My page - topic 1, topic 2, topic 3

நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

நுண்ணுயிரி

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.

ங்ககப் பண்ணை என்பது, இயற்கை உரங்களைச் சார்ந்த அமைப்பாகும். இவ்வுரங்கள் தேவையான அளவில் கிடைக்காத நிலையில், இவற்றைச் செறிவூட்டி, சத்துகளின் அளவைக் கூட்டலாம்.

மேலும், இயற்கை உரங்களைக் கிரகிக்கும் திறன், பயிர்களில் குறைவாகவே உள்ளது. அதிகமான செயற்கை உரங்களால் நுண்ணுயிர்கள் குறைந்து விடுகின்றன.

எனவே, நுண்ணுயிர்கள் பெருக, மண்ணின் கார அமிலத் தன்மை, ஈரப்பதம், மண்ணின் வெப்பநிலை மற்றும் செயற்கை உரங்களை அதிகமாக இடுவதைச் சரி செய்ய வேண்டும். இயற்கை மற்றும் உயிர் உரங்களை இடலாம்.

இவற்றால் மண்ணில் 30 சதம் தழைச்சத்து, 20 சதம் மணிச்சத்தைச் சேமிக்கலாம். சுற்றுச்சூழல் பாதிக்காது. பயிர்கள் நன்கு வளரும். மண்ணில் பயனின்றிக் கிடக்கும், தழை, மணி, சாம்பல் சத்துகளை, பயிர்களுக்குக் கிடைக்கும் வகையில் மாற்றும். காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும்.

ரைசோபியம்

இது, பாக்டீரிய இனத்தைச் சார்ந்த நுண்ணுயிர். அவரைக் குடும்பப் பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்களில் முடிச்சுகளை உண்டாக்கும். இவற்றில் உள்ள நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும். ரைசோபியம், 25 சத தழைச்சத்து உரத்தை மிச்சமாக்கி, மகசூலைக் கூட்டும்.

நாற்றுப் பருவத்தில் இருந்து சத்துகளை அளித்து, பயிர்களை வளர்ப்பதில் ரைசோபியத்தின் பங்கு முக்கியமானது. வேர்க்கசிவும் வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் உயிர்ப் பொருள்களும் மண்வளத்தை மேம்படுத்தும்.

அசோஸ்பயிரில்லம்

பாக்டீரிய இனத்தைச் சார்ந்த இது, எல்லாப் பயிர்களுக்கும் பயன்படும். காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும் இது, பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்யும். இதனால், பயிர்கள் வேகமாக வளரும். மண்வளத்தை மேம்படுத்தி மகசூலைக் கூட்டும்.

பாஸ்போபாக்டீரியா

மண்ணிலுள்ள மணிச்சத்து, பயிருக்குப் கிடைப்பதைப் பொறுத்தே மகசூலும் இருக்கும். அதாவது, நிலத்தில் இடப்படும் மணிச்சத்து, மண்ணிலுள்ள கனிம வேதியியல் பண்புகளைப் பொறுத்து மாறும்.

அதாவது, அமில கார வகையிலுள்ள சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம் ஆகியவற்றில் உள்ள அலுமினியம், ஆக்ஸைடுகள், சிலிக்கேட்டுகள் ஆகியன, மணிச்சத்தைப் பயிருக்குக் கிடைக்காத வகையில் மாற்றி விடும். இதனால் 10-30 சத மணிச்சத்து, பயிர்களுக்குக் குறைவாகவே கிடைக்கும். எனவே, மணிச்சத்தை அதிகமாகக் கொடுக்கும் நிலை ஏற்படும்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வைத் தருகிறது பாஸ்போ பாக்டீரியா. இந்த நுண்ணுயிர்கள், கரையாமல் இருக்கும் மணிச்சத்தை, தங்கள் செல்களில் சுரக்கும் அமிலங்கள் மூலம், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றிக் கொடுக்கும். இதனால், பயிர்களில் அதிகளவில் பூக்கள் தோன்றி, விதை உற்பத்தி அதிகமாகும்.

இதை நிலத்தில் இட்டால், தேவையான மணிச்சத்தில் 25 சதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இதை, ரைசோபியம், அசோஸ் பயிரில்லத்தில் கலந்து இட்டால், இவற்றின் செயல்திறன் கூடும். பாஸ்போ பாக்டீரியா, உணவுப் பொருள்களின் தரம் மற்றும் புரத அளவைக் கூட்டும்.

வெசிக்குளார் ஆர்பஸ்குலார் வேர் உட்பூசணம்

மணிச்சத்து, துத்தநாகம், கந்தகம் ஆகியவற்றை, செடிகளின் வேர்ப் பகுதியில் பரிமாறுவதில் இந்தப் பூசணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், பயிர்களுக்குத் தேவையான சத்துகள், சரிவிகித அளவில் கிடைப்பதால் மகசூல் கூடுகிறது.

அசோலா

பெரணிவகை நீர்த்தாவரமான இது, நெல் வயல்களில், நீர் நிலைகளில் இருக்கும். அசோலா இலைத் திசுக்களில் அனபீனா என்னும் நீலப்பச்சைப் பாசி இணைந்து செயலாற்றி, தழைச்சத்தைச் சேர்க்கிறது.

நெல் நடவு முடிந்து ஒரு வாரம் கழித்து அசோலாவைப் பயிருடன் வளர விட்டால், வயல் முழூவதும் விரைவில் பரவி, தழையுரத்தைக் கொடுக்கும். முதல் களையெடுப்பின் போது சேற்றில் மிதித்து விட்டால், 10 நாட்களில் மட்கி, தழைச்சத்தைச் சீராக நெற்பயிருக்குக் கொடுக்கும்.

மீதமுள்ள அசோலா மீண்டும் 10-15 நாட்களில் நன்கு வளர்ந்து மேலும் ஒருமுறை தழையுரமாகும். இப்படி, நெற்பயிருடன் அசோலாவைச் சேர்த்து வளர்த்தால், எக்டருக்கு 30-40 கிலோ தழைச்சத்து கிடைக்கும். மண்வளமும் மகசூலும் கூடும்.

பயன்படுத்தும் முறை

காலாவதி ஆகாத மற்றும் பயிருக்கு ஏற்ற நுண்ணுரங்களைப் பயன்படுத்த வேண்டும். உலர்ந்த, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் இரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது.

விதை நேர்த்தியின் போது முதலில் பூசணக் கொல்லியையும், கடைசியில் உயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். ஆறிய அரிசிக்கஞ்சி அல்லது வெல்லக் கரைசலில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். வெய்யில் நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.

மேலும், பயிர்க் கழிவுகள் மற்றும் களைகளை மட்கச் செய்து, இயற்கை உரமாக இடலாம். பயிர்க் கழிவுகளை மட்கச் செய்வதில் நுண்ணுயிரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இவை பயன்மிகு நுண்ணுயிரிகள் எனப்படும். இவை குறைந்த காலத்தில் பயிர்க் கழிவுகளை மட்க வைப்பதால், இயற்கை உரத்தை எளிதிலும் அதிகளவிலும் பெற முடியும்.

இயற்கை வேளாண்மை அவசியப்படும் இன்றைய நிலையில், இதில் நுண்ணுயிரிகளின் பங்கு மிகவும் முக்கியமாகும். எனவே, இவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் மண்வளமும் மகசூலும் சிறப்பாக இருக்கும்.


முனைவர் மு.சுகந்தி, முனைவர் அ.இளங்கோ, முனைவர் ச.த.செல்வன், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks