My page - topic 1, topic 2, topic 3

எட்டு நாளில் சத்தான பசுந்தீவன உற்பத்தி!

க்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், பசுந்தீவன வளர்ப்பில் வந்துள்ள புதிய உத்தியான, மண்ணில்லாப் பசுந்தீவன உற்பத்தி முறை, கால்நடை வளர்ப்போருக்குப் பேருதவியாய் அமைந்து உள்ளது. இதற்கு, ஹைட்ரோபோனிக் பசுந்தீவன உற்பத்தி முறை என்று பெயர்.

இம்முறையில், 7-10 நாட்களில் பசுந்தீவனம் கிடைத்து விடும். சில வேலையாட்கள் மூலம், குறைந்த நீரில் ஆண்டு முழுவதும் தரமான, சுவையான, சத்துகள் நிறைந்த தீவனத்தை உற்பத்தி செய்யலாம். கல், மண், தூசி, பூச்சி மருந்து ஆகிய எதுவும் இருக்காது. 300 சதுர அடி பரப்பில் 800-1,000 கிலோ பசுந்தீவனம் கிடைக்கும்.

பயன்படுத்தும் விதைகள்

மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகள் பயன்படும். இவற்றில், விலை அதிகமுள்ள கோதுமை, பார்லியைத் தவிர்த்து விட்டு, நிதானமான விலையில் ஆண்டு முழுதும் கிடைக்கும் மக்காச் சோளத்தைப் பயன்படுத்தலாம். கம்பு, இராகி போன்ற சிறுதானியங்கள் போதியளவில் வளர்வதில்லை. ஆகவே, மக்காச்சோளமே சிறந்தது.

இதில், விதைக்காக விற்கப்படும் மக்காச் சோளத்தை வாங்க வேண்டாம். உணவுக்காக விற்கப்படும் குறைந்த விலை மக்காச்சோளமே போதும். நன்கு விளைந்த சுத்தமான மக்காச் சோளம் நன்றாக முளைத்து, அதிகத் தீவனத்தைக் கொடுக்கும்.

ஆப்பிரிக்கன் டால் என்னும் தீவன மக்காச்சோள வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆனால், எல்லா இடத்திலும் ஆண்டு முழுதும் கிடைப்பதில்லை. எனவே, இருப்பதில் சிறந்தது மக்காச் சோளம். நாட்டுச் சோளத்தைத் தவிர, மற்ற தானிய வகைகளையும் பயன்படுத்தலாம்.

உற்பத்தி முறை

20×15 அடி அளவுள்ள எளிமையான பசுமைக்குடில் போதும். நிழல்வலைக் குடிலின் வெப்பநிலை 24-27 டிகிரி செல்சியல், ஈரப்பதம் 80-90 சதம் இருக்க வேண்டும். இந்த நிலை மாறாத வகையில், குடிலுக்குள் நல்ல ஒளி கிடைக்க வேண்டும்.

இதற்கு ஒளி ஊடுருவும் கனமான நெகிழித் தாளால் சுற்றிலும் மூடிவிட வேண்டும். உள்ளே சென்று வர ஒரு கதவு இருந்தால் போதும். இதற்குச் செங்குத்தான விவசாயம் என்று பெயர்.

இதில் தட்டுகளை வைக்க ஓரடி இடைவெளி அடுக்குகளைக் கொண்ட அடுக்கி (ஸ்டாண்ட்) வேண்டும். இதன் உயரம் ஆறடிக்கு மேல் இருக்கக் கூடாது. இதன் நீளம், அறையின் அளவு மற்றும் அமைப்பைப் பொறுத்து இருக்கலாம்.

இதைத் தவிர, ஓரடி அகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குல உயரமுள்ள நெகிழித் தட்டுகள் தேவை. மேலும், நீரைத் தெளிக்கும் தெளிப்பான், விதைகளை ஊற வைக்க நெகிழி வாளி, விதைகளைக் கட்டி வைக்கக் கோணிப்பை, ஈரப்பதம் மற்றும் குளிரை அறிய உதவும் வெப்பமானியும் தேவை.

பசுந்தீவன அறை

பசுக்கள் குறைவாக இருந்தால் அந்தக் கொட்டிலிலேயே பசுந்தீவன அறையை அமைக்கலாம். பத்துப் பசுக்களுக்கு மேலிருந்தால், பசுமைக்குடிலை அமைத்துக் கொள்ளலாம். பயிர்கள் நன்கு வளர, சூரியவொளி அவசியம் என்பதால், அத்தகைய இடத்தில் இதை அமைக்க வேண்டும்.

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் பாதிக்கப்படாத நெகிழித் தாளால் சுற்றி மூட வேண்டும். அல்லது 90 சத பச்சை வலையையும் பயன்படுத்தலாம். ஒளி உட்புக வேண்டும். அதே சமயம், அறைக்குள் இருக்கும் குளிர்ச்சியும், காற்றின் ஈரப்பதமும் வெளியேறக் கூடாது.

வளர்ப்பு அறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். இதற்கு, தரையில் அரையடி உயரம் மணலைப் போட வேண்டும். தெளிக்கும் நீர் தேங்காமல் வழியும் வகையில், நெகிழித் தட்டுகளின் அடியில் 3.5 மி.மீ. அளவில் 12 துளைகளை இட வேண்டும்.

வளர்ப்பு முறை

ஒன்றரைச் சதுரடிப் பரப்புள்ள தட்டில், 300 கிராம் மக்காச் சோளத்தை விதைக்கலாம். சோளத்தின் திரட்சி மற்றும் அளவைப் பொறுத்து, இந்த அளவு, கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம். ஒரு நாளைக்கு எத்தனை தட்டுகள் தேவையோ, அதைப் போல, எட்டு மடங்கில் தட்டுகள் தேவைப்படும். எடுத்துக் காட்டாக ஒரு நாளைக்குப் பத்துத் தட்டுத் தீவனம் தேவையெனில் 80 தட்டுகள் தேவைப்படும்.

விதைக்கும் சோளத்தை, 24 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து விட்டுக் கோணிப் பையில் இட்டு 24 மணி நேரம் இருட்டில் வைக்க வேண்டும். இப்போது விதைகளில் முளைப்பு வந்திருக்கும். இவற்றை நெகிழித் தட்டுகளில் சீராகப் பரப்பி, கொஞ்ச நேரம் காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பிறகு தட்டுகளை வளர்ப்பறையில் உள்ள அடுக்கியில் வைத்து, தெளிப்பான் மூலம் புகையைப் போல, நீரைத் தெளிக்க வேண்டும். நீர் கூடினாலும் குறைந்தாலும் சிக்கலாகும் என்பதால், கவனமாக நீரைத் தெளிக்க வேண்டும். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

அறையின் வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ், காற்றின் ஈரப்பதம் 80-85 சதம் இருந்தால், விளைச்சல் நன்றாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் காற்றுக் குளிரூட்டியைப் (ஏர் கூலர்) பயன்படுத்தலாம். இதனால் பயிர்கள் நன்கு வளரும். மக்காச் சோளத்தை மண்ணில் விதைத்து நீரைத் தெளித்து வந்தால், வெள்ளி ஈட்டியைப் போல் முளைத்து வர 7-8 நாட்களாகும்.

ஆனால், மண்ணில்லாத் தீவன வளர்ப்பு முறையில், ஏழு நாட்களில் 15-20 செ.மீ. உயரம் வளர்ந்து விடும். வேர்கள் பின்னிப் பிணைந்து வெள்ளை மெத்தையைப் போலாகி விடும். ஒரே வாரத்தில், விதைக்கும் எடையைப் போல எட்டு மடங்கில் தீவனம் கிடைக்கும். ஆண்டு முழுவதும் சுவையான, சத்தான பசுந்தீவனம் கிடைக்கும்.

சத்துகளின் அளவு

இந்தத் தீவனத்தில், ஈரப்பதம் 80-85 சதம், புரதம் 13-14 சதம், நார்ச்சத்து 7-9 சதம், கொழுப்பு 3-4 சதம், நைட்ரஜன் அல்லாத சத்துகள் 70-75 சதம், கால்சியம் 0.3-0.4 சதம் இருக்கும். எனவே, கால்நடைகளை வளர்ப்போர், வறட்சியில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் இம்முறையில் பசுந்தீவனத்தை வளர்த்துக் கால்நடைகளுக்குத் தரலாம்.

பயன்கள்

ஒரு கிலோ பசுந்தீவன உற்பத்திக்கு 1-2 லிட்டர் நீர் போதும். இதையே நிலத்தில் பயிரிட்டால், 60-70 லிட்டர் நீர் தேவைப்படும். 7-8 நாட்களில் அறுவடை செய்யலாம். கடும் வறட்சியிலும் எளிதாகப் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். சுவையாக இருப்பதால் மாடுகள் விரும்பி உண்ணும். 10-15 சத அடர் தீவனத்தைக் குறைத்துக் கொடுக்கலாம்.

இதனால், 8-10 சதம் பால் உற்பத்தி அதிகமாகும். இதை 100 சதம் இயற்கையாக உற்பத்தி செய்யலாம். ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யம் வீதம் கலந்த கலவையைத் தெளித்தால், வளர்ச்சி அதிகமாக இருக்கும். 19:19:19 இரசாயன உரத்தையும் தெளிக்கலாம். பாலின் தரமும் உயரும்.


முனைவர் பெ.வீரமணி, வேளாண்மை அறிவியல் நிலையம், விருதாச்சலம், கடலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks