செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர்.
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியில் தான் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலமான செப்படம்பர் அக்டோபரில் முன்பருவ விதைப்பாகச் செய்யப்படுகிறது.
ஏக்கருக்கு 30 கிலோ விதையைக் கை விதைப்பாக விதைத்து, கொக்கிக் கலப்பையால் உழுகிறார்கள். இம்முறையில் பெரும்பாலான விதைகள், அதிக ஆழத்திலும் மண்ணில் மேலாகவும் விழுவதால், முளைப்புத் திறன் அதிகளவில் பாதிக்கிறது.
எனவே, சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடிவதில்லை. மழை பெய்ததும் முளைத்த பயிரைக் களைத்து ஊடு நடவு மூலம் ஓரளவு பயிர் எண்ணிக்கையைச் சரி செய்கிறார்கள்.
இதற்கு அதிகளவில் செலவாகிறது. விவசாயிகள் நவீன உத்திகளைக் கையாள்வது இல்லை என்பதால் மகசூலும் குறைகிறது. இந்நிலை மாற, விவசாயிகள் புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.
நிலத் தயாரிப்பு
கோடை மற்றும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கிடைக்கும் மழை மூலம் நிலத்தை உழுது, டிராக்டர் மூலம் விதைப்புக் கருவியால் விதைக்க ஏற்ற வகையில், பண்படுத்தி வைக்க வேண்டும்.
விதைப்புக் கருவி மூலம் விதைத்தல்
டிராக்டரில் இயங்கும் விதைப்புக் கருவியைப் பயன்படுத்தினால், அனைத்து விதைகளும் 3-5 செ.மீ. ஆழத்தில் விழும். போதுமான மழை பெய்ததும் இந்த விதைகள் சீராக முளைக்கும். பயிர்கள் வரிசையாக இருப்பதால், பின்செய் நேர்த்திகளை எளிதாகச் செய்யலாம்.
விதைப்புக் கருவி மூலம் விதைத்தால், ஏக்கருக்கு 20 கிலோ விதை போதும். மேலும், பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும். மேலும், பயிர்களைக் கலைத்து நடுவதற்கான வேலையாட்கள் தேவையும் குறையும்.
களை நிர்வாகம்
விதைத்த வயலில் மழை பெய்த 5 ஆம் நாளில், மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது, பென்டி மெத்தலின் களைக் கொல்லியை, ஏக்கருக்கு 1 லிட்டர் வீதம் இட வேண்டும். தேவைக்கு ஏற்ப, பயிர் முளைத்த மூன்றாம் வாரத்திலும், அடுத்து 50-60 நாட்களிலும் களையெடுக்க வேண்டும்.
உர நிர்வாகம்
ஏக்கருக்கு 10 கிலோ மணிச்சத்தை ஊட்டமேற்றிய 300 கிலோ தொழுவுரமாக இட வேண்டும். இத்துடன் துத்தநாக சல்பேட்டை அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ வீதம் இட வேண்டும்.
தழை மற்றும் சாம்பல் சத்தை, மூன்று சம அளவாகப் பிரித்து, ஒருமுறைக்கு ஏக்கருக்கு 10 கிலோ தழை மற்றும் 5 கிலோ சாம்பல் சத்து வீதம், பயிர் முளைத்து 20-25, 40-45, 60-65 நாட்களில், மண்ணில் போதிய ஈரப்பதம் உள்ள போது இட வேண்டும்.
நீர் நிர்வாகம்
மழை பெய்து கண்மாயில் நீர் பெருகிய பின், பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் 2.5 செ.மீ. அளவிலும், பூக்கும் பொதி பருவத்தில் 5 செ.மீ. அளவிலும், நீர் மறைய நீர் பாய்ச்ச வேண்டும்.
வறட்சி மேலாண்மை
ஆரம்பக்கால வறட்சி, இடைக்கால வறட்சி, இறுதிக்கால வறட்சி என, வறட்சியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றுள் எது நிகழ்ந்தாலும் ஒரு நெல்மணி கூட வீட்டுக்கு வந்து சேராது.
ஆகவே, பகுதி மானாவாரி நெல் சாகுபடியில், அண்ணா-4 நெல் இரகத்தை, விதையைக் கடினப்படுத்தி விதைத்து, மெத்தைலோ பாக்டீரியத்தை வறட்சியில் தெளித்தால், வறட்சியை முற்றிலும் சமாளிக்கலாம்.
அதாவது, விதையைக் கடினப்படுத்தல் மூலம், ஆரம்பக்கால வறட்சியைத் தடுக்கலாம். இடைக்கால வறட்சியைத் தாங்கி வளரும் திறனை அண்ணா-4 இரகம் பெற்றுள்ளது. மெத்தைலோ பாக்டீரியத் தெளிப்பு, இறுதிக்கால வறட்சியில் இருந்து பயிரைக் காக்கும்.
இந்த மூன்றுக்கு மூன்று கட்டுப்பாட்டு முறைகள், பகுதி மானாவாரி நெல் சாகுபடியில் உயர் மகசூலைக் கொடுக்கும்.
விதையைக் கடினப்படுத்துதல்
வறட்சியில் குறைந்த நீரை வைத்து விவசாயத்தைச் சிறப்பாகச் செய்ய உதவும் முக்கியத் தொழில் நுட்பம் விதையைக் கடினப்படுத்தல். வறட்சியைத் தாங்குவதற்காக, விதைப்பதற்கு முன், விதைகளின் வினையியல் மற்றும் உயிர் வேதியியல் பண்புகளைச் சிறிது மாற்றுவதே இந்தத் தொழில் நுட்பம்.
இந்தத் தன்மைகளை மாற்றும் பண்பானது, விதைகளை ஊற வைத்து, பின் உலர வைப்பதன் மூலம் தூண்டப்படுகிறது. இதன் மூலம் புரோட்டா பிளாசப் பண்புகள் மற்றும் வறட்சியால் விதையுடன் தொடர்புள்ள மற்ற அமைப்புகளின் வினையியல் செயல்களும் மாற்றி அமைக்கப்படும்.
நெல் விதைகளை ஒரு சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் கடினப்படுத்தி விதைத்தால், மானாவாரியில் சராசரி மகசூலை அடைய முடியும்.
இந்த முறையில், தேவையான விதைகளை ஒரு சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில், 20 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, நிழலில் உலர்த்தி, விதையின் பழைய ஈரப்பதத்தில் விதைக்க வேண்டும்.
வறட்சியில் வளரும் அண்ணா-4
பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வறட்சியைத் தாங்கி மானாவாரியில் வளரும், பி.எம்.கே.1, பி.எம்.கே.2, பி.எம்.கே.3, அண்ணா-4 ஆகிய நான்கு நெல் இரகங்களை வெளியிட்டு உள்ளது.
அவற்றுள் அண்ணா-4 நெல் இரகம், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இந்த நெல் இரகம் 2009-இல் வெளியிடப்பட்டது.
100-105 நாட்களில் விளையும் இந்த இரகம், மானாவாரியில் எக்டருக்கு 3.7 டன் மகசூலைத் தரும். நடுத்தர உயரத்தில் சாயாமல் வறட்சியைத் தாங்கி வளரும். இது. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மானாவாரிப் பகுதிகளில் முன்பருவ நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றது.
மெத்தைலோ பாக்டீரிய தெளிப்பு
இது, பொதுவாக பி.பி.எப்.எம். எனப்படும். இதைத் தெளித்து, இலைவழியாக நீர் ஆவியாவதைத் தடுக்கலாம். இறுதிக்கால வறட்சியைத் தடுப்பதற்கு, இதுவே சிறந்த முறை.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 200 லிட்டர் நீரில் 200 மில்லி பி.பி.எப்.எம். நுண்ணுயிர்த் திரவத்தைக் கலந்து தெளித்தால், 15-20 நாட்களுக்குப் பயிர் பசுமையாக இருந்து, மழை பெய்யும் போது தழைக்கும்.
எனவே, இதுவரை கூறியுள்ள உத்திகளைக் கடைப்பிடித்தால், பகுதி மானாவாரி நெல் சாகுபடியில் அதிக மகசூலைப் பெற முடியும்.
முனைவர் செ.முத்துராமு, முனைவர் தி.இராகவன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!