My page - topic 1, topic 2, topic 3

மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

மண்புழு உரம்

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

ண்புழு உரம் என்பது, மண் புழுக்களின் கழிவைக் குறிக்கும். மண் புழுக்கள் உண்ணும் விவசாயக் கழிவுகளான, மட்கிய சாணம், இலைதழை போன்றவை, அவற்றின் குடல்களில் உயிர்வேதி மாற்றமடைந்த எச்சமாக வெளியேறும்.

இந்த எச்சத்தை, அதன் தன்மையைக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, வெர்மி காஸ்டிங் என்னும் மண்புழு உரக் குருணை ஆகும். இரண்டாவது, வெர்மி கம்போஸ்ட் என்னும் மண்புழுக் கழிவும், மண் புழுக்களுக்காக இடப்பட்ட மட்கிய கழிவும் அடங்கிய மண்புழு உரமாகும்.

மண்புழுவும் மண்வளமும்

மண் புழுக்கள் கரிமம் நிறைந்த கழிவுப் பொருள்களை உண்டு வாழ்கின்றன. இந்தக் கழிவுகள், மண் புழுக்களின் உடலில் சென்று நன்கு செரித்த பின்பு, மண்புழு எச்சமாக வெளியேறுகின்றன. இவற்றின் மூலம், பயிர்க் கழிவுகள் மற்றும் குப்பைகள், குறைந்த காலத்தில் சிறந்த உரமாகின்றன.

மண் புழுக்கள் வெளியேற்றும் எச்சத்தில் மிகுந்துள்ள கரிமப் பொருள்கள் மண்வளத்தை மேம்படுத்துகின்றன. கரிமப் பொருள்கள் கலந்த மண்ணில், பயிர்களுக்கான சத்துகள் மற்றும் தாதுப்புகள் அதிகளவில் இருப்பதால், மண்ணின் இரசாயன வளம் கூடுகிறது.

மேலும், மண் புழுக்கள், உணவுக்காக நிலத்தில் ஏற்படுத்தும் துளைகளால், மண் இறுக்கம் தளர்ந்து, மண்ணின் அமைப்பு, வடிவம் போன்ற இயற்பியல் தன்மைகளும் மேம்படுகின்றன.

பெரிய மண் புழுக்கள் ஏற்படுத்தும் துளைகள் மூலம், அதிகளவில் வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது. மண் இளக்கம் மற்றும் மண்புழு எச்சத்தால், காற்று அதிகமாக மண்ணுக்குள் செல்கிறது.

இதனால், பயிர்களின் வேர்களுக்கு வேண்டிய பிராண வாயு நிறையக் கிடைத்து, பயிர் வினையியல் மாற்றங்கள் சீராக நடக்கின்றன. எனவே, பயிர்களின் வளர்ச்சியும் மகசூலும் கூடுகின்றன.

மண்ணில் அதிக ஆழத்துக்குச் சென்று வாழும் மண் புழுக்கள் உருவாக்கும் துளைகளால், அடிமண் வரையில் நீர் செல்கிறது. இதனால், நீர்ப் பிடிப்புத் தன்மை கூடுகிறது.

மேலும், நிலத்தில் தேங்கும் அதிகப்படியான நீர் விரைவில் வடியவும் இந்தத் துளைகள் உதவுகின்றன. மண் புழுக்களின் செயலால், பயிருக்கு வேண்டிய சத்துகள் அனைத்தும் எளிதில் கிடைப்பதால், பயிர்கள் நன்கு வளர்கின்றன.

நுண்ணூட்டங்கள்

மேலும், நிலத்தில், நன்மை பயக்கும் மற்ற நுண்ணுயிர்கள் பன்மடங்கு பெருகுகின்றன. தழைச்சத்தை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள், கரையா நிலையிலுள்ள மணிச்சத்தைக் கரைக்கும் பாக்டீரியாக்கள், மண்புழுக் கழிவில் நிறைய உள்ளன. இதனால், தழைச்சத்தும் மணிச்சத்தும் பயிர்களுக்கு அதிகளவில் கிடைக்கின்றன.

அனைத்து நுண் சத்துகளும் மண்புழுக் கழிவில் இருப்பதால், பயிருக்கு ஏற்படும் நுண்ணூட்டக் குறைகள் தவிர்க்கப்படுகின்றன. மண்புழு உரத்தில் சுண்ணாம்புச் சத்து இரண்டு மடங்கு இருப்பதால் நிலம் மிருதுவாகிறது. மண்புழுக் கழிவில் நிறைய இருக்கும் மட்கு, வேர்கள் நன்கு வளர உதவுகிறது.

வளர்ச்சி ஊக்கிகள்

எல்லாவற்றுக்கும் மேலாக, பயிர் வளர்ச்சி ஊக்கிகளான, சைட்டோகைனின், ஆக்ஸின் மற்றும் பலவகை நொதிப் பொருள்கள், ஹார்மோன்கள், வைட்டமின்கள் உள்ளதால், பயிர்கள் நன்றாக வளர்கின்றன.

காய்கனிகளின் சுவை, நிறம், வாசம் மேம்படுவதுடன், அந்தப் பொருள்கள் நீண்ட நாட்கள் கெடாமல் காக்கப்படுகின்றன. பயிர்களின் பூக்கும் தன்மை அதிகமாவதால் மகசூலும் கூடுகிறது.

பசுமைப் புரட்சியின் விளைவால் கிடைத்த அதிக மகசூல், தற்போது பல பயிர்களில் குறைந்து விட்ட நிலையில், மண் வளத்தைக் காக்கும் முனைப்பில் விவசாயிகளும் ஆய்வாளர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நேரத்தில், மண் வளத்தைக் காத்து மகசூலைக் கூட்டும் அற்புத உயிரினமாம் மண் புழுக்களை வயல்களில் பெருக்குவோம். பண்ணைக் கழிவுகளை எரிக்காமல், வீணாக்காமல் மண்புழு உரத்தை உற்பத்தி செய்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.


முனைவர் த.இராஜகுமார், முனைவர் ந.தவப்பிரகாஷ், இரா.கார்த்திகேயன், நா.மரகதம், பண்ணை மேலாண்மைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks