My page - topic 1, topic 2, topic 3

பயறு வகை சாகுபடி!

பயறு வகை

யறு வகைகளில் குறைவான மகசூலே கிடைத்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள், பயறு வகைகளைப் பெருமளவில் மானாவாரிப் பயிராக விதைப்பதும், வளங்குன்றிய நிலங்களில் பயிரிடுவதும், தரமான விதைகளை விதைக்காமல் விடுவதும், பூக்கும் போது பூ மற்றும் இளங் காய்கள் உதிர்ந்து விடுவதும் ஆகும். தரமான விதை மற்றும் சிறந்த உத்திகள் மூலம் நல்ல மகசூலைப் பெறலாம்.

மகசூல் குறைவுக்கான காரணங்கள்

வளமற்ற நிலங்களில் பயிரிடுவது, பெரும்பாலும் (80%) மானாவாரியில் பயிரிடுவது. தரமற்ற மற்றும் உற்பத்தித் திறனற்ற, பூச்சி, நோய்களைத் தாங்கி வளர இயலாத இரகங்களை விதைப்பது. நல்ல இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் தெரியாமை. உரமிடாமல் சாகுபடி செய்வது. பயிர் எண்ணிக்கை பராமரிப்பு இல்லாதது.

பருவத்தில் விதைக்காமல் விடுவது. விதையைக் குறைந்தளவில் விதைப்பது. களைகளை அகற்றாமல் விடுவது. உயிர் உரங்களை இடாமல் விடுவது. தேவையான வேளாண் கருவிகள் இல்லாமை. முக்கியப் பயிராக இல்லாமல் ஊடுபயிராக விதைப்பது.

மகசூலைப் பெருக்கும் உத்திகள்

நல்ல நிலங்களில் பயிரிடுவது. தனிப்பயிராக விதைப்பது. நல்ல இரகங்களை, சரியான பருவத்தில் விதைப்பது. பயிர் எண்ணிக்கைப் பராமரிப்பு. ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடியில் விதை நேர்த்தி செய்வது,

நேரடியாக நிலத்திலும் இடுவது. ஒருங்கிணைந்த உரம், களை, பயிர், நீர் நிர்வாகம் செய்வது. 2 சத டி.ஏ.பி. கரைசலைத் தெளிப்பது. 250 லிட்டர் பிளானோபிக்ஸ் கரைசலைத் தெளிப்பது.

பருவம், விதையளவு

ஆடிப் பட்டமான ஜூன்- ஆகஸ்ட், புரட்டாசிப் பட்டமான செப்டம்பர்- நவம்பர் மற்றும் நெல் தரிசில் ஜனவரியில் விதைக்க வேண்டும். தனிப்பயிராக விதைக்க, எக்டருக்கு 20 கிலோ விதை, ஊடுபயிராக விதைக்க எக்டருக்கு 10 கிலோ விதை, நெல் தரிசில் விதைக்க, எக்டருக்கு 25 கிலோ விதை தேவை. விதைப்பு நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பிறகு, பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதை நேர்த்தி

பூசண விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது திரம் வீதம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.

உயிரியல் விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் வேரழுகல் நோயைத் தடுக்க, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கலந்து, அத்துடன் நுண்ணுயிர் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

ரைசோபிய நுண்ணுயிர் விதை நேர்த்தி: எக்டருக்கு வேண்டிய 20 கிலோ விதைக்கு மூன்று பொட்டலம் ரைசோபியம் தேவை. இந்த ரைசோபியத்தை 750 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் கலக்க வேண்டும்.

பிறகு, இதில் ஏற்கெனவே பூசண நேர்த்தி செய்த விதையைக் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். உயிர் உரத்தைக் கலந்து 24 மணி நேரத்தில் விதைத்து விட வேண்டும்.

பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி: பயிருக்குக் கிட்டா நிலையில், மண்ணிலுள்ள மணிச்சத்தை, இந்த பாஸ்போ பாக்டீரியா கிரகித்துப் பயிருக்குக் கொடுக்கும்.

இதனால், மகசூல் அதிகரிக்கும். எனவே, ரைசோபியத்தில் நேர்த்தி செய்ததைப் போல, இதிலும் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

வறட்சியைத் தாங்கும் விதை நேர்த்தி: விதைகளை 100 பிபிஎம் சிங்க் சல்பேட் கரைசலில், அதாவது, 100 லிட்டர் நீருக்கு 10 கிராம் சிங்க் சல்பேட் வீதம் கலந்த கரைசலில் விதைகளை 4 மணி நேரம் ஊற வைத்தும், பிறகு நன்றாக உலர்த்தியும் விதைக்க வேண்டும்.

விதைப்பு

விதைகளை 30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசாக இருந்தால், அறுவடைக்கு 5-10 நாட்கள் இருக்கும் போதே, விதைத்து விட வேண்டும். அப்போது நிலத்தில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.

உர நிர்வாகம்

விதைப்பதற்கு முன் அடியுரம் இட வேண்டும். மானாவாரிப் பயிருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து, 10 கிலோ கந்தகச் சத்தை அடியுரமாக இட வேண்டும்.

இறவைப் பயிருக்கு 25 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து, 20 கிலோ கந்தகச் சத்தை அடியுரமாக இட வேண்டும்.

அவசியமான சத்துகள்

பயிர் வளர்ச்சிக்கு 16 சத்துகள் அவசியம். இவற்றில் சில சத்துகள் அதிகமாகத் தேவைப்படும். இவை பேரூட்டங்கள் எனப்படும். சில சத்துகள் மிகக் குறைவாகத் தேவைப்படும். இவை நுண் சத்துகள் எனப்படும்.

பேரூட்டங்கள்

தழைச் சத்தைத் தரும் நைட்ரஜன், மணிச் சத்தைத் தரும் பாஸ்பரஸ், சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்தைத் தரும் கால்சியம், கந்தகச் சத்தைத் தரும் சல்பர், மற்றும் மெக்னீசியம் முதலியன பயிருக்கு அதிகளவில் தேவை.

நுண் சத்துகள்

இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, மாலிப்படினம், தாமிரம், போரான் ஆகிய சத்துகள், பயிர்களுக்கு மிகக் குறைவாகத் தேவைப்படும். எனவே, இவை நுண் சத்துகள் எனப்படும். மேலும், சிலவகைப் பயிர்களுக்கு குளோரின், சோடியம், அலுமினியம், சிலிகான் ஆகிய சத்துகள் மிகமிகக் குறைவாகத் தேவைப்படும்.

சத்துக் குறைகளை அறிதல்

வளமான நிலத்தில் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தாராளமாகக் கிடைக்கும். ஒவ்வொரு சத்தும் பயிர்களில் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்கின்றன.

இந்தச் செயல்கள் சரியாக நடந்தால் தான் பயிரின் வளர்ச்சியும், மகசூலும் நன்றாக இருக்கும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் அல்லது கூடினாலும் பயிரின் செயல்களில் தடங்கல் ஏற்பட்டு, பயிரின் வளர்ச்சியும் விளைச்சலும் பாதிக்கப்படும்.

நிலத்தில் சத்துக்குறை ஏற்பட்டால், இலை நுனியில் அல்லது அடியில் மஞ்சள் நிறம் தோன்றும். இலைகளில் புள்ளிகள் தோன்றும். நரம்புகளின் நிறம் மாறும். இலைகள் சிறுத்து விடும். இலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். பயிர்களின் இயல்பான வளர்ச்சிப் பாதிக்கப்படும்.

ஒருங்கிணைந்த சத்து நிர்வாகம்

நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காக, புதிய உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம். நீர்வளம் மற்றும் விளைநிலப் பரப்பைக் கூட்டி, ஆண்டுக்கு 2-3 பருவங்களில் தொடர்ந்து பயிரிட்டு, அதிக மகசூல் பெறப்பட்டது.

இதனால், நிலத்திலிருந்து பெருமளவில் சத்துகளும் எடுக்கப்பட்டு விட்டன. அதிக மகசூலைப் பெற முயற்சி செய்த விவசாயிகள், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சரியாகக் கணக்கிட்டு நிலத்தில் இடாததால், சத்துக் குறைகள் ஏற்பட்டன.

மேலும், நவீன வேளாண்மையில் இரசாயன உரங்களுக்கு முன்னுரிமை அளித்ததால், இயற்கை உரங்களான பயிர்க் கழிவுகள், தொழுவுரம், பசுந்தழை உரம் ஆகியவற்றை இடவில்லை.

எனவே, நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட நுண் சத்துகள் குறைவு, பயிர்ச் சுழற்சியின்மை, மண்ணரிப்பு, நிலத்தைச் சீர்திருத்தம் செய்யும் போது மேல் மண்ணை அகற்றுதல் ஆகியவற்றால், சில சத்துகள் மிகுதல், சில சத்துகள் குறையும் நிலை ஏற்பட்டது. மேலும், காலநிலை மாற்றத்தால், பயிர்களில் சத்துக் குறைகள் ஏற்படுகின்றன.

சரியான அளவில் ஏதேனும் ஒரு சத்து கிடைக்காமல் போனாலும், பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். எனவே, ஒவ்வொரு பாதிப்பையும் தெரிந்து கொண்டால், மகசூல் குறைவுக்கான சரியான காரணத்தை அறிந்து, அதைச் சரி செய்து நல்ல மகசூலைப் பெற இயலும்.

இலைவழி நுண்ணூட்டம்

ஒரு லிட்டர் நீருக்கு 40 மி.கி. என்.ஏ.ஏ. மற்றும் 100 மி.கி. சாலிசலிக் அமிலம் வீதம் கலந்து பூக்கும் போதும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

நெல் தரிசிலுள்ள பயறு வகைகளில், ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டி.ஏ.பி. வீதம் கலந்து பூக்கும் போதும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களில், ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டி.ஏ.பி அல்லது 20 கிராம் யூரியா வீதம் கலந்து பூக்கும் போதும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்

பயறு ஒன்டர்: பயறு வகைகளுக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயறு ஒண்டரைத் தெளித்தால், பூக்கள் உதிர்வது குறையும். மகசூல் 20 சதம் கூடும். வறட்சியைத் தாங்கும் திறன் கூடும்.

ஏக்கருக்கு 2.25 கிலோ தேவைப்படும். இதை, 200 லிட்டர் நீரில், தேவையான ஒட்டும் திரவத்தையும் கலந்து, பயிர்கள் பூக்கும் போது தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

எக்டருக்கு 1.5 லிட்டர் புளூகுளோரலின் அல்லது 2 லிட்டர் பென்டி மெத்தலின் மருந்தை, 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் விசிறித் தெளிப்பாக, விதைத்த மூன்றாம் நாள் தெளிக்க வேண்டும்.

பிறகு, விதைத்த 30-35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும். களைக் கொல்லியைத் தெளிக்காத நிலையில், விதைத்த 15 மற்றும் 35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

பாசனம்

விதைத்ததும் ஒருமுறையும், விதைத்த மூன்றாம் நாளில் உயிர் நீரும் விட வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, 10-15 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும்.

நிலத்தில் நீர்த் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில், வறட்சியாக இருப்பின் 0.5 சத பொட்டாசியம் குளோரைடு கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

காய்கள் 80 சதம் முதிர்ந்ததும் செடிகளைத் தரை மட்டத்தில் அறுத்து, வெய்யிலில் காய வைத்து, கையால் அல்லது எந்திரம் மூலம் மணிகளைப் பிரித்து எடுக்கலாம்.


முனைவர் பெ.வீரமணி,  வேளாண்மை அறிவியல் நிலையம், விருதாச்சலம், கடலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks