My page - topic 1, topic 2, topic 3

நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

நெல்லி

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

நெல்லிக்காயின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டதால், மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், சந்தையில் நெல்லிக்கு அதிக மதிப்புள்ளது. எனவே, நெல்லி சாகுபடி விவசாயிகளால் விரும்பி செய்யப் படுகிறது.

நெல்லி இரகங்களும் நடவும்

நெல்லியில், என்.ஏ.7, கிருஷ்ணா, காஞ்சன், பி.எஸ்.ஆர்-1, சக்கயா ஆகிய இரகங்கள் உள்ளன. இது, மிதவெப்பப் பகுதிகளில் நன்கு வளரும். எல்லா மண் வகைகளில், வறட்சியில், சிறப்பாக வளரும் தன்மை நெல்லிக்கு உண்டு.

மழைக்கு முன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நெல்லியைப் பயிரிடலாம். தாய் மரத்தில் உள்ள இளந்தண்டு ஒட்டுகள் மூலம், தரமான நெல்லி நாற்றுகள் தயாரிக்கப் படுகின்றன. இத்தகைய சிறந்த நாற்றுகளை வரிசைக்கு வரிசை 6 மீ. இடைவெளியில் நடலாம்.

நிலத் தயாரிப்பு

அதற்கு முன், நிலத்தை நன்கு உழுது தயாரித்துக் கொள்ள வேண்டும். அதில், ஒரு மீட்டர் நீள, அகல, உயரக் குழிகளை, 6 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ தொழு உரத்தை, வண்டல் மண்ணில் கலந்து இட வேண்டும்.

பாசனம் மற்றும் உரமிடல்

இளஞ்செடிகளாக இருக்கும் போது நீர் பாய்ச்ச வேண்டும். மழை மற்றும் குளிர்க் காலத்தில் பாசனம் தேவையில்லை. சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொண்டால், 40-45 சதம் நீர் மிச்சமாகும்.

நெல்லிக்கு உரமிடல்

ஆண்டுதோறும் மரத்துக்கு, தொழுவுரம் 10 கிலோ, தழைச்சத்து 200 கிராம், மணிச்சத்து 500 கிராம், சாம்பல் சத்து 200 கிராம் வீதம் இட வேண்டும். மரங்கள் காய்க்கும் பருவத்தில் இந்த உரங்களை தவறாமல் இட வேண்டும்.

சீரமைப்பு மற்றும் கவாத்து

முக்கால் முதல் ஒரு மீட்டர் உயரம் மரம் வளர்ந்த பின், முதற் கிளைகளை அனுமதிக்க வேண்டும். ஆரம்பத்தில் இரண்டு மற்றும் நான்கு கிளைகளை, எதிர்த் திசைகளில் வளரவிட வேண்டும். மார்ச், ஏப்ரலில் கவாத்து செய்ய வேண்டும்.

தண்டு வீக்கம் வராமல் இருக்க, முறையான கவாத்து அவசியம். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மோனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்து, 15 நாட்களில் இருமுறை தெளிக்க வேண்டும். தண்டுவீக்க அறிகுறி தோன்றுமுன் தெளிப்பது சிறந்தது.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சிகள்: நெல்லியைத் தண்டு முடிச்சுக் கம்பளிப் பூச்சிகள் தாக்கும். அதாவது, இளம் கம்பளிப் பூச்சிகள் தண்டின் மேல் நுனியில் ஓட்டைகளை இடும். இதனால் தண்டின் வளர்ச்சி நின்று, தண்டு முடிச்சுக்குக் கீழே பக்கக் கிளைகள் தோன்றும்.

இதனால், அடுத்த பருவத்தில் மரத்தின் வளர்ச்சி பாதிக்கும். இதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட நுனிகளை நீக்கி விட்டு, டைமீத்தயேட் மருந்தை 0.03 சத அளவில் தெளிக்க வேண்டும்.

பட்டையைத் தின்னும் கம்பளிப் பூச்சிகள்: இவை, நன்கு வளர்ந்த மரத்தின் தண்டு மற்றும் கிளைகளின் பட்டைகளைச் சேதம் செய்யும். மரத்துளைகளில் ம.எண்ணெய்யை ஊற்றிப் பஞ்சினால் அடைத்து வைத்து, இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள்

சொறி நோய்: சிவப்பு நிற வட்டப் புள்ளிகள், இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த, 0.2 சத மேங்கோசெப் மருந்தை, 7-28 நாட்கள் இடைவெளியில், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.

மகசூல்

இப்படி, நன்கு பராமரிக்கும் நிலையில், மரத்துக்கு, ஆண்டுக்கு, நூறு கிலோ காய்கள் கிடைக்கும்.


முனைவர் கோ.சதீஸ், முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் 602025, திருவள்ளூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks