் பயிரிடப்படுவது இல்லை.
சாலை ஓரங்களில், தோட்டத்துக்கு வெளியே வளர்க்கப்படுகிறது. இது, பெரிய மரமாகும். பழங்கள், இரும்பு மற்றும் புரோட்டீன் சத்து மிக்கவை.
சாகுபடி
மண்: எல்லா மண்ணிலும் வளரும். வடிகால் வசதியுள்ள பொறை மண் ஏற்றது. கடினமான களிமண் அல்லது மணற்சாரி மண் வளர்ச்சியைப் பாதிக்கும்.
தட்ப வெப்பநிலை: தரை மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையில் நன்கு வளரும். 10 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரையில் தாங்கி வளரும். பூக்கும் மற்றும் காய்க்கும் போது மழை கூடாது. உயரமான பகுதிகளில் சிறிய நாற்றுகளை, பிணியிலிருந்து காப்பது அவசியம்.
இனப்பெருக்கம்: விதை மூலம் மே ஜுன் மாதங்களிலும், வெட்டுக் குச்சிகள், மொட்டுக் கட்டுதல், ஒட்டுக் கட்டுதல் மூலம் மார்ச் ஏப்ரல் மாதங்களிலும் இனப்பெருக்கம் செய்யலாம்.
விதைகள் 2-3 வாரத்தில் முளைத்து விடும். 3-4 மாதமான நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும். விண் பதியன்களைப் போடும் போது, 1 சத இன்டோல் பியூட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தினால், நன்கு வேர்ப் பிடிக்கும்.
நடவு: ஜுலை, ஆகஸ்டு, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் நடவுக்கு ஏற்ற காலம். பத்து மீட்டர் இடைவெளியில் ஒரு கன மீட்டர் குழிகளை எடுத்து, மேல் மண் மற்றும் மட்கிய தொழுவுரத்தை, 3:1 வீதம் குழியில் இட்டு, செடிகளை நட வேண்டும்.
கவாத்து: செடிகளை ஒரு மீட்டர் உயரம் வரை ஒன்றும் செய்யக் கூடாது. பிறகு, 4-5 முக்கிய கிளைகளை விட்டு விட்டு மற்றவற்றை நீக்க வேண்டும். அதன் பிறகு, காய்ந்த, நோய், பூச்சி தாக்கிய கிளைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
உரமிடுதல்: 20 கிலோ மட்கிய தொழுவுரத்தை ஆண்டுதோறும் இடவேண்டும். மரத்தின் வயதைப் பொறுத்து, இதை 80 கிலோ வரை கூட்டலாம். பழங்கள் காய்க்கும் நேரத்தில், மரத்துக்கு 1-2 கிலோ கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் வீதம் இட்டால் மகசூல் கூடும். சிறிய செடிகளாக இருக்கும் போது, ஆண்டுக்கு 8-10 முறை பாசனம் அவசியம்.
பூக்கள், காய்கள் உதிர்தல்: இந்நிலை, பூக்கும் போது தொடங்கி, பழமாகும் வரை தொடரும். இதைக் குறைக்க, ஜிப்ரலிக் அமிலம் 60 பிபிஎம், பூக்கள் உருவான பின்னும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் கொடுக்க வேண்டும்.
அறுவடை: மார்ச் ஏப்ரலில் பூக்கும். ஜுனிலிருந்து பழங்களை அறுவடை செய்யலாம். பழுத்த பழங்கள் கரு ஊதா நிறத்தில் இருக்கும். தரையில் விழாமல் கொத்தாக அல்லது தனித் தனியாகப் பறிக்க வேண்டும். 4-5 முறை அறுடை செய்ய வேண்டி வரும்.
மகசூல்: விதை மூலம் உருவான மரத்தில் 80-100 கிலோ பழங்களும், மற்ற வகைகளில் உருவான மரத்தில் 60-70 கிலோ பழங்களும் கிடைக்கும். பழங்களை நெகிழிப் பைகளில் அடைத்து, குளிர்ப்பதனப் பெட்டிகளில் வைத்தால், மூன்று வாரங்கள் வரை பாதுகாக்கலாம்.
முனைவர் இரா.சித்ரா, த.ஜானகி, மொ.பா.கவிதா, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!