நிலக்கடலை, அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாகும். இதன் தாயகம், நடுத்தென் அமெரிக்கா. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், நிலக்கடலை அதிகமாக விளைகிறது. இதில் மாங்கனீசு சத்து மிகுந்துள்ளது. உணவிலுள்ள கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்க இது உதவுகிறது.
நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்னும் நோயெதிர்ப்புப் பொருள், நம்மை நோயிலிருந்து காப்பதுடன், இளமையாக இருக்க வைக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 என்னும் சத்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
இப்படி, நல்ல உணவுப் பொருளைத் தரும் நிலக்கடலைப் பயிரை, பல்வேறு நோய்கள் தாக்கினால் மகசூல் குறையும். இவற்றில், பூசணங்கள் மற்றும் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் தான் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும்.
இலைப்புள்ளி நோய்
இந்தியாவில் நிலக்கடலை விளையும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய் தோன்றுகிறது. மானாவாரி மற்றும் இறவையில் விளையும் பயிரையும் தாக்குகிறது. இலைப்புள்ளி நோய் இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது.
இந்த இரண்டும் வெவ்வேறு அறிகுறிகளை ஒரே இலையில் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும். முதலில் தோன்றுவது முன்பருவ இலைப்புள்ளி நோய். இது விதைத்த 30 நாட்களில் தோன்றும்.
முதலில் இலைகளில் கருநிற வட்டப் புள்ளிகள் சிறிதாகத் தோன்றும். நாளடைவில் இவை விரிவடைந்து 3-8 மி.மீ. விட்டமுள்ள புள்ளிகளாக மாறும். புள்ளிகளைச் சுற்றிப் பளிச்சென மஞ்சள் வளையம் இருக்கும். அடிப்பரப்பு இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பின்பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறி, விதைத்து 40-50 நாட்களில் தோன்றும். புள்ளிகள் சிறிதாக, 1-6 மி.மீ. விட்டத்தில் இருக்கும். புள்ளிகளின் மேற்பரப்பு கரும்பழுப்பு அல்லது கறுப்பாகவும், அடிப்பரப்பு அடர் கறுப்பாகவும் இருக்கும்.
இந்தப் புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் வளையம் இருக்காது. பூக்கும் காலத்தில் தொடங்கி, அறுவடை வரை நோய் தீவிரமாக இருக்கும். நோய் அதிகமாக தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.
துரு நோய்
இந்நோய் செடியின் மேல் பகுதி முழுவதையும் தாக்குகிறது. ஆறு வாரத்தில் இந்நோயின் தாக்கம் தெரியும். பழுப்பு நிறத்தில் சிறிய கொப்புளங்கள் இலைகளின் கீழ்ப்பரப்பில் தோன்றும். மேல்தோல் சிதைந்து, யூரிடோஸ் போர்களை அதிகளவில் வெளிப்படுத்தும்.
இலைக்காம்பு மற்றும் தண்டில் துரு காணப்படும். நோய் தீவிரமானால் கீழ் இலைகள் உலர்ந்து விழுந்து விடும்; விதைகள் சிறிதாகவும் சுருங்கியும் இருக்கும். அதிக ஈரப்பதம், பலத்த மழை மற்றும் குறைந்த வெப்ப நிலையில் இந்நோய் பரவும்.
கட்டுப்படுத்துதல்
நிலக்கடலையைத் தொடர்ந்து பயிரிடக் கூடாது. நோயினால் உதிர்ந்து கிடக்கும் இலைகள் மற்றும் செடிகளின் பாகங்களைச் சேகரித்து எரித்து விட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் வீதம் கலந்து விதைக்க வேண்டும்.
காற்று மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, நோய் அறிகுறி தெரிந்ததும், ஏக்கருக்கு 200 கிராம் கார்பன்டசிம் அல்லது 400 கிராம் குளோரோதலோனில் மருந்தை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தானாக முளைத்த நிலக்கடலைச் செடிகள் மற்றும் களைகளை அகற்ற வேண்டும்.
அழுகல் நோய்
இந்நோய் தொடக்க நிலையில், மண்ணுக்குச் சற்று மேலேயுள்ள தண்டில், செம்பழுப்பு நிறத்தில் காயம் தோன்றும். இலைகளும் கிளைகளும் வீழத் தொடங்கும். இதனால், முழுச் செடியும் இறந்து விடும்.
அழுகும் தண்டு, வெண் நுண்ணுயிர் வளர்ச்சியால் மூடப்பட்டிருக்கும். செடியின் பாதிப்படைந்த பட்டை துண்டாகும். அழுகிய திசுக்களில் அடர் பழுப்பு நிறத்தில் சுவரைப் போல, ஸ்கெலரோட்டிய இருக்கும்.
நாற்றழுகல் நோய்
மண்ணால் பரவும் கொனிடியா தாக்கும் விதைகள் அழுகிப் போகும். விதைகளை, கறுப்பு வித்துகள் மூடியிருக்கும். உள் திசுக்கள் மென்மையாக, நீர்த்துப் போய் இருக்கும்.
வளர்ந்து வரும் இளஞ் செடிகளை நோய்க் கிருமிகள் தாக்கி, காட்டிலிடன்களில் பழுப்பு நிறத்தில் வட்டப் புள்ளிகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறி தண்டுக்கும் பரவும். பாதிக்கப்பட்ட பகுதி மென்மையாக, அழகாக மாறும்.
கட்டுப்படுத்துதல்
எக்டருக்கு 450 கிலோ ஆமணக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். தாவரக் கழிவுகள் மற்றும் நிலத்தில் இதற்கு முன் விளைந்த பயிர்க் கழிவுகளை அகற்றி அழிக்க வேண்டும்.
பருவத்தில் விதைப்பு மற்றும் பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். நோயற்ற செடிகளில் விளைந்த நல்ல விதைகளை விதைக்க வேண்டும். கோடையுழவு செய்ய வேண்டும்.
அ.மகாராணி, உதவிப் பேராசிரியர், இமயம் வேளாண்மைத் தொழில் நுட்பக் கல்லூரி, துறையூர், திருச்சி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!