பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

மண்புழு உர Earth worms 0ad0457f482371e39b47325fa7adad6d

ம் நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண் புழுக்களை பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில்.

மண் புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும். ஆனால், இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாகத் தெளிப்பதால் மண் புழுக்கள் குறைந்து விட்டன. அதனால், மண்வளம் காக்க, மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உர உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

மண்புழு வகைகள்

மண்புழுவில் 3,000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றின் வாழ்க்கை முறை மற்றும் மண்ணைத் துளைக்கும் விதத்தின் அடிப்படையில், இவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

எபிஜெஸ்: சிறிதாக இருக்கும் இந்தப் புழுக்கள், தரைக்கு மேலிருக்கும் குப்பை, இலை தழைகளில் வாழும். பெரியோனிக்ஸ் எக்ச வேட்டஸ், யூட்ரில்ஸ் யூஜினியா, டிராவிட வில்சி, ஐசீனியா ஃபோட்டிடா ஆகிய இனங்கள் மூலம் உரம் தயாரிக்கலாம்.

என்டோஜெஸ்: இவ்வகைப் புழுக்கள் சிறிதும், பெரிதுமாக வெளிரிய நிலையில் இருக்கும். மண்ணின் நடுவில் இருக்கும் உயரத்தில் துளையிட்டுச் செல்லும். இவற்றில் லாம்பிட்டோ மௌரிட்டி இனம் முக்கியமானது.

அனெசிக்யூஸ்: இவ்வகைப் புழுக்கள், மண்ணின் ஆழத்தில் அளவில் பெரிதாக இருக்கும். நீளவாக்கில் துளையிட்டுச் செல்லும். முதுகிலும் முன்புறமும் கரும்பழுப்பு நிறம் இருக்கும். மேலும், பூனா இரகம், கேரள இரகம், பெங்களூரு இரகம், உள்ளூர் இரகம் என, நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

பூனா இரகம்: இது நீளமாக இருக்கும். வால் பகுதி உருண்டையாக இருக்கும். நிலமட்டத்தில் இருந்து, 1.5-2.5 அடி ஆழத்தில் இருக்கும்.

கேரள இரகம்: இது, மிகவும் மெலிதாக, நூலைப் போல இருக்கும். உர உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுவதில்லை.

பெங்களூரு இரகம்: நீளமாக, கருஞ்சிவப்பாக இருக்கும். வால் தட்டையாக இருக்கும். ஒரு கிலோ எடையில் 400-500 புழுக்கள் இருக்கும்.

உள்ளூர் இரகம்: நீளம் குறைவாக, உறுதியாக இருக்கும். ஒரு கிலோ எடையில் ஆயிரம் புழுக்கள் இருக்கும்.

வாழ்க்கை முறை

மண் புழுக்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வகையாகும். ஒரு மண்புழு 40-50 நாட்களில் நன்கு வளர்ந்து, முட்டை வைக்கத் தொடங்கி விடும். மண்புழு இனப்பெருக்கம் மழைக் காலத்தில் அதிகமாக இருக்கும்.

ஒரு புழுவிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். மண்புழுவை இரண்டு துண்டுகளாக வெட்டினாலும் அது இறக்காது. ஒரு புழு மூலம் ஓராண்டில் 240 புழுக்கள் உருவாகும்.

மண்புழு உரம்

மண்புழு உரம் என்பது, தாவர மற்றும் கால்நடைக் கழிவுகளை, மண் புழுக்கள் மூலம் மட்க வைப்பதாகும். புழுக்கள் கழிவுகளைச் செரிக்க, அவற்றின் ஒரு பகுதியாவது மட்கியிருக்க வேண்டும். இல்லையேல், மட்கும் போது, கழிவுகளில் இருந்து உண்டாகும் வெப்பத்தால், புழுக்கள் இறந்து போகும்.

குப்பை மேடு குளிர்ந்ததும் அதில் புழுக்களைச் சேர்க்கலாம். இவ்வகையில், மட்கும் தன்மையுள்ள பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச் சருகுகள், கால்நடைக் கழிவுகளை மண்புழு உரமாக மாற்றலாம்.

உற்பத்தி முறைகள்

தொட்டிமுறை: தொட்டி 6 அடி நீளம், 3 அடி அகலம், 1.5 அடி ஆழத்தில் இருக்க வேண்டும். கழிவுகளின் இருப்பைப் பொறுத்து, தொட்டியின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால், ஆழத்தை மாற்றக் கூடாது. நிழல் மற்றும் மேடான இடத்தில் தொட்டியை அமைக்க வேண்டும்.

தொட்டியை நிரப்புதல்: தொட்டியின் அடியில் 5-6 செ.மீ. உயரம் வரை, கூழாங்கற்கள் அல்லது உடைந்த செங்கல் துண்டுகளைச் சீராகப் பரப்ப வேண்டும். இடைப்பட்ட பகுதியில் மணலைத் தூவி, அதன் மேல் தோட்ட மண்ணை நிரப்ப வேண்டும். இது, நீரை வடிகட்ட உதவும்.

இதற்கு மேல், சாணக் கரைசலைத் தெளித்து, அதற்கு மேல், நீர் விட்டுக் கிளறி வைத்த கழிவை, ஒரு அடுக்காகப் பரப்ப வேண்டும்.

இதன் மேல் சாணம் மற்றும் புளித்த மோர்க் கரைசலைத் தெளித்து, மீண்டும் கழிவைப் பரப்பி, சாணம் மற்றும் மோர்க் கரசலைத் தெளிக்க வேண்டும். இப்படி, மாறி மாறி அடுக்கி, தொட்டியை நிரப்ப வேண்டும். இதன் மேல் களிமண்ணைப் பூசி மெழுகி, 15 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.

6x3x1.5 அடி அளவுள்ள தொட்டியில் ஒரு டன் கழிவை நிரப்பலாம். இக்கழிவை 30 நாளில் 250-300 கிலோ உரமாக மாற்றுவதற்கு, 25,000 மண் புழுக்கள் தேவைப்படும். தொட்டியில் விடப்படும் புழுக்கள் மேலிருந்து கீழாகச் சென்று கழிவை மட்க வைக்கும்.

படுக்கை முறை: உரப்படுக்கை 3 அடி அகலம், 15 அடி நீளம், 1.5 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கழிவுகளைக் கிளறி நீரைத் தெளித்து 15 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.

படுக்கை அமைத்தல்: தரையில் மணலைப் பரப்பி அதன் மேல் வேப்பம் புண்ணாக்கைச் சிறிது தூவ வேண்டும். அதன் மேல் வாழைச்சருகு அல்லது தென்னை நார்க் கழிவை 3-4 அங்குலம் பரப்ப வேண்டும்.

அதற்கு மேல், கழிவுகளை 12 அங்குல உயரம் வரை பரப்ப வேண்டும். பிறகு அதை வாழைச் சருகால் மூடி வைக்க வேண்டும். உரப் படுக்கையின் ஈரப்பதம் 50-60 சதம் இருக்க வேண்டும்.

படுக்கையில் சூடு குறைந்ததும் ஒரு வாரம் கழித்து, அதன் நடுவில் சதுர மீட்டருக்கு ஆயிரம் புழுக்கள் வீதம் விட வேண்டும். 15 நாள் கழித்துப் படுக்கையைக் கிளறி விட்டு நீரைத் தெளித்துப் பராமரித்து வந்தால், 30 நாளில் கழிவுகள் மட்கி விடும். இப்போது நீர்த் தெளிப்பை நிறுத்தினால், மண் புழுக்கள் அடியில் சென்று விடும்.

மண் புழுக்களைப் பிரித்தல்

உரத்தயாரிப்பு முடிந்ததும் கவர்தல் முறையில் புழுக்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அதாவது, சிறிய மாட்டுச்சாண உருண்டைகளை உரக்குழியில் ஐந்தாறு இடங்களில் வைத்தால், இவற்றை நோக்கி மண் புழுக்கள் வந்து சேரும்.

உடனே நீரிலிட்டால் சாண உருண்டைகள் கரைந்து விடும். மண் புழுக்கள் தனியாகப் பிரிந்து விடும். இவற்றைச் சேகரித்து, அடுத்த உரத் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம். அறுவடை செய்த மண்புழு உரத்தை இருட்டறையில் 40 சத ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்.

மண்புழு உரத்திலுள்ள சத்துகள்

சத்துகளின் அளவு, பயன்படுத்தும் மூலப் பொருள்களுக்கு ஏற்றபடி மாறுபடும். பலவிதக் கழிவுகளைப் பயன்படுத்தினால், அவ்வுரம் பலதரப்பட்ட சத்துகளைக் கொண்டதாக இருக்கும். ஒரே வகைக் கழிவு என்றால், குறிப்பிட்ட சத்துகள் மட்டுமே இருக்கும்.

மண்புழு உரத்திலுள்ள சத்துகள்

கரிமச்சத்து: 9.5-11.98 சதம்,

தழைச்சத்து: 0.5-1.5 சதம்,

மணிச்சத்து: 0.1-0.3 சதம்,

சாம்பல் சத்து: 0.15-0.56 சதம்,

சோடியம்: 0.06-0.30 சதம்,

கால்சியம், மெக்னீசயம்: 22.67-47.6 மி.கி./100 கிராம்,

தாமிரம்: 2-9.5 மி.கி./கிலோ,

இரும்பு: 2-9.3 மி.கி./கிலோ,

துத்தநாகம்: 5.7-11.55 மி.கி./கிலோ,

கந்தகம்: 128-5485 மி.கி./கிலோ.

மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.


மண்புழு உர PORPAVAI

முனைவர் ச.பொற்பாவை, பேராசிரியர் மற்றும் தலைவர், மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் – 613 501.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading