My page - topic 1, topic 2, topic 3

பால் கறவையை முடக்கும் மடி வீக்கம்!

மடி நோய்

பால் உற்பத்தியைப் பெருக்க, கால்நடைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பசு மற்றும் எருமைகளுக்கு வரக்கூடிய பல நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை செய்யா விட்டால், அந்த மாடுகளில் காலம் முழுவதும் பாலைக் கறக்க முடியாத நிலை ஏற்படலாம்.

மடிவீக்க நோய் பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. இவை எல்லா இடங்களிலும் நிறைந்து உள்ளன. குறிப்பாக, சரியாகப் பராமரிக்காத மாட்டுத் தொழுவங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், கறவை மாடுகளின் காம்புத் துளைகள் வழியாக மடிக்குள் சென்று மடிவீக்க நோயை உண்டாக்கும்.

மாட்டின் நான்கு காம்புகளிலும் பால் சுரந்தால் தான் கறவை வளர்ப்பில் இலாபம் கிடைக்கும். சரியாக மடியைக் கழுவாமல் பாலைக் கறத்தல் மற்றும் முழுமையாகப் பாலைக் கறக்காமல் மடியில் பாலைத் தங்க விடுவதால் மடிநோய் ஏற்படும்.

காம்புகளை அழுத்திக் கறப்பதனால் விரல் நகம் பட்டு மடியில் காயம் உண்டாகி, அதன் வழியாக பாக்டீரியாக்கள் மடிக்குள் சென்றாலும் மடிவீக்கம் ஏற்படும். அசுத்தக் கைகளால் பாலைக் கறப்பது மற்றும் மடிவீக்க மாட்டில் பாலைக் கறந்து விட்டு, மற்ற மாடுகளில் பாலைக் கறப்பது மடிவீக்கம் ஏற்பட வழி வகுக்கும்.

மடிவீக்கம் வந்த மாட்டில், முதலில் பாலின் அளவு குறையும். பிறகு, பாலின் சுவையில் உப்புக் கூடும். பாலைக் காய்ச்சினால் திரிந்து போகும். நோய் தீவிரமானால், மடி வீங்கிச் சூடாக இருக்கும். இந்நிலையில், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நோய் வந்த பின் சிகிச்சை தருவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது.

இதற்கு, மாட்டுத் தொழுவம் சுத்தமாக இருக்க வேண்டும். சாணமும் சிறுநீரும் தொழுவத்தில் தேங்கக் கூடாது. பாலைக் கறப்பதற்கு முன், மடியை லேசான வெந்நீரில் கழுவி, உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கறவையாளரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks