நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெல் நோய்

நெல் விளையும் எல்லா நாடுகளிலும் இந்நோய் அதிகமாக உள்ளது. வெப்பக் காலத்தில் தீவிரமாகப் பரவும் இந்நோய், 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. இதன் கடும் தாக்கத்தால் தான் 1942 ஆம் ஆண்டில் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இந்நோயைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நோய் அறிகுறிகள்

இந்நோய் ஹெல்மின்தோஸ் போரியம் ஒரைசே என்னும் பூஞ்சையால் ஏற்படும். விதை முளை, இலை, இலையுறைக் கதிர், காம்பு, மணி போன்ற பாகங்களில் நோய் அறிகுறிகள் தெரியும். விதை முளையில் பழுப்பு நிறத்தில் சிறு வட்ட அல்லது நீள்வட்டப் புள்ளிகள் தோன்றும்.

இதனால், நாற்றுகள் முளைத்து வருவதற்கு முன்பே மடிந்து விடும். அடுத்து, இலைகளில் குண்டுசிக் கொண்டையைப் போல, சிறிய வட்டப் புள்ளியில் தொடங்கி, எள் விதை வடிவில் அல்லது நீள்வட்டப் புள்ளிகளாக உருவாகும்.

சிறிய புள்ளிகள் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். சாம்பல் நிறத்தில் இருக்கும் இலையின் நடுப்பகுதியில் பல புள்ளிகள் தெரியும். பிறகு, இவை இணைந்து ஒழுங்கற்ற புள்ளியாக மாறும். நோய் தீவிரமானால், இலை முழுவதும் பழுப்பாக மாறி மடிந்து விடும். இந்த அறிகுறிகள் இலை உறையிலும் ஏற்படும்.

இதனால் தாக்கப்படும் கதிர் இலையுறை, பழுப்பு நிறமாக மாறி, கதிரை எளிதாக வெளிவர விடாமல் தடுப்பதால், மணிகள் உருவாவது இல்லை. கதிர் தாமதமாக வெளிவந்தாலும், அது திரிந்தும் நெளிந்தும் உருமாறி விடும். மணிகள் சரிவரப் பிடிக்காமல், கரும்பழுப்பாக மாறிச் சுருங்கி இருக்கும்.

நோய்க்காரணி

பூசண இழைகள் திசுவறைகளுக்கு இடையிலும், திசுவறைகளிலும், நோய்க்காரணி உருவாக்கும் புள்ளிகளின் மேற்பரப்பில் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

இழைக் கத்தைகளில் இருந்து வித்துத் தண்டுகள், இலைத் துளைகள் வழியாகக் குத்துக் குத்தாக வெளிவரும். கோனிடியா வித்துகள், 5-10 குறுக்குச் சுவர்களுடன், நீண்ட குழாயைப் போல, பழுப்பு நிறத்தில் இரண்டு நுனிகளுடன் இருக்கும்.

இந்தப் பூசணத்தின் நிறை நிலை, ஆஸ்கோ மைசிட்டிஸ் வகையைச் சேர்ந்த காக்லியோ போலஸ் மியாபீனஸ் ஆகும். ஆனால், இந்நிலையில் இப்பூசணம் எந்த நோயையும் உருவாக்காது. இந்நோய்க் காரணி காக்லியோ போலின் என்னும் நச்சுப் பொருளை உண்டாக்கும்.

நோய் பரவும் விதம்

இந்நோய், விதை மற்றும் ஊண் வழங்கி விதைகள் மூலம் தோன்றி, காற்று மூலம் பரவுகிறது. மண் மூலம் பரவுவதில்லை. ஆனால், இதனால் தாக்கப்பட்ட பயிர்ப் பாகங்கள் மற்றும் நோய்க்காரணி, அறுவடைக்குப் பிறகு நிலத்தில் நீண்ட காலம் உயிருடன் இருந்து நோயைப் பரப்பலாம்.

மேலும், வயலிலும் சுற்றுப் புறத்திலும் நிரந்தரமாக இருக்கும். லீர்சியா ஹெக்சான்டிரா, சையனோடான் டாக்டிலான் போன்ற புற்களையும், பயிரிடப்படாத சில காட்டு நெல் இரகங்களையும் இந்நோய் தாக்கும்.

இந்நோய் தோன்றுவதில், அதிகமாகப் பரவுவதில் கால நிலைக்கும் முக்கியப் பங்குண்டு. 27-28.5 டிகிரி சென்டிகிரேட் உள்ள மிதமான வெப்ப நிலை, 90-99 சதமுள்ள கடும் ஈரப்பதம், காற்றின் குறைந்த வேகம், குறைந்த மழை ஆகியன, இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். தழைச்சத்தும், சாம்பல் சத்தும் குறைந்தாலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்

உழவியல் முறைகள்: நோயற்ற பயிரில் விளைந்த தரமான விதைகளை விதைக்க வேண்டும். நோய் தாக்கிய நிலத்தில், அறுவடைக்குப் பிறகு கிடக்கும் பயிர்க் கழிவுகள் மற்றும் தூர்களை அகற்றி எரித்துவிட வேண்டும். வயலிலும் சுற்றுப் புறத்திலும் உள்ள ஊண் வழங்கிகளை அழித்து, வயலைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் கேப்டான் வீதம் எடுத்து, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே கலந்து வைத்திருந்து விதைத்தால், விதைகளின் மேல் இருக்கும் பூசண இழைகள் மற்றும் வித்துகளை அழிக்கலாம்.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும், 2.5 கிலோ சூடோமோனாசை எடுத்து நூறு லிட்டர் நீரில் கலந்த கலவையில், ஓர் எக்டர் நடவுக்கான நாற்றுகளை, அரைமணி நேரம் நனைத்து நட வேண்டும்.

விதைகளை 55 டிகிரி செ.கி. வெப்ப வெந்நீரில் பத்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து நிழலில் உலர்த்தி விதைக்கலாம். இந்த வெப்பச் சிகிச்சை மூலம், விதைகளுள் உறக்க நிலையில் இருக்கும் பூசண இழைகளை அழிக்கலாம்.

மருந்து சிகிச்சை: காற்றில் பரவும் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் மேன்கோசெப்பைக் கலந்து தெளிக்கலாம். அல்லது 200 மில்லி எடிஃபென்ஃபாஸ் அல்லது 250 கிராம் காப்டோஃபாலை, 200 லிட்டர் நீரில் கலந்து, 10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.

டி.கே..எம்.9, ஐ.ஆர்.20, சி.ஆர்.1009 போன்ற இரகங்கள் இந்நோயால் அதிகமாகப் பாதிக்கப்படும். கோ.20, பி.ஏ.எம்.10, எஸ்.ஆர்.26 போன்ற இரகங்கள் இந்நோயை எதிர்த்து வளரும்.


நோய் suguna

சு.சுகுணா, முனைவர் சீ.பார்த்தசாரதி, முனைவர் வி.ம.சீனிவாசன், பா.சரண்யா, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, வாலிகண்டாபுரம். பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading