செய்தி வெளியான இதழ்: 2018 மே.
விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இயற்கை அளித்த கொடை மண்வளம். உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை மண். நல்ல விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் முக்கியம்.
பயிர்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துகளும் மண்ணிலிருந்தே கிடைப்பதால், அந்தச் சத்துகளைப் பயிர்கள் கிரகிக்கும் வகையில் மண் வளத்தைப் பராமரிக்க வேண்டும். இத்தகைய மண் வளத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை இயற்கை உரங்கள்.
தமிழ்நாட்டு மண் வகைகளில் கரிமப் பொருள்கள், அதாவது, அங்ககப் பொருள்களின் அளவும், தழைச்சத்தும் குறைவாகவே உள்ளன. ஆனால், மண்வள மேம்பாட்டில் இவையிரண்டும் இரண்டு கண்களாகும்.
மண்ணில் கரிமச் சத்தின் அளவு குறைதல், மண்வாழ் உயிரினங்கள் அழிதல் போன்றவற்றால் உயிரியல் பண்புகள் கெடுகின்றன. இந்தப் பண்புகளை மேம்படுத்த, ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் அல்லது ஆண்டுதோறும் இயற்கை உரங்களை இடவேண்டும்.
இயற்கை உரங்களில் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க கூடியவை, பசுந்தாள் உரப் பயிர்கள், பசுந்தழை உரப்பயிர்கள். பசுந்தாள் உரப்பயிர் என்பது, ஒரு பயிரைப் பயிரிட்டு, அதை அதே நிலத்தில் உழுது மடக்கி விடுவது.
வேர் முடிச்சை உருவாக்கி, அதில் காற்றிலுள்ள தழைச்சத்தைச் சேமித்து வைக்கும் பயிர்கள், பசுந்தாள் உரப் பயிர்கள். இவ்வகையில், தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, மணிலா அகத்தி, சித்தகத்தி, நரிப்பயறு போன்றவை அடங்கும்.
பசுந்தழை உரப்பயிர் என்பது, பசுந்தழைகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து நிலத்தில் இடுவது. இவ்வகையில், புங்கன், எருக்கு, வேம்பு, கிளைரிசிடியா, கொடிப்பூவரசு போன்றவை அடங்கும்.
சணப்பு
விரைவில் வளர்ந்து உரத்தையும் நாரையும் தரக்கூடியது சணப்பு. தோட்டக்கால் நிலங்களுக்கு ஏற்றது. அதிகப் பாசனம் அல்லது தொடர்ந்து நீர்த் தேங்கும் பகுதிக்கு ஏற்றதல்ல. நிழலிலும் வளரும் என்பதால், தென்னையில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து உழுது மடக்கி விடலாம்.
இப்பயிர் சாகுபடியில் இருக்கும் நிலத்தில் நூற்புழுக்கள் குறைவாகவே இருக்கும். பூக்கும் போது இதை உழுது மடக்கினால், நிறைய அங்கக அமிலங்கள் வெளியாகும். இந்த அமிலங்கள் மண்ணின் களர், உவர்த் தன்மையைக் குறைக்கும். மேலும், கரையாத மணிச்சத்தைக் கரைத்து, பயிர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றும்.
இதன் மூலம் மண்ணில் நமக்குத் தேவையான மாற்றத்தைப் பெறலாம். மண்ணில் அங்ககச் சத்து சேர்வதால், நிலத்தில் இடப்படும் இரசாயன உரமும் நல்ல பயனைத் தரும். இந்தச் சணப்பை அனைத்துப் பருவத்திலும் பயிரிடலாம். களிமண்ணைத் தவிர மற்ற அனைத்து மண்ணிலும் சிறப்பாக விளையும்.
ஒரு எக்டர் சாகுபடிக்கு, 25-35 கிலோ விதை தேவை. இந்த விதைகளை, ஒரு கிலோ ரைசோபியம், ஆறிய 1.5 லிட்டர் அரிசி அல்லது மைதா கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலக்கி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.
இதனால், இப்பயிர் காற்றிலுள்ள நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி பயிருக்குக் கொடுக்கும். இந்தச் செடிகள் பசுமையாக வளர்ந்து மண் வளத்தைக் கூட்டும்.
நன்கு உழுத வயலில் விதைகளைத் தூவி மேலோட்டமாக டிராக்டரால் உழுது நீரைப் பாய்ச்சினால், விதைகள் சீராக முளைக்கும். விதைத்ததும் முதல் நீரும், மூன்றாம் நாள் இரண்டாம் நீரும், அடுத்து, 10-15 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்தால் போதும். விதைத்ததில் இருந்து 45-60 நாட்களில், அதாவது, பூக்கும் போது உழுது மடக்கிவிட வேண்டும். எக்டருக்கு 13-15 டன் பசுந்தாள் கிடைக்கும்.
தக்கைப்பூண்டு
தக்கைப்பூண்டு களர் உவர் நிலத்துக்கு ஏற்றது. இது, மிக வேகமாக வளர்ந்து குறுகிய நாட்களில் ஏக்கருக்குப் பத்து டன் பசுந்தாளைத் தரும். நீர்த் தேங்கும் பகுதியிலும், வறட்சிப் பகுதியிலும் ஓரளவு வளரும். இதில், 3.5 சதம் தழைச்சத்து, 0.6 சதம் மணிச்சத்து, 1.2 சதம் சாம்பல் சத்து உள்ளன.
இது மட்கும் போது வெளியாகும் அங்கக அமிலங்கள் களர், உவர்த் தன்மையைக் குறைக்கும். மேலும், கரையாத மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கொடுக்கும். இத்தகைய தக்கைப்பூண்டை அனைத்துப் பருவத்திலும் அனைத்து மண்ணிலும் பயிரிடலாம்.
எக்டருக்கு 50 கிலோ விதை தேவை. இந்த விதைகளை, ஒரு கிலோ ரைசோபியம், ஆறிய 1.5 லிட்டர் அரிசி அல்லது மைதா கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலக்கி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.
நன்கு உழுத வயலில் விதைகளை தூவி மேலோட்டமாக டிராக்டரால் உழுது பாசனம் செய்தால், விதைகள் சீராக முளைக்கும். விதைத்ததும் முதல் நீரும், மூன்றாம் நாள் இரண்டாம் நீரும், அடுத்து, 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதும்.
விதைத்ததில் இருந்து 45-60 நாட்களில், அதாவது, பூக்கும் போது உழுது மடக்கி விட வேண்டும். எக்டருக்கு 25 டன் பசுந்தாள் கிடைக்கும்.
கொளுஞ்சி
இதை, ஆடு, மாடுகள் மேயாது. மெதுவாக வளரும். இதை, 2-4 முறை தொடர்ந்து பயிரிட்டால் இதன் விதைகள் நிலத்தில் விழுந்து, அடுத்தடுத்துத் தானாகவே முளைக்கத் தொடங்கி விடும். கடும் வறட்சியைத் தாங்கும் என்பதால், கோடைத் தரிசில் பயிரிடலாம்.
இலகுவான மண்ணுக்கு ஏற்ற கொளுஞ்சியை, இடைப்பயிராக தென்னந் தோப்புகளில் பயிரிடலாம். இதை, அனைத்துப் பருவத்திலும் எல்லா மண்ணிலும் பயிரிடலாம். இருப்பினும், மணல் கலந்த மண் கொளுஞ்சிக்கு மிகவும் ஏற்றது.
எக்டருக்கு 15-20 கிலோ விதை தேவை. இந்த விதைகளை, 1.5-2 லிட்டர் அடர் கந்தக அமிலத்தில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு 10-15 முறை நீரில் நன்கு கழுவி நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
கொளுஞ்சியைப் பசுந்தாளுக்காக வளர்க்க, கைகளால் தூவினாலே போதும். விதைத்ததும் முதல் நீரும், மூன்றாம் நாள் இரண்டாம் நீரும், அடுத்து, 30 நாளுக்கு ஒரு முறையும் பாசனம் செய்தால் போதும். விதைத்த அறுபது நாளில் இதை மடக்கி உழுதுவிட வேண்டும். எக்டருக்கு 6-7 டன் பசுந்தாள் கிடைக்கும்.
கொளுஞ்சியில் எம்.டி.யூ.1 என்னும் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. இது, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தனிப்பாறையில் தேர்வு செய்யப்பட்டது.
விதைகள் மஞ்சள் நிறத்தில் திரட்சியாக இருக்கும். இதன் வளர்ச்சிக் காலம் பசுந்தாள் உரப்பயிருக்கு 65-70 நாட்கள். விதைக்கான வளர்ப்புக்கு 120-150 நாட்கள். 9 டன் பசுந்தாள் கிடைக்கும். எக்டருக்கு 400 கிலோ விதைகள் ஆகும்.
மணிலா அகத்தி
இது, நீர்வாழ் வெப்ப மண்டலப் பயறுவகைப் பசுந்தாள் பயிர். இதில் தண்டு மற்றும் வேர் முடிச்சுகள் இருக்கும். பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. இது, வெள்ளம் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் நன்கு வளரும்.
விதை மூலம், நாற்றுகள், வேர்த் தண்டுகள் மூலம் பயிரிடலாம். அனைத்துப் பருவத்துக்கும் ஏற்றதாக இருந்தாலும், பிப்ரவரி-மே காலத்தில் விதைத்தால் அதிக அங்கக உயிர்ப் பொருள் கிடைக்கும்.
கரிசல் மற்றும் செம்மண்ணில் செழிப்பாக வளரும். உவர் களர் மண்ணுக்கு ஏற்றதல்ல. எக்டருக்கு 40 கிலோ விதை தேவை. இந்த விதைகளை, 4 லிட்டர் அடர் கந்தக அமிலத்தில் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு, 10-15 முறை நீரில் நன்கு கழுவ வேண்டும். பின்பு, ஒரு கிலோ ரைசோபியத்தில் விதை நேர்த்தி செய்து பரவலாகத் தூவி நீரைப் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர் நீரும், அடுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். விதைத்து 45-50 நாட்களில் உழுது மடக்கி விட வேண்டும். எக்டர் ஒன்றுக்கு 20 டன் பசுந்தாள் கிடைக்கும்.
சித்தகத்தி
அனைத்துப் பருவத்துக்கும் ஏற்றது. ஆனாலும், மார்ச்-ஏப்ரல் விதைப்பு, விதை உற்பத்திக்குச் சிறந்தது. அனைத்து மண்ணிலும் நன்றாக வளரும். எக்டருக்கு 30-40 கிலோ விதை தேவை. இந்த விதைகளை ஒரு கிலோ ரைசோபியம், ஆறிய 1.5 லிட்டர் அரிசிக்கஞ்சி அல்லது மைதா கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.
பசுந்தாள் பயிராகப் பயிரிடும் போது கைகளால் விதைப்பதே போதும். விதைத்ததும் முதல் நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும், அடுத்து, 25-30 நாளுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும்.
விதைத்து 45-60 நாட்களில், அதாவது, பூக்கும் போது உழுது மடக்கி விட வேண்டும். எக்டருக்கு 15-18 டன் பசுந்தாள் கிடைக்கும்.
நரிப்பயறு
கால்நடைத் தீவனமாக, உரமாகப் பயன்படுகிறது. கொடி போல் படர்ந்து அடர்த்தியாக வளரும். நிலத்தில் உழுது விடுமுன், 2-3 முறை அறுவடை செய்யலாம். அனைத்துப் பருவத்துக்கும் ஏற்றதாக இருந்தாலும், மார்ச்-ஏப்ரல் விதைப்பு விதை உற்பத்திக்குச் சிறந்தது.
நெல் தரிசிலும் களி மண்ணிலும் நன்கு வளரும். எக்டருக்கு 10-15 கிலோ விதை தேவை. இந்த விதைகளை ஒரு கிலோ ரைசோபியம், ஆறிய 1.5 லிட்டர் அரிசிக்கஞ்சி அல்லது மைதா கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.
கை விதைப்பே போதும். விதைத்ததும் முதல் நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும், அடுத்து, 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்தால் போதும். விதைத்து 45-60 நாட்களில், அதாவது, பூக்கும் போது உழுது மடக்கி விட வேண்டும். எக்டருக்கு 6-8 டன் பசுந்தாள் கிடைக்கும்.
பசுந்தாள் பயிர்களின் நன்மைகள்
நிலத்தில் மடக்கி விடப்படும் பசுந்தாள் பயிர்களை, கண்களுக்குப் புலப்படாத பல கோடி நுண்ணுயிரிகள் தாக்கும். இப்படிச் சிதைவுறும் பயிர் வகைகளில் உள்ள முக்கிய மற்றும் நுண் சத்துகள் வெளியாகி, அடுத்துப் பயிரிடும் பயிர்கள் செழித்து வளர உதவும்.
நுண்ணுயிர்கள் பெருகும் போது, அவற்றிலிருந்து பலவித அங்கக அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நொதி மற்றும் சர்க்கரைப் பொருள்கள் வெளிப்படும். இவை, கரையாத நிலையில் இருக்கும் சத்துகளைக் கரைத்துப் பயிர்களுக்குக் கொடுத்து அவற்றின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
காற்று, நீர் மூலம் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கும். நிலத்தின் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படும். நிலத்தின் அமைப்புச் சீராகும். களைகள் கட்டுக்குள் இருக்கும். பொதுவாக, நீண்ட ஆணிவேரைக் கொண்ட பசுந்தாள் பயிர்கள், நிலத்தில் ஆழமாக ஊடுருவிச் சத்துகளைக் கிரகிப்பதுடன், இறுக்கமான பகுதிகளை நெகிழச் செய்யும்.
இதனால், நிலத்தில் நீர் ஊடுருவும் தன்மை மிகுவதால், மழைநீரை நிறையச் சேமிக்க முடியும். கோடையில் இந்தப் பயிர்கள் நிலப் போர்வையாக அமைந்து, நிலத்திலுள்ள நீர் ஆவியாவதைத் தடுக்கும். இதன் விளைவாக, மண்ணின் ஆழத்தில் கேடு செய்யும் நிலையில் உள்ள உப்பினங்கள் மேலே வராமல் தவிர்க்கப்படும்.
மண்ணில் கரிமச்சத்து மிகும். இதனால், இரசாயன உரங்களைப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் திறன் கூடும். பொதுவாக, நிலத்தில் இடப்படும் இரசாயன உரங்கள், ஆவியாதல், களியோடு சேர்ந்து நிலை கொள்ளல், பாசன நீருடன் கரைந்து வெளியேறுதல் போன்ற, பலவித இழப்புகளுக்கு உள்ளாகும்.
ஆனால், கரிமப் பொருள்கள் நிறைந்துள்ள நிலத்தில், இத்தகைய இழப்புகள் குறைவதுடன், பயிர்களுக்குத் தேவையான சத்துகள் சீராகக் கிடைக்கும்.
பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை 70 சதம் வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கும். இதனால் நிலம் வளமடையும். மேலும், இவற்றை நிலத்தில் மடக்கி உழும் போது ஏக்கருக்கு 25-45 கிலோ தழைச்சத்து நிலத்துக்குக் கிடைக்கும்.
தக்கைப்பூண்டு இலைகளில் உள்ள திரவம் அமிலத் தன்மை மிக்கது. இதனால், களர் நிலம் சீராகும். சோடிய அயனிகள் மற்றும் சோடியம் சார்ந்த உப்புகள் நிறைந்த நிலம் களர் நிலமாகும். இந்த நிலத்தில் மண்ணின் கார அமிலத் தன்மை 8.5-க்கு அதிகமாகவும், பரிமாற்றத்துக்கு உரிய சோடிய அயனியின் அளவு 15 சதத்துக்கு மேலும் இருக்கும்.
களர் மண்ணில் சோடிய அயனிகள் இருப்பதால், நிலத்தின் மேற்பரப்பில் மண்ணின் கட்டமைப்புகள் சீராக இருப்பதில்லை. அதனால், மண்ணிலுள்ள காற்றோட்டம், நீர்ப்பிடிப்புத் திறன் ஆகியன பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப இருப்பதில்லை.
மேலும், காயும் மேல்மண் கடினமாக மாறும். இதனால், விதைக்குள் இருந்து வெளிவரும் இளஞ் செடிகள் முளைத்து மேலே வர முடிவதில்லை. மேலும், இந்த நிலங்களின் கீழ் மண்ணும் இறுகிக் கெட்டியாக இருப்பதால், வேர்கள் ஊடுருவிச் செல்வதும் கடினம். எனவே, இவ்வகை நிலங்களில் பயிர்களின் வளர்ச்சிக் குன்றி, மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படும்.
பசுந்தாள் பயிர்களில் நிறைந்துள்ள பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய சத்துகள், களர் நிலம் மேம்பட மிகவும் ஏற்றது. இவ்வகையில், தக்கைப்பூண்டு களர் மற்றும் ஈரம் நிறைந்த நிலங்களிலும் நன்றாக வளரும்.
இதன் இலைகளில் உள்ள அமிலச்சாறும், புரதச்சத்தும் களரைத் தாங்கி வளரும் காரணிகளாகும். இதிலுள்ள கால்சிய அயனிகள், களர் மண்ணிலுள்ள சோடிய அயனிகளை இடமாற்றம் செய்து வெளியேற்ற உதவும்.
பசுந்தாள் உரங்களை களர் நிலத்தில் இடுவதால் மண்ணின் பௌதிகத் தன்மை மேம்படும். மண்ணின் கட்டமைப்புச் சீராகும். நல்ல மண்ணில் நீர்ப் பிடிப்புக் கூடும். இறுக்கமான மண்ணில் நீர் வடிதலுக்கு ஏற்ற சூழ்நிலை உண்டாகும். இந்த மாற்றங்கள், களர் நிலத்திலுள்ள சோடிய அயனிகள் வெளியேறிச் செல்லச் சாதகமாக இருக்கும்.
எனவே, இத்தனை பயன்களைத் தரும் பசுந்தாள் பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுவதால், மண்ணில் கரிமப் பொருள்களின் அளவு கூடுவதுடன், பயிருக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது.
மண்வளத்தைப் பெருக்க, உழவர் பெருமக்கள் கையாளும் பயிர்ச் சுழற்சியில், தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி, சணப்பு முதலிய பசுந்தாள் உரப் பயிர்களைச் சேர்த்துக் கொண்டால், உரிய பயன்களைப் பெறலாம். மண்வளம் காப்போம், உயர் விளைச்சல் பெறுவோம்.
முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் இல.சித்ரா, முனைவர் வ.பாஸ்கரன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி, திருச்சி – 639 115.
சந்தேகமா? கேளுங்கள்!