செய்தி வெளியான இதழ்: 2018 மே.
கற்பக விருட்சமான தென்னை, இயற்கை நமக்கு அளித்துள்ள பயனுள்ள மரம். 2015-16 புள்ளி விவரப்படி, உலகின் மொத்த தென்னை சாகுபடிப் பரப்பு 121.96 இலட்சம் எக்டர். இந்தியாவில் 20.88 இலட்சம் எக்டரில் சாகுபடியாகிறது. இது, உலகளவில் மூன்றாம் இடமாகும். 36.10 இலட்சம் எக்டரில் தென்னையைச் சாகுபடி செய்துள்ள இந்தோனேசியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் இந்தியா, 22,167 மில்லியன் தேங்காய்களை விளைவித்து உற்பத்தியில் முதலிடத்திலும், எக்டருக்கு 10,614 காய்களை விளைவித்து உற்பத்தித் திறனில் முதலிடத்திலும் உள்ளது. உலகச் சராசரி உற்பத்தித் திறன், எக்டருக்கு 10,345 காய்களாகும். தமிழகத்தில் சுமார் 4.60 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. எக்டருக்கு 13,423 காய்கள் கிடைக்கின்றன.
இத்தகைய தென்னை, பல்வேறு பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாவதால், மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் புதுவகைப் பூச்சியின் தாக்குதல் பரவலாக உள்ளது.
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயானது முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவின் பெலிஸ் நாட்டில் கண்டறியப்பட்டது. ஆனால், இதன் தீவிரத் தாக்குதல், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு தென்னையில் காணப்பட்டது.
தமிழகத்தில் முதன் முறையாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல், பொள்ளாச்சிப் பகுதியில் 2016-ஆம் ஆண்டு இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி இருக்கும் பகுதிகளில் ஒருசில இடங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் தென்படுகிறது.
வாழ்க்கைச் சுழற்சி
இந்த வெள்ளை ஈக்கள், வட்ட அல்லது சுருள் வடிவில் 0.3 மி.மீ. அளவுள்ள மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடியில் தனித்தனியாக இடுகின்றன. இவை மெழுகுப் பொருளால் இணைக்கப்பட்டு அரை வட்ட வடிவில் இருக்கும்.
முட்டையிலிருந்து வெளிவரும் முதல்நிலைக் குஞ்சுகள் கால்களுடன் நகரும். மற்ற நிலைக் குஞ்சுகளுக்கு நகரும் தன்மை இல்லை. 2.5 மி.மீ. நீளமுள்ள இவை, மற்ற வெள்ளை ஈக்களை விட அளவில் சற்றுப் பெரியவை. இறக்கைகளில் உள்ள ஒழுங்கற்ற இளம் பழுப்பு நிறப்பட்டை இந்த ஈக்களின் முக்கிய அடையாளம் ஆகும்.
தென்னை சேத அறிகுறி
இலைகளின் சாற்றை உறிஞ்சி வளரும் குஞ்சுகள், 30 நாட்களில் முழுதாக வளர்ந்த ஈக்களாக மாறி, காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலைகளின் அடியில் இருக்கும்.
இந்த ஈக்கள் வெளியேற்றும் பசை போன்ற கழிவு, கீழேயுள்ள இலைகளில் படர்ந்து கேப்னோடியம் என்னும் கரும் பூசணம் வளர ஏதுவாகிறது. இப்படி, மேற்புறம் கறுப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையும்.
தாக்கும் பிற மரப் பயிர்கள்
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் 200-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்குகின்றன. அவற்றுள் மிக முக்கியமானவை மா, பலா, வாழை, கொய்யா, சீதா போன்றவை. தென்னையை மிகவும் கூடுதலாகத் தாக்கும்.
தடுப்பு முறைகள்
மஞ்சள் ஒட்டுப் பொறிகள், நன்கு வளர்ந்த ஈக்களைக் கவரும். எனவே, 3 அடி நீளம், ஓரடி அகலமுள்ள நெகிழித் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளைத் தென்னந் தோப்புகளில் ஏக்கருக்கு 20 இடங்களில், 5-6 அடி உயரத்தில் வைத்துப் பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும். இவற்றின் வளர்ச்சியைத் தடுக்க, தென்னை ஓலையின் அடியில் நீரை நன்கு பீய்ச்சியடிக்க வேண்டும்.
கிரைசோபர்லா இரை விழுங்கிகள், அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் உள்ள இந்தப் பூச்சிகளை உணவாகக் கொள்ளும். எனவே, தென்னந் தோப்பில் எக்டருக்கு 1,000 வீதம் இவற்றை விட வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வேப்ப எண்ணெய் அல்லது அசாடிராக்டின் 1 சத மருந்து 2 மில்லி வீதம் எடுத்து, தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் நன்கு படும்படி, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
இலைகளின் மேல் படரும் கரும் பூசணத்தைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் வீதம் கலந்த மைதாமாவுக் கரைசலைத் தென்னை ஓலைகளின் மேல் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
இவ்வகை வெள்ளை ஈக்கள் மிகுதியாகப் பரவும் போது, கிரைசோபர்லா இரை விழுங்கிகள், காக்சினெல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே உருவாகத் தொடங்கும்.
பூச்சிக் கொல்லிகளை அதிகமாகத் தெளித்தால், இந்த இயற்கை எதிரிகள் அழிந்து விடும். ஆகவே, பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து, இயற்கை எதிரிகள் வளர்வதற்கான சூழலை மேம்படுத்த வேண்டும்.
எனவே, தென்னை விவசாயிகள் அனைவரும் புதுவகைப் பூச்சியான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் நடமாட்டத்தைக் கவனித்து உரிய தடுப்பு முறைகளை எடுக்க வேண்டும்.
முனைவர் இராஜா.ரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.
சந்தேகமா? கேளுங்கள்!