பசுந்தாள் உரப்பயிர்கள் என்பவை, உரத்துக்காக சாகுபடி செய்யப்படும் தாவரங்கள். இவை வேர் முடிச்சுகளைக் கொண்ட பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும். சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, சணப்பை, நரிப்பயறு, கொளுஞ்சி ஆகியன பசுந்தாள் உர வரிசையில் அடங்கும்.
நமது முன்னோர்கள் இவற்றைச் சிறப்பாகப் பயிரிட்டு வளர்த்து, மண்வளம் காத்து, அதிக மகசூலை எடுத்து வந்தனர். இரசாயன உரங்கள் புழக்கத்தில் வந்த பிறகு, பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்பாடு குறைந்து விட்டது.
இந்தப் பயிர்கள் தழைச்சத்தை அளிப்பதுடன், மண்ணின் கட்டமைப்பு வலுப்படவும் உதவுகின்றன. மட்குச் சத்தானது, மண்ணில் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்பட உதவுகிறது.
பசுந்தாள் உரங்களை இட்டால், நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். மண்ணரிப்பைத் தடுக்கும். எனவே, கோடை உழவுக்குப் பிறகு கிடைக்கும் மழையைப் பயன்படுத்திப் பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
கோடை உழவால் மண்ணில் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் கூடும். மண் கட்டமைப்பு மற்றும் நீர் நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோடையுழவு, பசுந்தாள் பயிர் விதைப்புக்கு உகந்த நிலத் தயாரிப்பாகவும் அமைகிறது.
பசுந்தாள் பயிர்கள் களைகளைக் கட்டுப்படுத்தும். மண்ணில் 30-35 கிலோ தழைச்சத்தை நிலை நிறுத்தும். தழைச்சத்துக் கிடைக்க, வேர் முடிச்சுகள் காரணமாக இருப்பதைப் போல, இவற்றின், தழை, தண்டு, பூ ஆகியன, 2-3 டன் அங்கக உயிர்ப் பொருள்களை மண்ணில் நிலை நிறுத்தும்.
இவற்றைப் போல, காட்டுவெளியில் வளர்ந்து கிடக்கும் செடி, கொடி, மரங்களின் தழைகளும் உரமாகப் பயன்பட்டு மண்வளம் பெருக்கும். எருக்கு, ஆவாரை, வேம்பு, புங்கன், இலுப்பை, வாதநாராயணன், பூவரசு போன்ற தழைகள் இவ்வகையில் அடங்கும்.
தக்கைப்பூண்டை ஒரு எக்டரில் விதைக்க, 50 கிலோ விதைகள் தேவை. 25-26 டன் தழை கிடைக்கும்.
மணிலா அகத்தியை ஒரு எக்டரில் விதைக்க, 37-40 கிலோ விதைகள் தேவை. 20-22 டன் தழை கிடைக்கும்.
சணப்பை ஒரு எக்டரில் விதைக்க, 30-35 கிலோ விதைகள் தேவை. 15-16 டன் தழை கிடைக்கும்.
சித்தகத்தியை ஒரு எக்டரில் விதைக்க, 30-35 கிலோ விதைகள் தேவை. 14-16 டன் தழை கிடைக்கும்.
கொளுஞ்சியை ஒரு எக்டரில் விதைக்க, 15-18 கிலோ விதைகள் தேவை. 6-7 டன் தழை கிடைக்கும்.
நரிப்பயறை ஒரு எக்டரில் விதைக்க, 12-14 கிலோ விதைகள் தேவை. 2-3 டன் தழை கிடைக்கும்.
எனவே, விவசாயிகள் கோடை உழவுக்குப் பிறகு கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி, பசுந்தாள் பயிர்களைப் பயிரிட்டால், மண்வளத்தையும், நல்ல விளைச்சலையும் பெறலாம்.
முனைவர் மு.சுகந்தி, முனைவர் கரு.பசுபதி, முனைவர் த.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!