My page - topic 1, topic 2, topic 3

மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

மண்புழு உரம்

விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலை நிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப் பகுதிகளை உண்டு மண் புழுக்கள் வெளியிடும் எச்சம், பயிருக்குத் தேவையான சத்துகள் நிறைந்த உரமாகும்.

இந்த உரத்திலும் மண் புழுக்கள் வாழும் இடத்திலும் கரிமச் சத்துகளின் அளவு அதிகமாக இருப்பதுடன், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் வாழும் இடமாகவும் விளங்குகிறது. இதனால் மண் உயிரோட்டமாக இருப்பதுடன் மண்வளமும் பெருகுகிறது. எனவே, மண்புழுக்களை பூமியின் குடல்கள் என்பது சாலச் சிறந்ததாகும்.

உரம் தயாரிக்க உகந்த புழுக்கள்

மண் புழுக்களில் பலவகைகள் இருந்தாலும், மண்ணின் மேற்புறம் வாழும் புழுக்களே உரம் தயாரிக்க உகந்தவை. இவை, கழிவுப் பொருள்களை மட்டுமே உண்டு உரமாக மாற்றும்.

இந்தப் புழுக்கள், அங்ககக் கழிவுகளை உண்ணும் திறன், விரைவான வளர்ச்சி, இனப்பெருக்கத் திறன், காலநிலை மற்றங்களைத் தாங்கி வளரும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

யூடிரல்லஸ் யூஜினேயே, பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ், எய்சீனியா பெயிடிடா, டிராவிடா வில்ஸி, லாம்பிடோ மௌரிஸி ஆகிய மண்புழு வகைகள், உரம் தயாரிக்க ஏற்றவை.

உரம் தயாரிக்க ஏற்ற கழிவுகள்

கரும்புத்தோகை, வாழைத்தண்டு, மக்காச்சோளத் தட்டை, வைக்கோல், தென்னை நார்க்கழிவு, பயறு வகைகளின் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், உதிர்ந்த இலைகள், காளான் வளர்ப்புக் கழிவுகள்,

பட்டுப்புழு வளர்ப்புக் கழிவுகள் மற்றும் சிக்கலான களைகளான பார்த்தீனியம், ஆகாயத் தாமரை, நெய்வேலிக் காட்டாமணக்கு, புல்வகைகள், கீரை வகைக் களைகள்.

இவற்றை, 5 செ.மீ. அளவில் சிறிய துண்டுகளாக வெட்டி, ஈரப்பதம் 20-40 சதம் இருக்குமாறு நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மேலும், மண் புழுக்கள் விரும்பி உண்ணும் மாட்டெரு, கோழியெரு, ஆட்டெரு, குதிரையெரு, பன்றியெரு மற்றும் சாண எரிவாயுக் கழிவையும் காய வைத்துச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

உணவுக் கலவைத் தயாரிப்பு

பயிர்க் கழிவுகள் மற்றும் விலங்கினக் கழிவுகளை ஒன்றாகக் கலந்து மண் புழுக்களுக்கு அளித்து உரத்தைத் தயாரிக்கலாம். கீழ்க்கண்ட உணவுக் கலவைகள் மண்புழுவுக்கு ஏற்ற உணவுக் கலவைகள் என்பது, ஆய்வின் முடிவாகும்.

ஒரு வாரம் மட்கிய சாண எரு; சம அளவில் கலக்கப்பட்ட மாட்டெரு + ஆட்டெரு + குதிரையெரு.

10:3 வீதம் கலக்கப்பட்ட மாட்டெரு + பயிர்க் கழிவுகள்.

10:3 வீதம் கலக்கப்பட்ட ஆட்டெரு + பயிர்க் கழிவுகள். 5:5:3 வீதம் கலக்கப்பட்ட கோழியெரு + ஆட்டெரு + பயிர்க் கழிவுகள்.

சமமாகக் கலக்கப்பட்ட ஆட்டெரு + கோழியெரு + பன்றியெரு.

10:3 வீதம் கலக்கப்பட்ட மாட்டெரு + காய்கறிக் கழிவுகள்.

பண்ணை மற்றும் பயிர்க் கழிவுகளைக் கலந்து, குவியலாக அல்லது ஒரு குழியில் இட்டு நீரைத் தெளித்து நன்கு ஈரமாக்கி, 2-3 வாரம் மட்க வைத்துக் கொடுத்தால் மண்புழுக்கள் விரும்பி உண்ணும்.

உர உற்பத்தி

குவியல் முறை: இம்முறையில், நிழலான இடத்தில் ஒரு சதுர மீட்டர் பரப்பில் மேட்டுப் பாத்தியை அமைக்க வேண்டும். பிறகு, அதன் மேல் 2-3 செ.மீ. அளவுக்கு மணலை இட வேண்டும். பிறகு, மண் புழுக்களைச் சேகரித்த பகுதியில் இருந்து எடுத்து வந்த மண்ணை 5 செ.மீ. அளவுக்கு இட வேண்டும்.

இதன் மேல், 9-12 அங்குல உயரத்தில் சிறு அடுக்காக, பண்ணைக் கழிவுகளான சாணம், சாண எரிவாயுக் கழிவு, ஆட்டெரு, கோழியெரு ஆகியவற்றில் ஒன்றை அல்லது இவற்றைச் சம அளவில் கலந்து ஒரு அடுக்காக இட வேண்டும்.

அடுத்து, இதன்மேல் தூளாக்கிய பயிர்க் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் அல்லது களைகளை அதேயளவில் இரண்டாம் அடுக்காக இட வேண்டும். பிறகு, இந்த உணவு அடுக்குகளில் 60 சதம் ஈரம் இருக்கும் வகையில் நீரைத் தெளிக்க வேண்டும்.

ஒரு வாரம் கழித்து இந்த உணவு அடுக்குகளைக் கலைத்துத் திருப்ப வேண்டும். இதனால், பண்ணை மற்றும் பயிர்க் கழிவுகள் ஒன்றாக மட்கத் தொடங்கும்.

மேலும், குவியலுக்குள் இருந்த வெப்பம் வெளியேறி, உணவுக் கலவை, இளம் பழுப்பு அல்லது அடர் கறுப்பாக மாறியிருக்கும். இதில் மண் புழுக்களை விட்டால், கலவையைத் தின்று எச்சமாக வெளியேற்றும்.

குழி முறை: இம்முறையில் மரநிழலில் கொட்டகை அமைத்து அல்லது மாட்டுக் கொட்டில் ஓரத்தில் குழியை அமைத்துக் கொள்ளலாம். குழியின் நீளம் பத்து அடியும், ஆழம் மூன்றடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதனால், மண் புழுக்களின் இயக்கம் சிறப்பாக இருப்பதுடன், அவற்றுக்கு உணவிடுதல் மற்றும் உரத்தைச் சேகரிப்பது எளிதாக இருக்கும்.

குழியைத் தோண்டிய பின் அதன் சுற்றுப்பகுதி மற்றும் அடிப்பகுதியை நெகிழித் தாளால் மூடிவிட வேண்டும். இது, குழியில் விடப்படும் புழுக்கள் மண்ணுக்குள் சென்று விடாமல் இருக்க உதவும்.

அதன் மேல், 2-3 செ.மீ. அளவில் மணலை இட வேண்டும். இது, குழியில் தேங்கும் நீரை வெளியேற்ற, மழையின் போது தேங்கும் நீரை வடிக்கப் பயன்படும்.

இதன்மேல், புழுக்களைச் சேகரித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை 5 செ.மீ. அளவில் இட வேண்டும். பிறகு அதன் மேல், மட்கிய உணவுக் கலவையை இட்டு, மண் புழுக்களை விட வேண்டும்.

இப்படி மாறி மாறி உணவுக் கலவை மற்றும் மண் புழுக்களை விட்டு, குழியின் மேற்பகுதியில் 5 செ.மீ. அளவுக்குக் காலியாக இருக்கும்படி நிரப்ப வேண்டும். சதுர மீட்டருக்கு ஆயிரம் மண் புழுக்கள் வீதம் விட வேண்டும்.

இந்த முறையிலும் தினமும் கலவையின் மீது நீரைத் தெளித்து 60 சதம் ஈரப்பதத்தைக் காக்க வேண்டும். மண் புழுக்கள் கலவைக்குள் சென்று ஓரிரு நாட்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, உணவுக் கலவையை உண்ணத் தொடங்கும். குவியலின் மேற்பரப்பில் இரவு நேரத்தில் எச்சத்தை இடும்.

புழுக்களை விட்டு 2-3 வாரங்களில் குருணை வடிவிலான எச்சத்தைச் சேகரிக்கத் தொடங்கலாம். ஒவ்வொரு புழுவும் தனது உடலின் எடையைப் போல ஐந்து மடங்கு உணவுக் கலவையைத் தின்று, அதில், 10 சதத்தை மட்டும் தனது உடல் வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்டு, மீதியை எச்சமாக வெளியேற்றும்.

இந்த முறைகளில், உரத்தைச் சேகரிக்க இரண்டு நாட்கள் உள்ள போதே நீரைத் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். உரத்தை சேகரிக்கத் தொடங்கியதும் புழுக்கள் உணவுக் கலவையின் அடிப்பகுதிக்குச் சென்று விடும்.

இவற்றையும் மண்புழு முட்டைக் கூடுகளையும் சேகரித்து மீண்டும் உரம் தயாரிக்கலாம். இந்த இரு முறைகளும் விவசாயிகள் தமது சொந்தத் தேவைக்காக, குறைந்த செலவில் ஏற்படுத்திக் கொள்வதாகும்.

சில்பாலின் பை முறை

இந்த முறையில் உரம் தயாரிக்கும் இடத்தின் மேல், பனி, வெய்யில், மழை படாத வகையில் கூரையை அமைக்கலாம். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடமாக இருக்க வேண்டும். வெய்யில், மழையில் இருந்து காப்பதற்குக் கீற்றுக் கூரையை அமைக்கலாம்.

தரை கடினமாக இருக்க வேண்டும். மென்மையாக இருந்தால் புழுக்கள் மண்ணுக்குள் செல்ல ஏதுவாகும். மேலும், படுக்கையில் நீரைத் தெளிக்கும் போது, கரையும் சத்துகள் அந்த நீரில் கரைந்து, மண்ணுக்குள் சென்று விடும்.

இடத்தேர்வு

சில்பாலின் பைகளை வைக்கும் இடம் மழைநீர்த் தேங்காத வகையில் சற்று மேடாக இருக்க வேண்டும். தரை கெட்டியாக, சமமாக இருக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல நிழல் இருக்க வேண்டும். மரத்தடியில் அமைத்தால், சிறிய கற்களால் தரையை இறுக வைக்க வேண்டும். இதனால், மரத்தின் வேர்கள் சில்பாலின் பைகளுக்குள் ஊடுருவாமல் இருக்கும்.

சில்பாலின் தொட்டி அமைத்தல்

250 ஜி.எஸ்.எம் அளவில் 250 சில்பாலின் பைகள் வேண்டும். இதன் நிகர எடை நான்கு கிலோவும், 12x4x2 அடியும் இருக்க வேண்டும். இதற்குக் குறைந்த எடையுள்ள பைகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தத் தொட்டியை அமைக்க, ஒரு அங்குலக் கனமுள்ள சவுக்குக் குச்சிகள் தேவைப்படும். சுமார் 13 அடி நீளத்தில் நான்கு குச்சிகளும், 5 அடி நீளத்தில் பத்துக் குச்சிகளும் தேவைப்படும். பைகளைக் குச்சிகளுடன் கட்ட, சிறிய நைலான் கயிறுகள் தேவைப்படும்.

சில்பாலின் பைகளின் வெளிப்புறத்தில் நீளவாக்கில் இருபுறமும், மேலும் கீழுமாக உள்ள உறையில் 13 அடி நீளமுள்ள குச்சிகளைச் செருக வேண்டும்.

பிறகு, 5 அடிக் குச்சிகளைத் தொட்டியின் அமைப்புக்கு ஏற்ப, பைகளின் நீளவாக்கில், இருபுறமும் சீராக இரண்டு அடி ஆழத்தில் மண்ணில் ஊன்ற வேண்டும். அடுத்து, சில்பாலின் பை விறைப்பாக இருக்குமாறு குச்சிகளில் நைலான் சரடுகளால் இறுக்கமாகக் கட்ட வேண்டும்.

தொட்டியில் எந்த இடத்திலும் தொய்வு இருக்கக் கூடாது. பையின் அடியில் உள்ள வடிகால் பகுதியின் வெளிப்புறத்தில், மண்ணில் 1.5×1.5 அடி அகலம் 2 அடி ஆழத்தில், வடிகால் குழியை அமைத்து, மணலை நிரப்பி வைக்க வேண்டும். சில்பாலின் பையை, வடிகால் குழி இருக்கும் இடத்தை நோக்கிச் சரிவாக இருக்கும்படி அமைக்க வேண்டும்.

குப்பையை இடுதல்

தொட்டியின் அடிப்பகுதியில் அரையடி உயரத்துக்கு, தேங்காய் நாரை நிரப்ப வேண்டும். இதில் போதுமான ஈரப்பதம் இருக்குமாறு நீரைத் தெளிக்க வேண்டும்.

பிறகு, மட்கிய குப்பை மற்றும் சாணத்தை நிரப்பும் போது, சிறு கற்கள், நெகிழிப் பைகள், குச்சிகள் போன்ற மட்காத பொருள்களை அகற்றி விட வேண்டும். இந்தப் பையை நிழல் வலையால் மூடிவிட வேண்டும். இதனால் பறவைகள் மற்றும் கோழிகளிடம் இருந்து புழுக்களைப் பாதுகாக்கலாம்.


SUDHAKAR

முனைவர் கு.சுதாகர், சு.தாவீது, முனைவர் எ.முருகன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks