கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020
இந்தியாவில் நெடுங்காலமாக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் பயிரிடப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நெல் இரகங்கள், அந்தந்தப் பகுதிக்கேற்ற தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரும் தன்மையில் இருந்தன. அதாவது, வெள்ளம், வறட்சி, பனிப்பொழிவு ஆகியவற்றைத் தாங்கி வளரும் நிலையில் இருந்தன. மேலும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலும் குறைவாகவே இருக்கும். ஆனால், மகசூலும் குறைவாகவே இருந்தது.
மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது பசுமைப்புரட்சி கொண்டு வரப்பட்டது. இதன் விளைவால் அதிக விளைச்சலைத் தரும் உயர் விளைச்சல் இரகங்கள் பயிரிடப்பட்டன. இவற்றின் மூலம் அதிக மகசூல் கிடைத்ததால், காலப்போக்கில் பாரம்பரிய இரகங்களை மறந்து விட்டோம். ஆனால், புதிய உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்க, ஒருசில பாரம்பரிய நெல் இரகங்கள் உதவுகின்றன.
உயர் மகசூல் இரகங்கள் சாகுபடியில் பயன்படும் இரசாயன மருந்துகளால், மக்களுக்குப் பலவகைகளில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மேலும், நிலமும் நீர்நிலைகளும் மாசடைகின்றன. எனவே, இப்போது பாரம்பரிய நெல் இரகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், அவற்றின் தேவையும் விற்பனை வாய்ப்பும் சிறப்பாக உள்ளன. எனவே, விவசாயிகள் மீண்டும் பாரம்பரிய நெல் இரகங்களைப் பயிரிடுவதில் ஆர்வமாக உள்ளனர்.
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்
கல்லுருண்டை: இது நாகை மாவட்டத்தில் விளைகிறது. சம்பாப் பருவத்திலும் (செப்டம்பர் 15-பிப்ரவரி 14) மற்றும் நவரைப் பருவத்திலும் (டிசம்பர் 15-மார்ச் 14) பயிரிடலாம். களிக்கலப்புள்ள மண்ணில் நன்கு வளரும். 120 நாட்களில் விளையும். 120 செ.மீ. உயரம் வளரும். வறட்சி, பூச்சி, நோய்கள் மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கி வளரும். நெல்மணி சற்றுத் தடித்தும், மங்கிய கறுப்புக் கோடுகளுடன் வெளிர் மஞ்சளாகவும் இருக்கும்.
இரகச் சம்பா: நாகை மாவட்டம், வெள்ளப்பாலம், கீவலுார்ப் பகுதிகளில் விளைகிறது. சம்பாப் பருவம் ஏற்றது. 125-130 நாட்களில் விளையும். 80 செ.மீ. உயரம் வளரும். நெல்மணி சிறிதாகவும், மெலிந்தும் இருக்கும். பிரியாணி சமைப்பதற்கு ஏற்றது.
கறுப்புக்கவுனி: சிவகங்கை மாவட்டம் அனுமந்தகுடியில் விளைகிறது. செப்டம்பர்-ஜனவரி ஏற்ற பருவம். சாயாமல் இருக்கும். 150-175 நாட்களில் விளையும். நெல்மணி கறுப்பாக இருக்கும். தேங்காய்ப் பாலில் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கு மட்டும் பயன்படுகிறது. சோறாக்க ஏற்றதல்ல. தூர்க்கட்டு அதிகமாக இருப்பதால், மற்ற நெல் இரகங்களை விட, இதில் 150% வைக்கோல் கூடுதலாகக் கிடைக்கும்.
பூங்கார்: இராமநாதபுரம் மாவட்டம், இரகுநாதபுரத்தில் விளைகிறது. நாகை மாவட்டம், தலைஞாயிறு இதன் தாயகமாகும். மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. எழுபது நாளில் விளையும். அறுபதாம் கோடை என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. ஐந்தடி உயரம் வளரும்.
மிகவும் குறைவாக மழையுள்ள நிலையிலும், குளிப்பரிச்சான், வரப்புக் கொடஞ்சான் இரகங்களை விட, வறட்சியைத் தாங்கி வளரும். உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும். துத்தநாகச் சத்து உள்ளது. இந்த அரிசியில் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி செய்து கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். அரிசி பழுப்பு நிறத்தில் நடுத்தரக் கனத்தில் இருக்கும்.
குடைவாழை: செங்கல்பட்டு மாவட்டம் சுக்கன் கொள்ளையில் விளைகிறது. பின்சம்பாப் பருவம் மிகவும் ஏற்றது. மணல் கலந்த மண் மற்றும் நீர் சூழ்ந்த பகுதிக்கு ஏற்ற இரகம். 120-125 நாட்களில் விளையும். அரிசி சிவப்பாக இருக்கும். கதிர்கள் விரித்த குடையைப் போல இருப்பதால், குடைவாழை எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு ஏற்றது. ஐந்தடி உயரம் வளரும். தண்டு 2.5 செ.மீ. தடிப்பில் இருக்கும். வைக்கோல் கூரை வேய்வதற்கு ஏற்றது.
முட்டக்கார்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், இடையூரில் விளைகிறது. நவரைப் பருவம் மிகவும் ஏற்றது. 120 நாட்களில் விளையும். நாலரை அடி உயரம் வளர்ந்து சாய்ந்து விடும். அரிசி சிவப்பாக இருக்கும்.
செம்பாலை: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் இடையூரில் விளைகிறது. சம்பாப் பருவம் ஏற்றது. 100-105 நாட்களில் விளையும். அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும். பொரித் தயாரிப்புக்கு ஏற்றது.
கப்பகார்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் தக்கண்டராபுரம் கிராமத்தில் விளைகிறது. சம்பாப் பருவம் மிகவும் ஏற்றது. களிமண் நிலத்தில் அதிக மகசூலைத் தரும். நீர் சூழ்ந்த பகுதி மற்றும் வறட்சிமிக்க பகுதியிலும் வளரும். 150-160 நாட்களில் விளையும். அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும். இட்லி, தோசை, அவல் தயாரிப்புக்கு ஏற்றது.
பெருங்கார்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தக்கண்டராபுரத்தில் விளைகிறது. 120 நாட்களில் விளையும். நாலரை அடி உயரம் வளரும். தண்டுத் துளைப்பான் மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும். இட்லி, தோசைக்கு ஏற்றது.
காலநமக்: இதன் கறுப்பு உமியால் இப்பெயர் ஏற்பட்டது. கலா என்றால் கறுப்பு, நமக் என்றால் உப்பு. உத்திரப்பிரதேச மாநிலத்தின் இமயத் தராய் பகுதியில் விளைகிறது. உயரமாக வளர்ந்து சாயும். நீண்டகாலப் பயிர். சோறு மென்மையாக, பொலபொலப்பாக, சுவையாக இருக்கும். நன்கு செரிக்கும்.
புழுதிக்கார்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கு மலைகளில் மானாவாரி மற்றும் இறவையில் விளைகிறது. 120-130 நாட்களில் விளையும். 130 செ.மீ. உயரம் வளர்ந்து சாய்ந்து விடும்.
மாப்பிள்ளைச் சம்பா: இதிலிருந்து கிடைக்கும் சத்துள்ள நீராகாரத்தைக் குடித்தால், இளவட்டக் கல்லைத் தலைக்கு மேல் எளிதாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். நன்கு செரிக்கும். 160 நாட்களில் விளையும்.
சிவப்புக்கவுனி: இதயத்தை வலுப்படுத்தும். இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மூட்டு வலியைப் போக்கும். நாள்பட்ட புண்ணை ஆற்றும். 130 நாட்களில் விளையும். ஆறடி உயரம் வளரும்.
காட்டுயானம்: ஏழடி உயரம் வளரும். 165 நாட்களில் விளையும். மழை, வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். பயிரின் இலையும் தண்டும் வீரியமாக வளர்வதால், பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, மலச்சிக்கலைப் போக்கும். நரம்புகளை வலுவாக்கும். எளிதில் செரிக்கும்.
சூலைக்குறுவை: நாகை மாவட்டம், செம்பொடை, பெரிய குத்தகை, தொப்புதுரை பகுதிகளில் விளைகிறது. பின்சம்பாப் பருவம் (செப்டம்பர் 15-பிப்ரவரி 14) மற்றும் குறுவைப் பருவத்தில் (ஜூன் 1-ஆகஸ்ட் 31) பயிரிடலாம். களிக்கலப்பு மண் மற்றும் கரையோர உப்பு மண் ஏற்றது. இறவை மற்றும் மானாவாரியில் வளரும். 130-140 நாட்களில் விளையும். 110-120 செ.மீ. உயரம் வளரும். நெல்மணி தடித்துப் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
குழிவெடிச்சான்: நாகை மாவட்டம் வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் வட்டத்தில் விளைகிறது. மணல் கலந்த களிமண் மற்றும் உவர்ப்பு மண்ணில் நன்கு வளர்வதால், கடற்கரைப் பகுதிகளுக்கும் ஏற்ற இரகம். உப்புத் தன்மை, வறட்சி, பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரும். 110 நாட்களில் விளையும். 2.5 அடி உயரம் வளரும். நெல்மணி தடித்துப் பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும்.
வால் சிவப்பு: நாகை மாவட்டம், வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் வட்டத்தில் விளைகிறது. பின்சம்பா பருவம் (செப்டம்பர் 15-பிப்ரவரி 14) ஏற்றது. மணல் கலந்த களிமண் மற்றும் உவர்ப்பு மண்ணில் நன்கு வளரும். வறட்சி மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கி வளரும். 145-150 நாட்களில் விளையும். 160 செ.மீ. உயரம் வளரும். நெல்மணி சிவப்பாகவும், அரிசி ருசியாகவும் இருக்கும். நெல் மணியின் பின்பகுதியில் முள் மயிர் போன்ற வடிவம் இருக்கும். இது சிறிய பறவையின் வாலைப் போலத் தெரியும்.
வெள்ளைக் குறுவைக்கார்: நாகை மாவட்டம் வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் வட்டத்தில் விளைகிறது. சம்பாப் பருவம் (ஜூலை 15-ஜனவரி 14) மற்றும் பின்சம்பாப் பருவத்தில் (செப்டம்பர் 15-பிப்ரவரி 14) பயிரிடலாம். 25-30 நாள் நாற்றுகளை நடலாம். 125-130 நாட்களில் விளையும். மேட்டுக்காலில் நேரடியாக விதைக்கலாம். 100-120 செ.மீ. உயரம் வளரும். நெல்லும், வைக்கோலும் வெளிர் மஞ்சள் மற்றும் பழுப்புக் கலந்த நிறத்தில் இருக்கும். தூர்ப்பிடிக்கும் போது எலிகள் தொல்லை இருக்கும்.
பிச்சாவரை: நாகை மாவட்டம், வெள்ளப்பாலம், கீவலுார் வட்டங்களில் விளைகிறது. 110-115 நாட்களில் விளையும். வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
சூரன் குறுவை: நாகை மாவட்டம், வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் வட்டத்தில் விளைகிறது. சம்பா மற்றும் பின்சம்பாவில் பயிரிடலாம். 130-135 நாட்களில் விளையும். நெல்மணி கரும் பழுப்பாக இருக்கும்.
வைகுண்டா: நாகை மாவட்டம் கீவலுார் வட்டத்தில் விளைகிறது. 145-150 நாட்களில் விளையும். வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
கிச்சடிச் சம்பா: நாகை மாவட்டம், கீவலுார் வட்டத்தில் விளைகிறது. 140 நாட்களில் விளையும். அரிசி வெளிர் வெள்ளையாக இருக்கும். பூச்சிகள் மற்றும் நோய்களைத் தாங்கி வளரும்.
சின்னச்சம்பா/சடச்சம்பா: நாகை மாவட்டம், கீவலுார் வட்டத்தில் விளைகிறது. 140 நாட்களில் விளையும். பூங்கொத்து மற்றும் பால் பருவத்தில், நெல்மணி இளம் பச்சையாகவும், முதிர் நிலையில் வெளிர் மஞ்சளாகவும் இருக்கும்.
குதிரைவால் சம்பா: திருச்சி மாவட்டம், கம்பளத்துப்பட்டிப் பகுதியில் விளைகிறது. சம்பாப் பருவம் (ஜூலை 15-ஜனவரி 14) ஏற்றது. 140-150 நாட்களில் விளையும். சாயாமல் இருக்கும். பூச்சி, நோய்களைத் தாங்கி வளரும். நெல்மணி மஞ்சளாக, அரிசி சுத்த வெள்ளையாக இருக்கும்.
மர நெல்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் விளைகிறது. 120-125 நாட்களில் விளையும். பின்சம்பா மற்றும் கோடையில் வரும் நவரைப் பருவம் ஏற்றது. அரிசி சிவப்பாக இருக்கும். நெல்மணிகள் கடினமான விதையுறையைக் கொண்டிருக்கும். எனவே, அறுவடை நேரத்தில் கனமழை பெய்தாலும் முளைக்காது. இந்த விதையுறை, சேமிப்புக் காலத்தில் தாக்கும் பூச்சிகளையும் எதிர்க்க உதவுகிறது.
கள்ளிமடையான்: பெரம்பலுார் மாவட்டம், ஐயர்பாளையத்தில் விளைகிறது. இது விளைய ஆறு மாதமாகும். நன்கு தூர்ப்பிடித்து 110-120 செ.மீ. உயரம் வளரும். பூங்கொத்து 30 செ.மீ. நீளமிருக்கும். நெல் மணி வெள்ளையாக இருக்கும். தண்டுத் துளைப்பான், கதிர்நாவாய்ப் பூச்சி, குலைநோயைத் தாங்கி வளரும்.
சண்டிக்கார்: சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் விளைகிறது. செப்டம்பர்-ஜனவரிக் காலத்தில் பயிரிடலாம். கரிசல் மண், செம்மண் மற்றும் உப்பு மண் மிகவும் ஏற்றது.
வரப்புக் கொடஞ்சன்: இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் விளைகிறது. மானாவாரிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரும். மூன்று மாதங்களில் விளையும். செப்டம்பரில் விதைத்து ஜனவரியில் அறுக்கலாம். நெல்மணி கறுப்பாக, அரிசி சிவப்பாக இருக்கும். 2-3 நாட்கள் சோறு கெடாமல் இருக்கும். கஞ்சி ருசியாக இருக்கும். உழைக்கும் மக்கள் இந்த அரிசிக்கஞ்சி ஆற்றலைத் தருவதாக நம்புகின்றனர்.
குழிப்பறிச்சான்: இராமநாதபுரம் மாவட்டம், பல்லபச்சேரியில் விளைகிறது. கடற்கரையோர மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. மூன்று மாதங்களில் விளையும். செப்டம்பரில் விதைத்து ஜனவரியில் அறுக்கலாம். வறட்சியைத் தாங்கி வளரும். வெளித்தோல் சற்றுக் கறுப்பாகவும், அரிசி உருண்டும் தடித்தும் இருக்கும். சோறு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
சித்திரைக்கார்: இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணிப் பகுதியில் விளைகிறது. இவ்வகையான அனைத்துப் பொது இரகங்களையும் மட்டை அல்லது நொறுங்கன் என அழைக்கின்றனர். கடற்கரையோர மணல் கலந்த மண் ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரும்.
சிவப்புச் சித்திரைக்கார்: பரமக்குடிப் பகுதியில் விளைகிறது. வெளித்தோல் கறுப்பாக, அரிசி சிவப்பாக இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். 110 நாட்களில் விளையும். ஆவணியில் விதைக்கலாம்.
முருங்கைக்கார்: இராமநாதபுரம் பகுதியில் விளைகிறது. மழை மிகவும் குறைவாகப் பெய்யும் காலத்துக்கு ஏற்ற இரகம். ஆவணியில் விதைத்து மார்கழியில் அறுவடை செய்யப்படுகிறது.
நுாற்றிப்பத்து: இராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகிறது. அரிசியின் வெளித்தோல் வெள்ளையாக, உள்பகுதி சிவப்பாக இருக்கும். வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். அரிசிக்கஞ்சி ருசியாக இருக்கும். ஆவணியில் விதைத்துத் தையில் (ஆகஸ்ட்-ஜனவரி) அறுக்கலாம்.
அரியான்: இராமநாதபுரம் மாவட்டத்தில், ரெகுநாதபுரம் பகுதியில் மணல் கலந்த மண்ணில், வெள்ளை அரியான், கறுப்பு அரியான், சிவப்பு அரியான், வாழை அரியான் ஆகிய நான்கு வகைகள் விளைகின்றன. இவை அனைத்திலும் உமிச்சிலாம்புகள் இருக்கும். இவை 5.5-6.5 அடி உயரம் வளரும். 120 நாட்களில் விளையும். கரையோர மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரும். அரிசிக்கஞ்சி ருசியாகவும், சிலமணி நேரம் பசியின்றி இருக்கவும் உதவுகிறது.
சடைக்கார்: இராமநாதபுரம் மாவட்டம், ஆகாடாவலசையில் மட்டும் விளையும் மருத்துவக் குணமுள்ள நெல்லாகும். இந்த அரிசியைத் தேய்த்தால் உடம்புக் காயங்கள் குணமாகும். உள்ளூர் மாட்டு வைத்தியர்கள் இந்த அரிசியைச் சிகிச்சைக்குப் பயன்படுத்துகின்றனர். இதில் இனிப்புச்சுவை இருப்பதால், இடியாப்பம், புட்டு, பணியாரம் போன்ற பண்டங்களைத் தயாரிக்க உதவுகிறது. மணல் கலந்த மண்ணில் நன்கு வளரும்.
குறுவைக் களஞ்சியம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகிறது. 110 நாட்களில் விளையும். ஆவணியில் விதைத்துத் தையில் (ஆகஸ்ட்-ஜனவரி) அறுவடை செய்யப்படும். சமைத்து இரு நாட்கள் கழித்தும் இந்தச் சோறு ருசியாக இருக்கும்.
நொறுங்கன்: இராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகிறது. 110 நாட்களில் விளையும். ஐப்பசியில் மணல் கலந்த மண்ணில் மானாவாரியாக விதைத்துத் தையில் (அக்டோபர்-ஜனவரி) அறுவடை செய்யப்படும்.
கல்லுருண்டைக்கார்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் விளைகிறது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும்.
தங்கச்சம்பா: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளைகிறது. சம்பா மற்றும் பின்சம்பாவில் விதைக்கலாம். 160-165 நாட்களில் விளையும். நெல்மணி தங்க நிறத்தில் இருக்கும். கதிர் மிகவும் நீளமாக இருக்கும்.
நீலன் சம்பா: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன்கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவம் மிகவும் ஏற்றது. 175-180 நாட்களில் விளையும். நீர் சூழ்ந்த பகுதிக்கு ஏற்றது. அரிசி சிவப்பாக இருக்கும். தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
வாடன் சம்பா: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளைகிறது. சம்பாப் பருவம் மிகவும் ஏற்றது. 155-160 நாட்களில் விளையும். அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும்.
களியண் சம்பா: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவமே ஏற்றது. 155-160 நாட்களில் விளையும். 5.5 அடி உயரம் வளரும். நீர் சூழ்ந்த மற்றும் பள்ளக்கால் நிலங்களுக்கு ஏற்ற இரகம். அரிசி சிவப்பாக இருக்கும்.
சம்பா மொசானம்: இதற்குப் புழுதிக்கால் எறிநெல் மற்றும் மடுவு முசங்கி என்னும் பெயர்களும் உண்டு. செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவமே ஏற்றது. 160-165 நாட்களில் விளையும். ஏரிகளுக்கு அருகில் சிறப்பாக வளரும். அரிசி சிவப்பாக இருக்கும். அவல், இட்லி, தோசைக்கு ஏற்றது. மக்கள் படகுகளில் சென்று இந்த நெல்லை ஏரிகளில் இருந்து அறுவடை செய்து எடுத்துச் செல்வர் எனக் கூறப்படுகிறது.
காடைக்கழுத்தான்: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவம் தான் ஏற்றது. 165 நாட்களில் விளையும். சிறந்த வடிகால் வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரும். அரிசி வெள்ளையாக இருக்கும். புட்டு செய்ய ஏற்றது.
பிசினி: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவமே சிறந்தது. 120 நாட்களில் விளையும். வறட்சியைத் தாங்கி வளரும். கதிர்களில் உமிச்சிலாம்பு இருப்பதால், தானியத்தை கவனமாக அகற்ற வேண்டும். தோசை, கூழ், அவல் செய்ய உகந்தது.
துாயமல்லி: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவமே ஏற்றது. 135-140 நாட்களில் விளையும். பூக்கும் போது, கதிர்கள் பூக்களைப் போலத் தெரியும். அரிசி வெள்ளை நிறத்தில் தரமாக இருக்கும்.
களர்ப்பாலை: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. நவரைப் பருவமே ஏற்றது. 120 நாட்களில் விளையும். களர் நிலம் ஏற்றது என்பதால், களர்ப்பாலை எனப் பெயர் பெற்றது. அரிசி பெரிதாக, பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கூம்வாளை: செங்கல்பட்டு மாவட்டம், சுக்கன் கொள்ளையில் விளைகிறது. சம்பாப் பருவமே மிகவும் ஏற்றது. 128-130 நாட்களில் விளையும். அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பனங்காட்டுக் குடவாழை: நீரிழிவு வராமல் தடுக்கும். செரிமானச் சிக்கலைப் போக்கும். நீர்ப்பிடிப்புப் பகுதி, கடலோரப் பகுதியில் விளையும். நோயெதிர்ப்பு மிக்க இரகம். இந்த உணவு, தாய்மார்களுக்கு நல்ல பால் சுரப்பைத் தரும். இதைக் கஞ்சியாகச் செய்து குடித்தால், காய்ச்சல் உடனே குணமாகும்.
கருங்குறுவை: கடும் தொழுநோய், யானைக்கால் நோய் மற்றும் சில விஷங்களையும் நீக்கும். போக ஆற்றலைத் தருவதால், இதற்கு இந்தியன் வயாகரா என்னும் பெயரும் உண்டு.
கருத்தக்கார்: வெண்குட்டத்தைப் போக்கும் காடியைத் தயாரிக்கவும், பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கும் பயன்படுகிறது.
மடு முழுங்கி: இந்த நெல்லை, ஆறு, குளம், குன்று, மலைகளில் வறட்சிக் காலங்களில் விவசாயிகள் தூவி விடுவார்கள். மழை பெய்த நீர் நிலைகளில் இது முளைத்து விடும். நீர் எவ்வளவு இருந்தாலும், அதற்கு மேல் நெற்கதிர்கள் வளர்ந்து நிற்கும். பரிசலில் சென்று கதிர்களை அறுப்பார்கள். இது 180 நாட்களில் விளையும்.
முனைவர் இராஜா.ரமேஷ்,
உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!