தேக்கு மரத்தின் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரமுள்ள பகுதியில், ஆண்டுக்கு 750-2,500 மி.மீ. மழையுள்ள பகுதியில் நன்கு வளரும்.
வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், செம்புறை மண், மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரும். மண்கண்டம் குறைந்த நிலம், கடுங் களிமண் நிலம் இதற்கு ஆகாது. சீரான வளர்ச்சிக்கு வெய்யில் முக்கியம். ஏதுவான நிலத்தில், 15 ஆண்டுகளில் 15 மீ. உயரம், 90 செ.மீ. சுற்றளவில் வளர்ந்து விடும்.
வறண்ட மற்றும் மழை மிகுந்த பகுதியிலும் நன்கு வளரும். முழுதாகப் பூக்க 15 ஆண்டுகள் ஆகும். ஜுன்- செப்டம்பரில் பூக்கத் தொடங்கி, மார்ச் ஏப்ரலில் விதைகள் முற்றும். இருபது வயது மரத்தில் பத்து கிலோ விதைகள் கிடைக்கும். நாற்று உற்பத்திக்கு, 15 ஆண்டுக்கு மேலான, பக்கக் கிளை இல்லாத, உயரமான, நோயற்ற மரங்களில் இருந்து விதைகளை எடுக்க வேண்டும்.
விதையுறக்கம் காரணமாக, தேக்கு விதைகளில் முளைப்புத் திறன் குறைவாக இருக்கும். இதை நீக்க, விதை நேர்த்தி அவசியம். விதைகளைச் சாக்கில் கட்டி, சாணக் கரைசலில் இரு நாட்கள் ஊறவிட வேண்டும்.
பிறகு, வெளியே எடுத்து இளம் வெய்யிலில் 12 மணி நேரம் உலர்த்தி, மீண்டும் சாணப்பாலில் ஒருநாள் ஊறவிட்டு வெளியே எடுத்து, வெய்யிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும்.
இப்படி இன்னொரு முறையும் செய்து, 50 சதம் மணல், 25 சதம் செம்மண், 25 சதம் வண்டல் மண் மூலம் அமைக்கப்பட்ட மேட்டுப் பாத்தியில் விதைக்க வேண்டும்.
10மீx1மீx0.3 மீட்டர் பாத்தியில் 2 செ.மீ. இடைவெளியில் 8 கிலோ விதைகளை விதைக்கலாம். தொழுவுரத்தைப் பாத்தியில் கலந்தால், வேர்ப் புழுக்கள் உருவாகி நாற்றுகளைச் சேதமாக்கும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.
விதைத்த பிறகு, மணலாலும் வைக்கோலாலும் மூடி, பூவாளியால், காலை மாலையில் 15 நாட்களுக்கும், பிறகு ஒருநேரம் மட்டும் 30 நாட்களுக்கும் நீரைத் தெளிக்க வேண்டும்.
விதைத்து 10-15 நாட்களில் தொடங்கி 30-35 நாட்கள் வரை விதைகள் முளைக்கும். இந்நிலையில், வைக்கோலை நீக்கி விட வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் கலந்த பஞ்சகவ்யாக் கரைசலை, மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒருமுறை தெளித்தால் நாற்றுகள் நன்கு வளரும்.
நாற்றுகளைத் தாக்கும் கம்பளிப்புழு, வண்டு, வெட்டுக்கிளி, இளஞ்சிவப்புப் புழு, அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சியை, வேம்புச்சாறு, நீம் அசால் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பிறகு, நிலத்தை உழுது 2 மீட்டர் இடைவெளியில் ஒன்றரை அடி குழிகளில் தொழுவுரம், வண்டல் மற்றும் செம்மண்ணை நிரப்பி, 8-10 மாத நாற்றுகளை, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நடலாம்.
ஒரு ஏக்கரில் ஆயிரம் கன்றுகளை நடலாம். போதுமான ஈரம் இருக்க வேண்டும். களை இருக்கக் கூடாது. பாத்தியில் 6 இலைகள் உள்ள நாற்றுகளை, நெகிழிப் பைகளுக்கு மாற்றி, 60 -75 செ.மீ உயரம் வரை வளர்த்தும் நடலாம்.
தேக்கு மரம் நேராக, கனமாக, பக்கக் கிளையின்றி இருந்தால் தான் நல்ல விலை கிடைக்கும். ஆகவே, பக்கக் கிளைகளைக் கவனமாக அகற்ற வேண்டும். மேலும், நட்ட ஐந்தாம் ஆண்டில் மூலைவிட்ட வரிசையில், ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள, பாதி மரங்களை அகற்ற வேண்டும். ஆயிரம் மரங்கள் இருந்தால் 500 மரங்களை நீக்க வேண்டும். இவ்வகையில், ஒரு வருமானம் கிடைக்கும்.
அடுத்து, 12ஆம் ஆண்டில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள 250 மரங்களை அகற்ற வேண்டும். இவ்வகையில், ஒரு வருமானம் கிடைக்கும். மீதமுள்ள 250 மரங்களை 30 ஆண்டுகள் வளர்த்தால் பெரியளவில் வருமானம் கிடைக்கும்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!