சாகுபடி நிலத்துக்குப் பசுந்தாள் உரம் மிகவும் அவசியம். சணப்பை, சீமை அகத்தி, சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா போன்ற பசுந்தாள் உரங்கள், நெல் வயலில் இடுவதற்கு ஏற்ற அருமையான உரங்கள்.
காலங் காலமாகப் பயன்பட்டு வந்த இந்த உரப்பயிர் சாகுபடி வெகுவாகக் குறைந்து விட்டது. இன்று செயற்கை உரங்களின் கடும் விலை உயர்வால், மீண்டும் பசுந்தாள் உரப் பயிர்களின் அருமையை உணரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பசுந்தாள் பயிர்களின் நன்மைகள்
விரைவாக மட்கும். பயிர்களுக்கு வேண்டிய தழைச்சத்தைத் தருவதில் முதலில் நிற்பவை. தழைச்சத்தை மட்டுமன்றி, மணிச் சத்தையும், சாம்பல் சத்தையும் சேர்த்து அளிக்கும்.
மேலும், போரான் மாங்கனீசு, மயில் துத்தம், துத்தநாகம், இரும்பு, மாலிப்டினம், சுண்ணாம்பு, சிலிக்கான் ஆகிய நுண் சத்துகளையும் கொடுக்கும். மண்ணில் பிடித்து வைக்கப்பட்டு, பயன்படா நிலையில் இருக்கும், மணிச்சத்தைப் பயிருக்குக் கிடைக்கச் செய்யும்.
மண்ணிலுள்ள சத்துகளில் இடப்பெயர்ச்சி முறைகளை ஊக்குவித்து, பயிர்களுக்கு அதிகளவில் சத்துகள் கிடைக்க வழி செய்யும். மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்தி, பயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
வேர் முடிச்சுள்ள பசுந்தாள் உரப்பயிர்கள் அனைத்தும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணுக்குக் கொடுக்கும். பசுந்தாள் உரமிடாத வயல்களை விட, பசுந்தாள் உரமிட்ட வயல்களில் அதிக விளைச்சல் கிடைக்கும்.
மண்ணில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து மண்வளத்தைப் பெருக்கும். நிலத்தின் தன்மையை மேம்படுத்தி, சுழற்சி முறையில் சத்துகள் தொடர்ந்து கிடைக்கச் செய்யும்.
மண்ணின் ஈரப்பிடிப்பை அதிகமாக்கும். செயற்கை உரங்களை இடுவதால் ஏற்படும் பெரும்பாலான சிக்கல்களைத் திருத்தியமைக்கும். களர் உவர் நிலங்களைச் சீர்திருத்தும்.
பயிர்ச் சுழற்சி முறையில், பயிர்களைத் தாக்கும் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த உதவும். மண்ணரிப்பைத் தடுக்கும். அநேகப் பசுந்தாள் பயிர்கள், உணவாக, தீவனமாக, எரிபொருளாகப் பயன்படுகின்றன. குறைந்த செலவில் பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
பசுந்தாள் உரத்துடன், எக்டருக்கு 40 கிலோ செயற்கைத் தழைச்சத்தைச் சேர்த்து இட்ட போது கிடைத்த மகசூல், 120 கிலோ செயற்கைத் தழைச்சத்தை மட்டும் இட்ட போது கிடைத்த மகசூலுக்கு இணையாக இருந்தது.
30 கிலோ செயற்கைத் தழைச்சத்தை இட்ட போது கிடைத்த விளைச்சல், 20 கிலோ தழைச்சத்தை, பசுந்தாள் உரமாக இட்டதற்கு இணையாக இருந்தது.
ஆகவே, ஏதாவதொரு பசுந்தாள் உரப்பயிரை நெல் சாகுபடி வயலில் வளர்த்து மடக்கி உழ வேண்டும். இப்போது தொழுவுரம் அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்பு அரிதாக இருப்பதால், பசுந்தாள் உரப்பயிரை இடுவது அவசியம்.
தக்கைப்பூண்டில் உள்ள பாக்டீரிய வேர் முடிச்சு, காற்றிலுள்ள தழைச்சத்தை அதிகளவில் கிரகித்து நிலத்தில் சேர்க்கிறது. விதைத்த 45 நாளில் பூக்கும் இப்பயிரை மடக்கி உழுதால், எக்டருக்கு 20.4-24.9 டன் பசுந்தாளும், 146-219 கிலோ தழைச்சத்தும் கிடைக்கும். ஒருமுறை நெல் வயலில் இதை மிதித்து விட்டால், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கும் இது பயன்படும்.
இதனால், எக்டருக்கு 15 டன் தழையுரமும், 13 கிலோ தழைச்சத்தும் கிடைக்கும். எனவே, இரண்டாவது நெற்பயிர் நன்கு வளர்ந்து 9 சதம் வரை அதிக மகசூலைத் தருவதுடன், மண்வளத்தையும் காக்கும்.
நெல்லுக்கு முன்னும், இருபருவ நெற்பயிருக்கு இடைப்பட்ட காலத்திலும் தக்கைப் பூண்டைப் பயிரிட்டு மிதித்து விட்டால், இரசாயன உரத்துக்கு இணையான 50 கிலோ தழைச்சத்தைப் பெறலாம்.
முனைவர் அ.அனுராதா, முனைவர் மு.இராமசுப்ரமணியன், துரை நக்கீரன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.
சந்தேகமா? கேளுங்கள்!