My page - topic 1, topic 2, topic 3

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது.

அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாகத் தாக்கியது.

தாக்கும் பயிர்கள்

மக்காச் சோளத்தை மட்டுமன்றி, நெல், கரும்பு, சோளம், இனிப்பு மக்காச் சோளம், புல்வகைப் பயிர்கள், பருத்தி, சிறு தானியங்கள், நிலக்கடலை, கரும்பு, புகையிலை போன்ற 80 வகையான பயிர்களைத் தாக்கும்.

வாழ்க்கை

இப்புழு, 28 சென்டிகிரேட் வெப்ப நிலையில் 30 நாட்கள் வாழும். வெப்பம் குறைந்தால் 80-90 நாட்கள் வாழும். வாய்ப்பான சூழலில் படைப் புழுக்களின் தாக்குதல் ஆண்டு முழுவதும் தொடரும்.

கூட்டமாகக் கூடி ஓரிடத்தில் சேதத்தை உண்டாக்கி விட்டு, அடுத்த இடத்துக்குப் படை படையாகச் செல்வதால் இவை படைப் புழுக்கள் எனப்படுகின்றன. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில், முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என, நான்கு நிலைகள் உள்ளன.

முட்டைப் பருவம்

முட்டைகள், கூம்பைப் போல இருக்கும். அடிப்பகுதி தட்டையாக, மேற்பகுதி வளைந்து இருக்கும். பெண் அந்துப்பூச்சி இடும் முட்டைக் குவியல் ஒன்றில், 100-200 முட்டைகள் இருக்கும்.

ஒரு பெண் பூச்சி தன் வாழ்நாளில் 800-1500 முட்டைகளை இடும். இவற்றை வெண்ணிற அல்லது ஊதாநிறச் செதில்களால் மூடிப் பாதுகாக்கும். 2-3 நாட்களில் முட்டைகள் பொரிந்து, முதல் நிலைப் புழுக்கள் வெளியில் வரும்.

புழுப் பருவம்

புழுப்பருவம் ஆறு நிலைகளைக் கொண்டது. இளம் பருவம் கறுப்புத் தலையுடன் பச்சையாக இருக்கும். முதல் மூன்று நிலைகளில் புழுவின் மேற்பகுதி பழுப்பாகவும், ஓரங்களில் வெள்ளைக் கோடுகளும் இருக்கும். 4-6 நிலைகளில் தலை செம்பழுப்பாக இருக்கும்.

உடலின் ஓரத்திலும் மேற்புறத்திலும் வெள்ளைக் கோடுகள் இருக்கும். ஆறாம் நிலைப் புழுவின் தலையில் தலைகீழ் v வடிவ வெண்கோடு இருக்கும்.

புழுவின் கடைசி வயிற்றுப் பகுதியின் மேல் நான்கு கரும் புள்ளிகள் சதுரமாக இருக்கும். புழுப்பருவம் 14-21 நாட்கள் இருக்கும். வெய்யில் அதிகமாக இருந்தால், இலைகளின் அடியில் தங்கிப் பாதிப்பை உண்டாக்கும். மேலும், இப்புழுக்கள் ஒன்றையொன்று தாக்கி உண்ணும்.

கூட்டுப்புழு

படைப்புழு, மண்ணில் 2-8 செ.மீ. ஆழத்தில் கூட்டுப் புழுவாக மாறும். மண் கடினமாக இருந்தால் இலைச் சருகுகளைச் சேர்த்து அதற்குள் கூட்டுப் புழுவாக மாறும். இப்புழு செம்பழுப்பாக இருக்கும். கூட்டுப்புழுப் பருவம் 12-14 நாட்கள் இருக்கும்.

அந்துப்பூச்சி

ஆண் அந்துப் பூச்சியின் முன் இறக்கை, சாம்பல் நிறத்தில், நுனி மற்றும் நடுவில் முக்கோண வெண் புள்ளிகளுடன் இருக்கும். பெண் அந்துப் பூச்சியின் முன் இறக்கைகளில், முக்கோண வெண் புள்ளிகள் இருக்காது. இது மாலை நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும்.

முதல் 4-5 நாட்களுக்கு அதிக முட்டைகளை இடும். பின் மூன்று வாரம் வரை முட்டைகளை இடும். தாய் அந்துப்பூச்சி 12-14 நாட்கள் வாழும். காற்றை எதிர்த்துப் பறக்கும் இப்பூச்சி, தன் வாழ்நாளில் 480-1500 கி.மீ. பறந்து செல்லும்.

தாக்குதல் அறிகுறிகள்

மக்காச்சோள இளம் இலைகளின் அடியில் முட்டைக் குவியல்கள் இருக்கும். பெண் அந்துப் பூச்சிகள் நிறைய இருந்தால் பயிர்களிலும் முட்டைகளை இடும். இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலைகளின் அடிப்பகுதியைச் சுரண்டித் தின்னும். இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெள்ளையாக இருக்கும்.

இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி, காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குப் பரவும். 3-6 நிலைப் புழுக்கள், இளம் பயிரின் இலைகள், கதிர் உறைகள் மற்றும் கதிர்களைத் தாக்கும். இரவில் தான் பயிர்களை அதிகமாகச் சேதப்படுத்தும். இதனால் இலைகளில் வரிசையாகத் துளைகள் இருக்கும்.

பாதுகாப்பு

மக்காச்சோள விதைப்புக்கு முன் கோடையுழவு அவசியம். இதன் மூலம் படைப் புழுக்களின் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். விவசாயிகள் ஒரே நேரத்தில் மக்காச் சோளத்தை விதைக்க வேண்டும்.

மக்காச்சோள வயலைச் சுற்றிலும் 3-4 வரிசையில், கம்பு நேப்பியர் புல் அல்லது வெள்ளைச் சோளத்தைப் பொறிப்பயிராக நடலாம். இதில் தாக்குதல் தெரிந்ததும் 5 சத வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது 1,500 பிபிஎம் அசாடி ராக்டினைத் தெளிக்க வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பிவேரியா பேசியானா அல்லது 10 கிராம் தையோ மீதாக்சம் 30 எப்.எஸ். அல்லது 4 மில்லி சய்யன் டிரனிலிபுரோல் 19.8 சதம் + தையோ மீதாக்சம் 19.8 சதம் வீதம் எடுத்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இதனால், 32-40 நாட்கள் பயிரில் படைப் புழுக்கள் தாக்குவதைத் தடுக்கலாம்.

தட்டைப் பயறு, உளுந்து, துவரை, பாசிப்பயறு, சாமந்தி, சூரியகாந்தி போன்றவற்றை ஊடுபயிராக விதைக்கலாம். இவற்றின் மூலம் பொறி வண்டுகள், தரை வண்டுகள், நன்மை செய்யும் ஒட்டுண்ணிகளை வயலில் பெருக்கிப் படைப் புழுக்களை அழிக்கலாம்.

மக்காச் சோளத்தின் 30 நாட்கள் வரையில், ஏக்கருக்கு 10 பறவைத் தாங்கிகளை வைக்க வேண்டும். ஏக்கருக்கு 20 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மக்காச் சோளத்தை நட்டு 5 நாட்களுள் இவற்றை வைத்தால், தாய் அந்துப் பூச்சிகள், பயிர்களில் முட்டையிடும் முன், பொறியால் கவர்ந்து அழிக்கலாம்.

படைப்புழுவின் முட்டைக் குவியல் மற்றும் 1, 2 நிலை இளம் புழுக்களைக் கையால் சேகரித்து நசுக்கலாம் அல்லது ம.எண்ணெய்யில் இட்டு அழிக்கலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறியை வைத்து ஆண் மற்றும் பெண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

நடவு செய்து 10-15 நாளில் தாக்குதல் தெரிந்தால், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் அசாடி ராக்டின் 2சதம் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் மருந்தை, கைத்தெளிப்பான் மூலம் நுனிக் குருத்தில் தெளிக்கலாம். அல்லது நன்மை செய்யும் ஹெடிரோ ராப்பிடிஸ் இன்டிகா நூற்புழுவை, ஏக்கருக்கு 4 கிலோ வீதம் எடுத்து, தொழுவுரத்தில் கலந்து நுனிக் குருத்தில் இடலாம்.

தாக்குதல் 15-21 நாளில் தெரிந்தால், 10 லிட்டர் நீருக்கு 80 கிராம் மெட்டாரைசியம் அல்லது 20 கிராம் வீதம் தையோடிகார்ப் அல்லது 5 மில்லி வீதம் ஸ்பைனிட்டோரத்தை நுனிக் குருத்தில் தெளிக்கலாம்.

தாக்குதல் 21-42 நாளில் இருந்தால், பத்து லிட்டர் நீருக்கு 3 மில்லி புளு பென்டியமைடு அல்லது 4 மில்லி குளோரன் டிரனிலிப் புரோலைக் கலந்து நுனிக் குருத்தில் தெளிக்கலாம்.

இவற்றைத் தவிர 5, 6 நிலை புழுக்களை, விஷ உணவை வைத்தும் அழிக்கலாம். அதாவது, 10 கிலோ அரிசித் தவிட்டுடன் 2 கிலோ வெல்லம் சேர்த்து 2-3 லிட்டர் நீரில் நன்கு கலக்க வேண்டும்.

பின்பு, குருத்தில் போடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன், கலவையுடன் 100 கிராம் தயோடிகார்ப் மருந்தை நன்கு கலந்து குருத்தில் இட வேண்டும்.


முனைவர் சு.திவ்யா, ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks