தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து நிலக்கடலை. இப்பயிரில், நுண்ணுரம் இடுதல், ஊடுபயிர் சாகுபடி, சிப்சம் இடுதல், பாசனம், பயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட உத்திகளைச் சரிவரச் செய்யாமல் விடுவதால் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இவற்றைச் சரியாகச் செய்தால் அதிக மகசூலைப் பெற முடியும்.
நிலம் தயாரித்தல்
மணற்சாரி வண்டல், கருவண்டல், செம்மண் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையால் உழுத பிறகு, 3-4 முறை இரும்பு அல்லது நாட்டுக் கலப்பையால், புழுதியாக உழுது விதைகளை விதைக்க வேண்டும்.
விதைப்பு
பி.எஸ்.ஆர்.2: இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 2,220 கிலோ மகசூலைத் தரும். துரு மற்றும் பின்பருவ இலைப்புள்ளி நோயைத் தாங்கி வளரும். நீலகிரி, குமரி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிடலாம்.
வி.ஆர்.ஐ.8: இதன் வயது 105-110 நாட்கள். எக்டருக்கு 2,130 கிலோ மகசூலைத் தரும். துரு, பின்பருவ இலைப்புள்ளி நோய்களைத் தாங்கி வளரும். தமிழ்நாட்டில், நீலகிரி, குமரி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் விளையும்.
விதை நேர்த்தி
நோயின்றிச் சீராக வளர்வதற்கு விதை நேர்த்தி அவசியம். எனவே, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இதனால், விதை மூலம் பரவும் வேரழுகல், தண்டழுகல் நோய்களைத் தடுக்கலாம்.
பிறகு, இந்த விதைகளை, ஆறிய வடிகஞ்சியில் கலக்கப்பட்ட மூன்று பொட்டல ரைசோபிய நுண்ணுயிரிக் கலவையில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.
இதைச் செய்யாத நிலையில், எக்டருக்குப் பத்துப் பொட்டலம் அதாவது, 2 கிலோ ரைசோபியத்தை, 25 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். இதனால், நோய் எதிர்ப்புத் திறனுடன், பயிர் செழிப்பாக வளரும்.
பயிர் இடைவெளி
30×10 செ.மீ. இடைவெளியில் சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கும்படி விதைக்க வேண்டும். சரியான பயிர் எண்ணிக்கை மூலம், நீர், உரம், காற்றுக் கிரகிப்புத் திறன் மிகுவதால், பயிர்களின் வளர்ச்சியும் மகசூலும் கூடும்.
உர மேலாண்மை
நிலத்தின் பௌதிக, இரசாயன, உயிரியல் தன்மைகள் மண் வளத்தைப் பாதிக்காமல் இருக்க உர மேலாண்மை அவசியம். ஏக்கருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது 5 டன் மட்கிய தென்னை நார்க்கழிவை இட வேண்டும்.
மேலும், இரசாயன உரங்களை மண்ணாய்வு முடிவின்படி இடுவது நல்லது. அல்லது, பொது உர அளவாக, இறவை சாகுபடியில் எக்டருக்கு 17:34:54 கிலோ தழை மணி சாம்பல் சத்தை இட வேண்டும்.
இவற்றில், தழை மற்றும் மணிச்சத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அடியுரமாக 50 சதம், விதைத்த 20 மற்றும் 45 நாளில் தலா 25 சதம் வீதம் இட வேண்டும். மானாவாரியில், எக்டருக்கு, 10:10:45 கிலோ வீதம் தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும்.
மறுவிதை ஊன்றுதல்
விதைத்த ஏழாம் நாள் மறுவிதை ஊன்ற வேண்டும். சரியான எண்ணிக்கை மூலம் கூடுதல் மகசூல் கிடைக்கும். மேலும், பயிர்கள் அதிகமாக இருந்தால், அவற்றைக் கலைத்து விட வேண்டும்.
களை நிர்வாகம்
புளுகுளோரலின் களைக் கொல்லியை எக்டருக்கு 2 லிட்டர் வீதம் தெளிக்கலாம். ஆனால், இதைத் தவிர்த்து விட்டு, விதைகள் நன்கு முளைத்ததும், கைக்களை எடுப்பதே சிறந்தது. 45 நாளில் இரண்டாம் களை எடுக்க வேண்டும்.
மண் அணைத்தல்
களையை எடுத்த பிறகு, எக்டருக்கு 400 கிலோ வீதம் பிறகு ஜிப்சத்தை இட்டு மண்ணை அணைத்து விட வேண்டும். மானாவாரியில் ஈரத்தைப் பொறுத்து, 45-60 நாளில் ஜிப்சத்தை இடலாம். இதனால், விழுதுகள் நன்கு இறங்கிக் காய்கள் அதிகமாகப் பிடிக்கும்.
சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள மண்ணில் ஜிப்சத்தை இடக்கூடாது. ஜிப்சத்தை இடுவதால், காய்ப்பிடிப்பு அதிகமாகும். தரமான காய்கள் கிடைக்கும். பருப்பின் எடை, எண்ணெய்ச் சத்தின் அளவு கூடும்.
நுண்ணுரம் இடுதல்
விதைப்பதற்கு முன், 12.5 கிலோ நுண்ணுரத்தை, 37.5 கிலோ மணலில் கலந்து நிலத்தில் விதைக்க வேண்டும். இதனால், மண்ணில் சத்துகள் விகிதம் சமமாகி, அனைத்துச் சத்துகளும் சரியான அளவில் பயிருக்குக் கிடைப்பதால், வளர்ச்சி சீராக இருக்கும்.
நிலக்கடலை ரிச்
நிலக்கடலையில் அதிக மகசூலை எடுக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், நிலக்கடலை ரிச் என்னும் வளர்ச்சி ஊக்கியைத் தயாரித்து வழங்கி வருகிறது. இதனால், பூக்கள் அதிகமாகும்.
பொக்குக் கடலைகள் குறையும். விளைச்சல் 15 சதம் வரை கூடும். வறட்சியைத் தாங்கி வளரும். இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில், தேவையான ஒட்டும் திரவத்துடன் கலந்து, பூக்கும் போது மற்றும் காய்ப்புப் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
ஊடுபயிர்
மானாவாரி நிலக்கடலை சாகுபடியில், உளுந்து, தட்டை, துவரை, சூரியகாந்தி போன்றவற்றை ஊடுபயிராக இட்டால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இவற்றை, நிலக்கடலை + உளுந்து 4:1, நிலக்கடலை + தட்டைப்பயறு 6:1, நிலக்கடலை + துவரை 6:1, நிலக்கடலை + சூரியகாந்தி 6:2 ஆகிய வரிசைகளில் பயிரிடலாம். இதனால், நீர் மற்றும் உரத்தின் பயன் மிகுந்து, நிலவளமும் உற்பத்தித் திறனும் கூடும்.
பாசனம்
பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப பாசனம் தர வேண்டும். விதைப்புக் காலம், பூக்கும் மற்றும் காய்க்கும் காலத்தில் பாசனம் அவசியம். ஏனெனில், இந்நிலைகளில் மண் ஈரப்பதமாக இருக்க வேண்டும்.
இவ்வகையில், விதைப்பு நீர், உயிர்நீர், அடுத்து விதைத்த 20 நாளில் பூக்கும் போது இருமுறை பாசனம் அவசியம். முளைப்புப் பருவத்தில் 1-2 முறை பாசனம் அவசியம்.
பூப்பின் போதும், காய்க்கும் போதும் 0.5 சத பொட்டாசியம் குளோரைடைத் தெளித்து நீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம். தெளிப்புப் பாசனம் மூலம், 30 சதம் வரை நீரைச் சேமிக்கலாம்.
அறுவடை
முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல் இலைகள் மஞ்சளாதல் முதிர்வைக் குறிக்கும். மேலும், ஒரு சில செடிகளைப் பிடுங்கிக் காய்களை உரித்துப் பார்த்தால், ஓட்டின் உட்புறம் பழுப்புக் கலந்த கறுப்பு நிறத்தில் இருக்கும்.
செடிகளைப் பிடுங்கும் அளவில் நிலத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும். நீர்ப் பற்றாக்குறை இருந்தால், நாட்டுக் கலப்பை மூலம் செடிகளைப் பிடுங்கலாம்.
பிடுங்கிய செடிகளைக் குவித்து வைக்கக் கூடாது. ஏனெனில், ஈரமாக இருந்தால் கொத்து இரகங்கள் முளைக்கத் தொடங்கி விடும். கருவி மூலம் செடிகளில் இருந்து காய்களைப் பிரிக்கலாம்.
காய்களை 4-5 நாட்கள் வரையில் வெய்யிலில் உலர்த்த வேண்டும். கடும் வெய்யிலில் நேரடியாக உலர்த்தக் கூடாது. காய்ந்த பிறகு, சாக்குகளில் கட்டி மணற் பரப்பில் அடுக்கி வைக்கலாம். காய்ந்த காய்களில் ஈரப்பதம் தாக்கக் கூடாது.
பொ.மகேஸ்வரன், எம்.அருண்ராஜ், முனைவர் பெ.பச்சைமால், வேளாண்மை அறிவியல் நிலையம், தேனி.
சந்தேகமா? கேளுங்கள்!