நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

சத்து

நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மூலம் இடப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இட்டால் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடையும்; நமது உடல் நலமும் கெடும்.

மேலும், மத்திய அரசு மானியத்தைக் குறைத்ததால், உர விலையும் சாகுபடிச் செலவும் கூடியுள்ளன. எனவே, நெற்பயிருக்குச் செயற்கை உரங்களுடன், இயற்கை மற்றும் நுண்ணுயிர் உரங்களை இட வேண்டும். இப்படி, எல்லாச் சத்துகளையும் முறைப்படுத்தி இட்டால், செலவைக் குறைத்து அதிக மகசூலைப் பெற முடியும்.

சத்து நிர்வாகம்

விதைநேர்த்தி: முதலில் நுண்ணுயிர் உரங்களில் கலந்து விதை நேத்தி செய்ய வேண்டும். இதற்கு, எக்டருக்கு மூன்று பொட்டலம் அசோஸ் பயிரில்லம், மூன்று பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா அல்லது ஆறு பொட்டலம் அசோபாஸ் தேவை.

இவற்றை நீரில் இட்டுக் கரைசலாக்கி, அதில், விதைகளை ஒருநாள் இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, நனைந்த சணல் சாக்கில் கட்டி, 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டியதும் விதைக்க வேண்டும்.

நாற்றங்காலில்: இருபது சென்ட் நாற்றங்கால் அமைக்க, ஒரு டன் தொழுவுரம் தேவை. நிலத்தில் சத்துகள் குறைவாக இருந்தால், கடைசி உழவின் போது, 40 கிலோ ஏடிபியை இடலாம். அல்லது 16 கிலோ யூரியா மற்றும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டைக் கலந்து இடலாம்.

களிமண் நாற்றங்காலில் நாற்றுகளைப் பறிக்கும் போது வேர்கள் அறுபடும். இதைத் தவிர்க்க, விதைத்த பத்தாம் நாளில், சென்ட்டுக்கு 4 கிலோ ஜிப்சம் ஒரு கிலோ ஏடிபி வீதம் இடலாம்.

வயலில்: நிலத்திலுள்ள சத்துகளின் அளவு அடிக்கடி மாறும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை, தேவையான அளவில் மட்டும் இட்டால் உரச் செலவைக் குறைக்கலாம்.

தொழுவுரம், மண்புழு உரம்: எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். இதனால், தழை, மணி, சாம்பல் சத்துடன், சுண்ணாம்பு, மக்னீசியம், சோடியம், மாங்கனீசு, போரான் போன்ற நுண் சத்துகள் பயிருக்குக் கிடைக்கும்.

மேலும், தொழுவுரம் மூலம் மண்ணின் அமைப்பு மேம்படும். மண்ணின் அயனி மாற்றுத் திறன் கூடும். மண் இறுகல் மாறும். ஏக்கருக்கு 2 டன் மண்புழு உரத்தை இட்டால் 10-20 சதம் மகசூல் கூடும்.

கரும்பாலைக்கழிவு: இது, களர் நிலத்தில் உள்ள சோடியத்தின் காரத் தன்மையை நீக்கும். மானாவாரி மற்றும் புழுதிக்கால் நெல் சாகுபடியில், இதை அடியுரமாக இடலாம். இதனால், மண்ணின் ஈரப்பதம் கூடும். தூர்கள் அதிகமாகி நல்ல மகசூல் கிடைக்கும்.

நுண்ணுயிர் உரங்கள்: எக்டருக்கு 250 கிலோ அசோலாவை, நட்ட 3-5 நாட்களில் தூவி நெற்பயிருடன் வளர்த்து, களை எடுக்கும் போது, களைக்கருவி அல்லது காலால் மண்ணுக்குள் மிதித்து விட வேண்டும்.

எக்டருக்கு 10 கிலோ நீலப்பச்சைப் பாசியை, நட்ட பத்தாம் நாளில் இட்டால், அதிக விளைச்சல் கிடைக்கும். இதனால், எக்டருக்கு 20-25 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும். அசோலா நீலப்பச்சைப் பாசியுடன் சேர்ந்து காற்றில் உள்ள தழைச் சத்தைக் கிரகிக்கும்.

விதை நேர்த்தி செய்யாத நிலையில், எக்டருக்கு 10 பொட்டலம் அசோஸ் பைரில்லம், 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா வீதம் எடுத்து, 25 கிலோ மட்கிய தொழுவுரம் மற்றும் 25 கிலோ பெருமணலில் கலந்து, நடவுக்கு முன் சீராகத் தூவ வேண்டும். இதனால், பயிருக்குத் தேவையான மணிச் சத்தைப் பெற முடியும்.

பசுந்தாள் உரம்: இது, பயிருக்கு வேண்டிய தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண் சத்துகளைத் தரும். தக்கைப்பூண்டு, சீமையகத்தி, கொளுஞ்சி, பிள்ளிப்பெசரா, சணப்பை போன்றவை பசுந்தாள் உரமாகும்.

எக்டருக்கு 40-50 கிலோ தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து, 45-50 நாட்களில் மடக்கி உழுதுவிட வேண்டும். இதனால், மண்ணில், கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துப் பயிர்களுக்குக் கிடைக்கும்.

மேலும், பசுந்தாள் பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் சேர்ப்பதால், நெல்லுக்கான தழைச் சத்தில் 25 சதத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

இரசாயன உரம்: மண்ணாய்வு மூலம் உரத்தேவையை அறியலாம். தழைச்சத்தை யூரியா மூலமும், மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் மூலமும், சாம்பல் சத்தை பொட்டாஷ் மூலமும் இடலாம்.

மண்ணாய்வு செய்யாத நிலையில், காவிரிப் பாசனம் மற்றும் கோவைப் பகுதியில், குறுகிய காலப் பயிருக்கு, எக்டருக்கு, 325 கிலோ யூரியா, 312 கிலோ சூப்பர் பாஸ்பேட், 83 கிலோ பொட்டாஷ் தேவை.

மற்ற பகுதிகளுக்கு, 260 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 66 கிலோ பொட்டாஷ் தேவை. மத்திய மற்றும் நீண்டகால இரகங்களுக்கு, 325 கிலோ யூரியா, 312 கிலோ சூப்பர் பாஸ்பேட், 83 கிலோ பொட்டாஷ் தேவை.

தழைச்சத்து, சாம்பல் சத்து: தழை மற்றும் சாம்பல் சத்தை, நான்காகப் பிரித்து இட வேண்டும். அதாவது, கடைசி உழவின் போது, தூர்க்கட்டும் போது, கதிர் உருவாகும் போது மற்றும் கதிர் வெளிவரும் போது இட வேண்டும். தூர்க்கட்டும் பருவமும், கதிர் உருவாகும் பருவமும் முக்கியமானவை.

மணிச்சத்து: இதை அடியுரமாக இட வேண்டும். பசுந்தாள் உரத்தை இடும் போது, மணிச்சத்தாக, ராக் பாஸ்பேட்டை இடலாம். இதனால், அடுத்த பருவத்தில் மணிச்சத்தை இடத் தேவையில்லை. ராக் பாஸ்பேட்டை, சூப்பர் பாஸ்பேட்டுடன் 50:50 வீதம் கலந்து இட்டால், நல்ல மகசூல் கிடைக்கும்.

இலை வண்ண அட்டை: நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தை, இலை வண்ண அட்டையில் உள்ள பச்சைய மதிப்பீட்டு முறையில் இடலாம். நட்ட 14 ஆம் நாளில் இருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளில் இருந்து, வாரம் ஒருமுறை பச்சைய அளவை மதிப்பிடலாம். இதற்கான பயிர் இலை, முழுதாக வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாம் இலையாகும்.

இந்த அட்டை மூலம் இலையின் நிறத்தை ஒப்பிடும் போது, சூரியவொளி இலையில் நேரடியாகப் படக்கூடாது. இந்த வேலையைக் காலை 8-10 மணிக்குள் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட ஒருவரே இதைச் செய்தால் அளவு சரியாக இருக்கும். அளவீடு எண் இரகத்துக்கு இரகம் வேறுபடும். அதிகத் தழைச்சத்தை தாங்காத இரகங்களின் அளவீடு எண் 3.0. பிற இரகங்களின் அளவீடு எண் 4.0 ஆகும்.

இப்படி முடிவு செய்யப்பட்ட எண் பத்துக்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவை விடக் குறைந்தால் உடனே தழைச் சத்தை இட வேண்டும். நட்ட ஏழு நாட்களில் எக்டருக்கு 54 கிலோ யூரியாவை இட வேண்டும்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும், குறுவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு, எக்டருக்கு 86 கிலோ யூரியாவை இட வேண்டும். மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு, எக்டருக்கு 65 கிலோ யூரியாவை இட வேண்டும்.

35-45 நாள் நாற்றுகளை நட்டால், மகசூலைக் கூட்ட, எக்டருக்கு 75 கிலோ யூரியாவை அடியுரமாக இட வேண்டும். மேலும், நட்ட 14 ஆம் நாளிலிருந்து இலை வண்ண அட்டை மூலம் தழைச் சத்தின் நிலையைக் கவனித்து வர வேண்டும்.


ரா.அஜய்குமார், வானவராயர் வேளாண்மை நிறுவனம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் – 642001. க.சிவசபரி, ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மைக் கல்லூரி, தூக்கநாயக்கன்பாளையம், ஈரோடு – 638506.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!