My page - topic 1, topic 2, topic 3

புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

புழுதி நெல்

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

லகளவில் 157 மில்லியன் எக்டரில் நெல் பயிராகிறது. இந்தியாவில் 43.95 மில்லியன் எக்டரில் பயிராகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.79 மில்லியன் எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

புழுதியில் விதைத்த சேற்று நெல்

இந்த முறையை, பாதிப் புழுதி வயல், பாதிச் சேற்று வயல் என்பார்கள். மானாவாரி நெல் சாகுபடி எனவும் கூறலாம். நெல்லின் 2-ஆம் பருவமான இனவிருத்திக் காலத்தில், கண்மாயில் உள்ள நீரைப் பொறுத்து, தொடர்ந்தோ விட்டு விட்டோ பாய்ச்சுவார்கள். இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இம்முறை நடப்பில் உள்ளது.

இரகங்கள்

ஏ.டி.டீ.49, கோ.50, டி.கே.எம்.13, கோ.52 ஆகிய உயர் விளைச்சல் இரகங்களை, ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரையில் விதைக்கலாம். விதைப்பதற்கு முன், கோடையுழவும், அதற்குப் பிந்தைய உழவும் அவசியம். கடைசி உழவில் எக்டருக்கு ஒரு டன் ஜிப்சத்தை நிலத்திலிட்டு உழுதால், மண் இறுக்கம் குறையும்.

விதைப்பு

ஒரு எக்டருக்குத் தேவையான 75 கிலோ விதையை, ஒரு சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் கடினப்படுத்த வேண்டும். அடுத்து, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். முக்காலடி அகல வரிசையில் விதைப்புக் கருவி மூலம், மழைக்கு முன்பே விதைத்து விட வேண்டும்.

பின்செய் நேர்த்தி

மிகவும் வறட்சியாக இருந்தால், ஒரு சத பொட்டாஷ் கரைசலை, இலை வழியாகத் தெளித்து, நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்தலாம். பிறகு, கண்மாயில் நீர் வந்ததும் பாய்ச்சி, பயிர்களைக் களைதல், பாடு நிரப்புதல், களையெடுத்தல், மேலுரம் இடுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

உர மேலாண்மை

ஒரு எக்டருக்கு 25 கிலோ மணிச்ச த்துள்ள 150 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை, 750 கிலோ தொழுவுரத்தில் கலந்து ஊட்டமேற்றிய உரமாக இட வேண்டும். 100 கிலோ தழைச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்தை, நான்காகப் பிரித்து, பயிர்கள் முளைத்து 20-25, 40-45, 60-65, 80-85 நாட்களில் இட வேண்டும்.

துத்தநாகம், இரும்புச்சத்துக் குறையுள்ள இடங்களில், எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 50 கிலோ இரும்பு சல்பேட்டை, 50 கிலோ மணலில் கலந்து, விதைப்பதற்கு முன் இட வேண்டும்.

இலைவழி உரமாக, யூரியா ஒரு சதம், டிஏபி 2 சதம், பொட்டாஷ் ஒரு சதம் கரைசலை, பூங்குருத்து உருவாகும் போதும், அடுத்துப் பத்துநாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

புழுதி நேரடி விதைப்பில், பயிரும் களைகளும் ஒரே சமயத்தில் முளைப்பதால், களைகளைக் கட்டுப்படுத்துவது சிரமம். ஆட்களும் கிடைக்காத நிலையில், களைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.

இதற்கு, பயிர்கள் முளைத்த ஐந்து நாளுக்குள், எக்டருக்கு ஒரு கிலோ பென்டிமித்திலின் அல்லது 0.45 கிலோ பிரிடிலாக் குளோர் ரூசேப்னர் அல்லது 200 கிராம் பைரசோ சல்பூரான் அல்லது 250 மில்லி பிரிடிலாக் குளோர் மருந்தை, விதைகள் முளைக்கப் போதுமான மழை பெய்ததும் தெளிக்கலாம். இதில் தப்பும் களைகளை, விதைத்த 30-35 நாட்களில் ஆட்கள் மூலம் அகற்றலாம்.

முளைத்த களைகளைக் கட்டுப்படுத்தும், பிஸ்பைரிபாக் சோடியம் 10 எஸ்.சி. என்னும் களைக் கொல்லியை எக்டருக்கு 200-250 மில்லி வீதம், பயிர்கள் 2-4 இலைகளைக் கொண்டுள்ள பருவத்தில் தெளித்து, புல், கோரை, அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

அல்லது 2,4-டி சோடியம் உப்பு 80 நனையும் தூளை 1,250 கிராம் எடுத்து, பயிர்கள் 5-6 இலைகளைக் கொண்டுள்ள பருவத்தில் தெளித்து, அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பாசனம்

புழுதியில் விதைத்த 30-35 நாட்கள் மானாவாரியாகக் கருதப்படும். கண்மாயில் நீர் வந்ததும் 2.5 செ.மீ. அளவில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். நீர் அரிதாகவுள்ள இக்காலத்தில், இதுவரை கூறிய நுட்பங்களைப் பயன்படுத்தி நெல்லைப் பயிரிட்டால், குறைந்த நீரில் நிறைந்த விளைச்சலைப் பெற முடியும்.


முனைவர் மு.கதிரவன், முனைவர் மு.ரா.லதா, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks