My page - topic 1, topic 2, topic 3

மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

ண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின் அளவைக் கூட்ட வேண்டும். இந்தக் கரிமத்தையும் தழைச் சத்தையும் மண்ணில் சேர்ப்பதற்கு, பசுந்தாள் உரமிடுதல் அவசியம்.

பசுந்தாள் உரங்களை, பயறுவகைச் செடிகள், பயறுவகை மரங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். தக்கைப்பூண்டு, சணப்பை, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை பயறுவகைச் செடிகளாகும்.

அகத்தி, சீமையகத்தி, சூபாபுல் போன்றவை பயறுவகை மரங்களாகும். இவற்றைத் தவிர, தாமாக வளரும், கொளுஞ்சி, ஆவாரை, எருக்கு போன்றவையும் பசுந்தாள் உரமாகப் பயன்படுகின்றன. வேம்பு, பூவரசு மரங்களின் தழைகளும் உரமாக உதவுகின்றன. இவை, பசுந்தழை உரம் எனப்படும்.

பசுந்தாள் உரங்களும் சத்துகளும்

தக்கைப்பூண்டு: தழைச்சத்து 3.5 சதம், மணிச்சத்து 0.6 சதம், சாம்பல் சத்து 1.2 சதம்.

சணப்பை: தழைச்சத்து 2.3 சதம், மணிச்சத்து 0.5 சதம், சாம்பல் சத்து 1.8 சதம்.

சீமையகத்தி: தழைச்சத்த 2.2 சதம், மணிச்சத்து 0.5 சதம், சாம்பல் சத்து 2.2 சதம்.

கொளுஞ்சி: தழைச்சத்து 1.8 சதம், மணிச்சத்து 0.2 சதம், சாம்பல் சத்து 0.6 சதம்.

எருக்கு: தழைச்சத்து 2.6 சதம், மணிச்சத்து 0.54 சதம், சாம்பல் சத்து 0.31 சதம்.

பயன்பாடுகள்

பசுந்தழை உரங்களை ஏக்கருக்கு 2.5 டன் வீதம் இட்டு, மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் உரங்களாக இருப்பின், ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் வீதம் விதைத்து வயலில் மடக்கி உழ வேண்டும்.

அப்போது, மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பசுந்தாள் உரங்களைச் சிதைத்து மட்க வைத்து உரமாக மாற்றி விடும். பிறகு, அதைப் பயிருக்குக் கிடைக்கும் வகையில் சிதைக்கும் போது, பேரூட்டங்கள் மற்றும் நுண்ணுரங்கள் வெளியாகும்.

இத்துடன், அங்கக அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நொதிகள் மற்றும் சர்க்கரைப் பொருள்களும் வெளிப்படும். இந்த அமிலங்கள், மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துகளைக் கரைத்து, பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றும். அதிலிருந்து கிடைக்கும் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டும்.

மேலும், பசுந்தாள் உரப்பயிர்களின் ஆணிவேர்கள் மண்ணில் ஆழமாகச் சென்று, சத்துகளைத் தமது பகுதிக்குக் கொண்டு வருவதுடன், இறுக்கமான மண்ணை இளகச் செய்யும். இதனால், மண்ணின் நீர் ஊடுருவும் தன்மையும், நீரைத் தேக்கி வைக்கும் திறனும் கூடும்.

தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் இலைகளில் இருக்கும் திரவம் அமிலத் தன்மை வாய்ந்தது. இதை உரமாக இடும் போது, களர் உவர் நிலங்கள் சீராவதுடன், அந்நிலத்தின் உப்புகளால் விளையும் பாதிப்புகள் கட்டுக்குள் வரும்.

மேலும், நிலத்திலிடும் இரசாயன உரங்களின் பயன்பாட்டுத் திறனைக் கூட்டுவதில், முக்கியப் பங்கு வகிக்கும் அங்ககப் பொருள்கள், மண்ணில் ஏற்படும் இழப்புகளையும் குறைக்கும். எனவே, பசுந்தாள் பயிர்களைப் பயிரிட்டால், மண்வளத்தைக் கூட்டி அதிக மகசூலைப் பெறலாம்.


முனைவர் வெ.தனுஷ்கோடி, முனைவர் நூர்ஜஹான் அ.கா.அ.ஹனீப், முனைவர் நா.தமிழ்ச்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி – 639 115.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks